Published : 08,Sep 2022 05:30 PM
புதுக்கோட்டை: தக்காளியை திருமண பரிசாக வழங்கி ஆச்சர்யப்படுத்திய நண்பர்கள்..!

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் மணமக்களுக்கு அவரது நண்பர்கள் தக்காளியை பரிசாக வழங்கி நிகழ்வு வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மணிகண்டன் - யோகேஸ்வரி ஆகியோரின் திருமணம் இன்று நடைபெற்றது. மணமக்களுக்கு மணமகனின் நண்பர்கள் தக்காளி பைகளை பரிசாக வழங்கி ஆச்சரியப்படுத்தினர்.
தமிழ்நாட்டில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக பரவலாக மழை பெய்து வருகிறது. மேலும் அருகிலுள்ள மாநிலங்களிலும் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஏற்றுமதி மற்றும் இறக்குமதி என தக்காளி வரத்து குறைந்து மாநிலம் முழுவதும் இருக்கும் சந்தைகள் மற்றும் கடைகளில் தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
இதனால் கிலோ 10ரூபாய்க்கு விற்ற தக்காளி விலை தற்போது 55 ரூபாய்க்கும் மேல் விற்பனையாகி வருகிறது. மற்றும் ’தக்காளி இல்லாமல் சமைப்பது எப்படி?’என கூகுளில் தேடுவது போன்ற புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
இந்நிலையில் தக்காளி விலை உயர்வை உணர்த்தும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தி மணமக்களுக்கு திருமண வாழ்த்து தெரிவித்துள்ளனர் மணமகனின் நண்பர்கள். மேலும் திருமண விழாவில் மணமக்களுக்கு தக்காளியை பரிசாக வழங்கிய நிகழ்வு காண்போருக்கு நகைப்பை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.