Published : 05,Nov 2022 10:12 AM
ஆட்டோவில் தவறவிட்ட 1.5 பவுன் தங்க நகையை ஒப்படைத்த ஓட்டுநர் - குவியும் பாராட்டு

ஆட்டோவில் தவறவிட்ட ஒன்றரை பவுன் தங்க நகையை போலீசாரிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
கும்பகோணம் அருகே சோழபுரம் ரகுநாதபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் (61). ஆட்டோ டிரைவரான இவரது ஆட்டோவில் நேற்று முன்தினம் வந்த அப்பகுதியைச் சேர்ந்தவரை சோழபுரம் பஸ் ஸ்டாண்டில் இறக்கி விட்டுள்ளார். இதையடுத்து ஆட்டோவில் பயணிகள் அமரும் சீட் பகுதியை துடைத்துள்ளார்.
அப்போது அங்கு தங்க நகை இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர் கண்டெடுத்த தங்க நகையை சோழபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷிடம் கிருஷ்ணனிடம் ஒப்படைத்தார். அந்த நகை 13 கிராம் எடை கொண்ட பிரேஸ்லெட் செயின் என்பது தெரியவந்தது.
இதனையடுத்து ஆட்டோவில் பயணம் செய்த குடும்பத்தாருக்கு தகவல் அளித்து அவர்களிடம் போலீசார் நகையை ஒப்படைத்தனர். நகையை பெற்றுக்கொண்ட பயணி நன்றி கூறினார். பொறுப்புணர்வோடு நடந்து கொண்ட ஆட்டோ டிரைவர் கிருஷ்ணனை பாராட்டிய போலீசார், அவருக்கு பரிசு வழங்கினர்.