Published : 15,Oct 2022 02:19 PM
அரியலூர்: வெளிநாட்டுக்கு ஆட்களை அனுப்பும் விவகாரத்தில் பண மோசடியில் ஈடுபட்ட நபர் கைது

அரியலூரில் வெளிநாடு செல்வதற்கு 9 பேரிடம் பணத்தை பெற்றுக் கொண்டு மோசடி செய்தவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே இடையக்குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் காமராஜ். இவர் வெளிநாடுகளில் வேலை செய்வதற்கு ஆட்களை அனுப்பும் பணி செய்து வருகிறார். கடலூர் மாவட்டம் பெண்ணாடம் பகுதியைச் சேர்ந்த சையத் காதர் என்பவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் சிங்கப்பூர் நிறுவனத்திற்கு ஏஜெண்டாக பணிபுரிந்து வருகிறார். இவர்கள் வெளிநாடு செல்ல வேண்டிய நபர்களை அணுகி வெளிநாட்டிற்கு அனுப்ப பணம் வசூல் செய்து கொண்டு அனுப்பி வருகின்றனர்.
இதையடுத்து காமராஜ் என்பவர் வெளிநாட்டிற்கு ஆள் அனுப்புவதாக ஒன்பது நபர்களிடம் ரூ.3.60 லட்சத்தை வசூல் செய்து சையத் காதரிடம் கொடுத்ததாகவும், அதில் சையத் காதர் மீண்டும் ரூ.1.75 லட்சத்தை காமராஜிடம் திருப்பி கொடுத்து நிலையில், மீதம் உள்ள பணத்தை சையத் காதர் தராததாக சொல்லப்படுகிறது. இதனால் காமராஜர் சையத் காதரை நேரில் சந்தித்து கேட்டதற்கு தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார் என்று தெரிகிறது.
இதனை அடுத்து காமராஜ் ஆண்டிமடம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் சையத் காதர் மீது பண மோசடி குறித்து வழக்குப்பதிந்துள்ளார். அதன் அடிப்படையில் ஆண்டிமடம் காவல் ஆய்வாளர் முத்துக்குமார் விசாரணை செய்து சையத் காதரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.