Published : 09,Sep 2022 10:11 PM
பட்டப்பகலில் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் வெட்டி கொலை.! அரியலூரில் பரபரப்பு சம்பவம்

அரியலூரில் பட்டப்பகலில் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் ஒரு பெண் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம் நாச்சியார் கோவிலை சேர்ந்தவர் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சாமிநாதன். இந்நிலையில் கடந்த 7 ஆம் தேதி அரியலூர் மாவட்டம் அணைக்குடம் கிராமத்தில் நடைபெற்ற தங்கையின் திருமணத்திற்கு சாமிநாதன் வந்திருக்கிறார். அப்போது 6 பேர் கொண்ட கும்பல் அவரை வெட்டி கொலை செய்துள்ளது.
இந்த கொலை வழக்கில் நடத்தப்பட்ட விசாரணையில், முக்கிய குற்றவாளியாக நாச்சியார் கோவிலை சேர்ந்த இளையராஜா என்பவர் முன்விரோதம் காரணமாக சாமிநாதனை கொலை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து 13 பேர் மீது வழக்கு தொடர்ந்த போலீசார் விசாரித்து வந்த நிலையில், இன்று 6 பேர் திருவையாறு நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.
மேலும் இளையராஜாவின் மனைவி ரெஜீனா, உறவினர்கள் செல்வகுமார், நவீன்குமார் மற்றும் செல்வம் ஆகிய 4 பேரை தா.பழூர் போலீசார் கைது செய்து அரியலூரில் உள்ள மாவட்ட முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
தொடர்ந்து வழக்கின் முக்கிய குற்றவாளியான இளையராஜா உள்ளிட்ட 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.