Published : 10,Oct 2022 12:22 PM

12 கோடி to 2000 கோடி... 'பாக்ஸ் ஆபிஸ் கிங்'ஆக ராஜமெளலி வளர்ந்த கதை - பிறந்தநாள் ஸ்பெஷல்

From-Rs-12-crore-to-Rs-2000-crore-how-SS-Rajamouli-became-box-office-Baahubali-Birthday-special

இந்திய சினிமாவில் மாபெரும் வசூல் சாதனை படைத்த திரைப்படங்களைக் கொடுத்திருப்பவரும், ஆஸ்கர் விருதுகளுக்கு போட்டிபோடும் அளவுக்கு இந்திய சினிமாவின் தரத்தை உயர்த்தியிருப்பவருமான இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமெளலி இன்று (அக்டோபர் 10) தன்னுடைய 49வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். கடந்த 20 ஆண்டுகளில் 12 திரைப்படங்களை இதுவரை எடுத்துள்ளார். எல்லாமே பாக்ஸ் ஆபீஸில் பட்டையைக் கிளப்பியவை.

ஸ்டூடன்ட் நம்பர் 1

2001ஆம் ஆண்டில் என்.டி.ராமராவின் பேரன் ஜூனியர் என்.டி.ஆர் கதாநாயகனாக நடித்த 'ஸ்டூடண்ட் நம்பர் 1' திரைப்படத்தின் மூலம் சினிமா இயக்குநராக அறிமுகமானார் ராஜமெளலி. அவரின் குருவான ராகவேந்திர ராவ், இப்படத்திற்கு திரைக்கதை எழுதினார். பாக்ஸ் ஆபீஸில் 12 கோடி ரூபாய் வசூல். ஹீரோ ஜூனியர் என்.டி.ஆருக்கு ஏகோபித்த வெற்றி. தெலுங்கு சினிமாவில் தன் இடத்தை உறுதி செய்தார் ராஜமௌலி. அடுத்த ஆண்டில் இந்தப் படம் தமிழில் அதே தலைப்பில் ரீமேக் செய்யப்பட்டது. அதில்தான் சத்யராஜின் மகன் சிபிராஜ் நடிகராகவும் கதாநாயகனாகவும் அறிமுகமானார்.

image

சிம்மாஹாத்ரி

2003இல் மீண்டும் ஜூனியர் என்.டி.ஆரை வைத்து 'சிம்மாஹாத்ரி' படத்தை இயக்கினார் ராஜமெளலி. அந்தப் படமும் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. இது அந்த சமயத்தில் அதிக வசூல் செய்த தெலுங்குப் படமாக அமைந்தது. அதற்கு பிறகு அவருக்கு கிடைத்தது எல்லாமே வெற்றிதான். சிம்மாத்திரி படம்தான் விஜயகாந்த் நடிப்பில் 'கஜேந்திரா' என்று தமிழில் மீண்டும் எடுக்கப்பட்டது.

சை

அடுத்ததாக நிதின், ஜெனிலியா நடிப்பில் 2004ஆம் ஆண்டு ‘சை’ என்ற படம் வெளியானது. இந்தப் படமும் வெற்றிப்படமாக அமைந்தது. ரக்பி விளையாட்டை மையமாகக் கொண்டது. இந்திய சினிமாவில் யாரும் தொடாத களம் என்பதால் பெரிதும் கவனம் பெற்ற இந்தப் படம் ஓராண்டு காலம் திரையரங்குகளில் ஓடியது.

image

சத்ரபதி

2005இல் பிரபாஸ் நாயகனாக நடித்த 'சத்ரபதி' என்னும் ஆக்‌ஷன் படத்தை இயக்கினார் ராஜமெளலி. இந்தப் படமும் மிகப் பெரிய வெற்றிபெற்றது. ரூ.10 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.21 கோடி வசூலித்தது. ‘பாகுபலி’ படத்திற்குப் பிறகு பிரபாஸ் பிரபலமானதைத் தொடர்ந்து சத்ரபதி படம் தமிழில் ‘சந்திரமவுலி’ என்ற பெயரில் டப் செய்து வெளியிடப்பட்டது.

விக்ரமார்குடு

2006இல் ரவிதேஜா - அனுஷ்காவை வைத்து ராஜமெளலி இயக்கிய 'விக்ரமார்குடு' படம் அனைத்துத் தரப்பு ரசிகர்களையும் ஈர்த்து வெற்றி பெற்றது. அந்தப் படமும் தமிழில் கார்த்தி, தமன்னா நடிப்பில் ‘சிறுத்தை’ என்ற பெயரில் ரீமேக்கானது. இதன் இந்தி ரீமேக்கை பிரபுதேவா இயக்க அக்‌ஷய் குமார் நாயகனாக நடித்திருந்தார். கன்னட ரீமேக்கில் சுதீப் நடித்தார். ராஜமெளலியின் கதை அனைத்து மொழிகளிலும் பெரும் வரவேற்பைப் பெற்றது.

image

யமதொங்கா

2007இல் வெளியான 'யமதொங்கா' படம் மூலமாக ஜூனியர் என்.டி.ஆருடன் மூன்றாவது முறையாக கைகோர்த்தார் ராஜமெளலி. ஃபேன்டஸி படமான இது பிளாக்பஸ்டர் வெற்றியையும் விமர்சகர்களின் பாராட்டையும் பெற்றது. ராஜமெளலி பிரமாண்ட இயக்குனர் என்பதற்கான அஸ்திரவாரத்தை அமைத்துக் கொடுத்தப் படம்தான் இது.

மகதீரா

2009இல் சிரஞ்சீவியின் மகன் ராம்சரண் தேஜா - காஜல் அகர்வாலை வைத்து ராஜமெளலி இயக்கிய 'மகதீரா' என்ற ஃபேண்டஸி ஆக்ஷன் படம், தெலுங்கில் அந்த ஆண்டின் மிகப்பெரிய வசூலை (ரூ.150 கோடி) குவித்தப் படமாக அமைந்தது. தமிழில் ‘மாவீரன்’ என்ற பெயரிலும் வெளியான இந்தப் படம் பிரமாண்ட வெற்றியைப் பெற்றது. தனது தந்தை விஜயேந்திர பிரசாத் எழுதிய கதையிலிருந்து உருவான இந்தப் படத்துக்காக 15 வருடங்கள் காத்திருந்ததாக ராஜமௌலி தெரிவித்திருந்தார்.

மரியாதை ராமண்ணா

மகதீரா படத்திற்கு பிறகு ராஜமெளலி என்ன படத்தை இயக்குவார் என அனைவரும் எதிர்பார்த்து கொண்டிருந்த சமயத்தில் நகைச்சுவை நடிகராக வலம் வந்த சுனிலை கதாநாயகனாக வைத்து ‘மரியாதை ராமண்ணா’ என்ற குறைந்த பட்ஜெட் படத்தை இயக்கினார். 2010இல் வெளியான அந்தப்படமும் பெரிய வெற்றி. சந்தானம் நடிப்பில் வெளியான ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ இந்தப் படத்தின் ரீமேக்தான்.

நான் ஈ

2012ஆம் ஆண்டு ராஜமெளலி இயக்கத்தில் வெளியான 'நான் ஈ' படம் நேரடியாக தமிழிலும் தெலுங்கிலும் உருவானதாகும். தெலுங்கில் 'ஈகா'என்று அந்தப் படத்துக்குத் தலைப்பிடப்பட்டது. ஈயை வைத்து கிராபிக்ஸ் மூலம் பிரமாண்டமாக இயக்கியிருந்த திரைப்படம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்தது. வசூலை வாரிகுவித்து இந்தியா முழுவதும் அனைத்து திரையுலக விமர்சகர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்றது. பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் இந்தப்படம் திரையிடப்பட்டது. தான் இயக்கிய படங்களில் தனக்கு மிகவும் பிடித்த படம் இதுதான் என்று ராஜமெளலி ஒருமுறை சொன்னார்.

image

பாகுபலி

2015இல் வெளியான ‘பாகுபலி’ படத்தைப் பற்றிச் சொல்லவே தேவையில்லை. அதன் வெற்றி உலகமறிந்த ஒன்று. பிரம்மாண்டத்தின் உச்சமாக இந்த படம் பார்க்கப்படுகிறது. 'பாகுபலி 1' மற்றும் 'பாகுபலி 2' ஆகிய இரண்டு பாகங்களின் மொத்த பட்ஜெட் தொகை 450 கோடி ரூபாய். முதல் பாகம் வெளியாகி இரண்டு ஆண்டுகள் கழித்து இரண்டாம் பாகம் வெளியானது. சர்வதேச அளவில் வசூல் சாதனைகளை நிகழ்த்தியது 'பாகுபலி'. உலகம் முழுவதும் ரூ.2 ஆயிரம் கோடி வரை இந்தப் படம் வசூல் செய்திருப்பதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. இதுவரை ராஜமெளலி எடுத்த படங்களில் அதிக வருவாய் ஈட்டியது 'பாகுபலி' திரைப்படம்தான். அதில் கதாநாயகனாக நடித்த பிரபாஸின் புகழ் மிகவும் உச்சத்திற்கு போனது.  பாகுபலி படத்தின் மூலம் இந்திய அளவில் மிகப்பெரிய கதாநாயகன் அந்தஸ்தை பெற்றார் பிரபாஸ். பாகுபலி படங்களின் வெற்றி ஏற்படுத்திய தாக்கமாக, கலைத் துறையில் இயக்கினர் ராஜமெளலி ஆற்றிய பங்களிப்பிற்காக 2016இல் அவருக்கு பத்மஸ்ரீ விருது அவருக்கு வழங்கப்பட்டது.

image

ஆர்.ஆர்.ஆர்.

ராஜமெளலி இயக்கத்தில் இந்த ஆண்டு வெளியான 'ஆர்.ஆர்.ஆர்' திரைப்படம் உலகம் முழுவதும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இப்படத்தில், ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட், அஜய்தேவ் கன், சமுத்திரகனி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.  மேலும் பாக்ஸ் ஆபிஸிலும் ரூ.1,200 கோடிக்கும் மேல் வசூலித்து கெத்துக் காட்டியது. சினிமா துறையில் உலக அளவில் உயரிய விருதாக ஆஸ்கார் விருதுக்கான  போட்டியில் 'ஆர்ஆர்ஆர்' படமும் இருக்கிறது. சிறந்த திரைப்படம், சிறந்த இயக்கம், சிறந்த நடிகர்கள், சிறந்த துணை நடிகர், சிறந்த துணை நடிகை, சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த கதை, சிறந்த பாடல், சிறந்த இசை உள்ளிட்ட 9 பிரிவுகளில் 'ஆர்ஆர்ஆர்' படம் போட்டியிடுகிறது.

இதுவரை 12 படங்களை இயக்கியிருக்கிறார் ராஜமெளலி. அனைத்துமே வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வெற்றிப் பெற்ற படங்கள். இந்த சாதனையை இந்திய சினிமாவில் இதுவரை யாரும் நிகழ்த்தியதில்லை. இந்தச் சாதனையை முறியடிக்க இன்னும் பல வருடங்கள்கூட ஆகலாம்.

இதையும் படிக்க: 'இந்து தர்மத்தை பின்பற்றும் தீவிர இந்து நான்' - போட்டுடைத்த இயக்குநர் ராஜமௌலி

சற்று முன்எடிட்டர் சாய்ஸ்