Published : 05,Sep 2022 02:07 PM

காணும் இடமெல்லாம் கோலங்கள்.. களைகட்டிய ஓணம் பண்டிகை - விழாக்கோலம் பூண்டது கேரளா

onam-festival-2022-celebration-in-kerala

திருவனந்தபுரத்தில் அமைந்திருக்கும் ஆசியாவிலேயே மிகப்பெரிய வணிக வளாகத்தில் 2000 மாணவ மாணவிகள் 3 மணி நேரத்தில் 392 அத்தப்பூ கோலங்களை உருவாக்கி கின்னஸ் சாதனைக்காக முயற்சி செய்து அசத்திள்ளனர்.

கேரளாவில் ஆண்டுதோறும் ஆவணி மாதம் திருவோணம் நட்சத்திரம் அன்று ஓணம் பண்டிகை மிக சிறப்பாக கொண்டாடப்படும். ஜாதி, மதங்கள் கடந்து நாட்டின் அனைத்து மக்களும் தங்கள் வசதிக்கேற்ப கொண்டாட கூடிய பண்டிகை இது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக ஓணம் பண்டிகை பொதுவெளிகளில் சிறப்பாக கொண்டாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டு இருந்தது. இந்த ஆண்டு மிகச் சிறப்பாக ஒரு வாரத்திற்கு முன்னதாகவே பள்ளி, கல்லூரிகளில் விடுமுறை அளித்து கேரள அரசு ஓணம் கொண்டாட்டத்தை தொடங்கி இருக்கிறது.

image

இந்நிலையில் மாநில தலைநகரமான திருவனந்தபுரத்தில் கல்லூரிகள், தொழில் செய்யும் இடங்கள், பெரிய மால்கள் அனைத்திலும் அத்தப்பூ கோலங்கள் வரையப்பட்டு அழகழகாக காட்சியளிக்கின்றன. குறிப்பாக திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள ஆசியாவின் மிகப்பெரிய மால் எனும் லூலூ மாலில், ஆசியாவிலேயே அதிக (14,000) மாணவ, மாணவிகளை கொண்ட செயிண்ட் மேரீஸ் பள்ளியில் இருந்து மாணவ மாணவியர் குழுக்களும் இணைந்து மால் வளாகத்தில் குறைந்த நேரத்தில் அதிக எண்ணிக்கையில் அத்தப்பூ கோலங்களை உருவாக்கும் கின்னஸ் சாதனைக்கான முயற்சி நடைபெற்றது. மூன்று மணி நேரத்தில் 2000 மாணவ மாணவிகள் இணைந்து மொத்தம் 392 அத்தப்பூ கோலங்களை உருவாக்கி அசத்தியுள்ளனர். இது அங்கிருந்த அனைத்து மக்களின் கவனத்தையும் ஈர்த்தது. வந்திருந்த வெளிநாட்டினரும் மிகவும் ரசித்து பார்த்துச் சென்றனர்.

மாபெரும் எண்ணிக்கையில் அத்தப்பூ கோலங்கள் உருவாக்கும் சாதனை முயற்சியில் கலந்துகொண்ட மாணவ மாணவிகளை ஒருங்கிணைத்த ஆசிரியர்களில் ஒருவரான பிந்து, அத்தப்பூ கோலம் குறித்து கூறும்போது, ''கேரளா மாநிலத்தில் கொண்டாடப்படக்கூடிய ஒரு தேசிய பண்டிகை ஓணம். பல வகையான வண்ண பூக்களை ஒரே களத்தில் இணைப்பதுதான் அத்தப்பூ கோலம். அரளி, ரோஜா, செவ்வந்தி, செவ்வந்தியில் பல வகைகள் உண்டு.  வெள்ளை, மஞ்சள், சிவப்பு என வண்ண பூக்களை கொண்டு இந்த அத்தப்பூ தயார் செய்கிறோம். மாவலி மன்னரின் விருப்பத்துக்குரியது தும்பை பூ.  முன்பு நாட்டில் அதிகம் கிடைத்தது. ஆனால் இப்போது குறைவாக விளைகிறது. இருந்தாலும் நாங்கள் அதனை பயன்படுத்துகிறோம். இதில் பயன்படுத்தக்கூடிய பூக்கள் பெரும்பாலும் கிராமப்புறங்களில் விளையும். நகர்ப்புறங்களில் விளைச்சல் குறைவு தான். செவ்வந்திகள் வெள்ளை மஞ்சள் சிவப்பு கலர்களில் கிடைக்கிறது. அதனை அப்படியே பயன்படுத்துகிறோம். இப்படி ஓணம் பண்டிகைக்காக பல நிறத்தில், பல தரத்தில், பல மணத்தில் உள்ள பூக்களை ஒருங்கிணைத்து பயன்படுத்தி விழாவை கொண்டாடுகிறோம்.

image

மிகப்பெரிய வணிக வளாகம் என்பதால் காணும் இடங்களில் எல்லாம் மாணவ, மாணவிகள் 5 பேர் கொண்ட குழுக்களாக ஆங்காங்கே அமர்ந்து இருந்து அத்தப்பூ கோலங்களை உருவாக்கியிருந்தனர். தரைத்தளம் மற்றும் வணிக வளாகத்தின் முதல் தளம் என என நடக்க பாதை ஒதுக்கி மற்ற இடங்கள்  எல்லாம் வண்ண வண்ண பூக்கள் ஒன்று சேர்ந்து ஒவ்வொரு படைப்புகளும் ஒரே மாதிரியாக இல்லாமல் விதவிதமான கதைகளை சொல்லின. இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளி மாணவிகள் இந்த மாபெரும் சாதனை முயற்சியில் கலந்து கொண்டனர்.

இந்த ஓணம் பண்டிகை கொண்டாட்டம் குறித்து சமூக அறிவியல் ஆசிரியர் சங்கீதா கூறும்போது, ''இந்து, முஸ்லிம், கிறிஸ்துவம் என்று இல்லாமல் நாட்டிலுள்ள ஒவ்வொரு மலையாளியும் கொண்டாடும் பண்டிகை ஓணம். பல தரத்தில் உள்ள சிறிய பெரிய அளவிலான பல்வேறு பூக்கள் அவை பல வண்ணங்களை கொண்டதாக இருக்கும். கேரளாவில் உள்ள மலையாளிகள் உலகத்தில் எங்கு வாழ்ந்தாலும் அங்கு இந்த ஓணம் பண்டிகையை கொண்டாடுவார்கள். உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும் ஓணம் பண்டிகை யின் பத்து நாட்களிலும் அத்தப்பூ கோலமிட்டு ஓணம் சந்தியா கொண்டாடுவது வழக்கம். கொரோனா காரணமாக 2 ஆண்டுகள் கொண்டாடவில்லை. இந்தியாவின் இயற்கை சூழலை தாங்கிப் பிடிக்கும் மாநிலம் கேரளா. அதனை பிரதிபலிக்கும் வகையில் ஒவ்வொரு  கோலங்களும் ஒவ்வொரு இயற்கை சார்ந்த செய்தியை சொல்லும்படி உருவாக்கப்பட்டு இருக்கும். இங்கு வரையப்பட்டுள்ள ஒவ்வொரு கோளமும் ஒன்றிலிருந்து ஒன்று வித்தியாசப்பட்டு இருக்கும்'' என தெரிவித்தார்.

image

வணிக வளாகத்தின் தரைத்தளம் முதல் தளம் இரண்டிலும் அத்தபூ கோலங்களின் ஆக்கிரமிப்பு தான் இருந்தது. வணிக உலகத்தின் இரண்டாவது மாடியில் இருந்து தரைத்தளத்தில்  வரையப்பட்ட பூக்கோலங்களை பார்ப்பதற்காக ஏராளமான கூடியிருந்து பார்த்து சென்றனர். மிகப் பிரம்மாண்டமான உட்கட்டமைப்பு கொண்ட வளாகத்தின் பள்ளி மாணவ, மாணவிகளால் உருவாக்கப்பட்ட இந்த அத்தப்பூ களங்கள், உட்கட்டமைப்பில் பிரம்மாண்டத்தை கொண்ட வணிக வளாகத்திற்கு மேலும் அழகு சேர்த்தது என்றால் மிகையல்ல. தரையெல்லாம் பூக்கள் அழகுற கூடி ஒவ்வொரு கோலத்திலும் ஒரு கதை சொல்லியது.

அழகாகவும் மிகவும் அருமையாகவும் செதுக்கப்பட்ட இந்த அத்தப்பூ கோலத்திற்கான சாதனை முயற்சியை ஒருங்கிணைத்த வணிக வளாகத்தின் மேலாளர் ஜோய்.  சதானந்தன் கூறும்போது, ''கொரோனா காரணமாக இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு பிரம்மாண்டமாக ஓணம் பண்டிகை இந்த ஆண்டு கொண்டாடப்படுகிறது. வருங்கால தலைமுறை குழந்தைகள், பண்டிகையை அதன் வரலாற்றை தெரிந்து கொண்டாட வேன்டும் என்பதற்காக மாபெரும் எண்ணிக்கையில் அத்தப்பூ கோலங்கள் நடத்த திட்டமிட்டோம். ஆறுபடை ஆசியாவிலேயே அதிகமாக நினைவுகள் படிக்கும் சேவியர் பள்ளியில் செட் சேகர் பள்ளியில் இருந்து மாணவிகளைக் கொண்டு இந்த சாதனை முயற்சியை தொடங்கி இருக்கிறோம் மேலும் ஒரே இடத்தில் இரண்டு மணி நேரத்தில் மாபெரும் எண்ணிக்கையில் இந்த அத்தப்பூ கோலமிடும் முயற்சி செய்யப்பட்டதால் இதனை கின்னஸ் சாதனைக்கான முயற்சியில் சேர்க்க கின்னஸ் அதிகாரிகளை தொடர்பு கொண்டு கடிதம் கொடுத்துள்ளோம். அவர்களும் வந்து பார்த்துவிட்டு சென்றிருக்கிறார்கள். கிடைத்தால் அது எங்களுக்கு மிகப்பெரிய பெருமை. கின்னஸ் சாதனையாக இல்லாவிட்டாலும் பரவாயில்லை. முயற்சி எங்களுடையது எங்கள் வணிக வளாகத்தில் இப்படி ஒரு நல்ல முயற்சி எடுப்பது எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி'' என்று தெரிவித்தார்.

image

கடவுளின் தேசம் என்று அழைக்கப்படும் கேரள மாநிலத்தில் நாட்டின் அனைத்து மக்களும் கொண்டாடும் ஒரு திருவிழாவான ஓணம் பண்டிகை, கொரோனா தளர்வால் இந்த ஆண்டு முழுமையாக ஒரு கொண்டாட்ட விழாவாக மாறி உள்ளது. அத்தப்பூ வரைவது வழக்கம் என்றாலும் அதனை சாதனையாக்கும் முயற்சியை முன்னெடுத்தது வரவேற்கத்தக்கது என்கின்றனர் மக்கள். மேலும் கடந்த சில வருடங்களாக கனமழை, வெள்ளம் காரணமாக பல்வேறு பாதிப்புகளை சந்தித்து இருந்தாலும், ஒரு பண்டிகை தரும் உற்சாகம்,வருடம் முழுதும் வரும் பல இன்னல்களை எதிர்த்து கடத்திச் செல்லும் என்பதில் நம்பிக்கையுடன் இருக்கிறார்கள் கேரளத்து நம் சொந்தங்கள்...

-நெல்லை நாகராஜன்

இதையும் படிக்க: திருப்பதி தேவஸ்தான சேவை குறைபாடு: சேலம் பக்தருக்கு ரூ.45 லட்சம் நஷ்ட ஈடு வழங்க உத்தரவு

சற்று முன்எடிட்டர் சாய்ஸ்