Published : 27,Aug 2022 10:21 PM

”தீவிர மனஅழுத்தத்தில் இருந்தேன்; ஒரு மாதம் பேட்டையே தொடவில்லை”.. மனம் திறந்த விராட் கோலி!

India-batter-Virat-Kohli-I-came-to-realise-I-was-trying-to-fake-my-intensity-a-bit-recently

கடந்த 10 வருடங்களில் முதல்முறையாக ஒருமாத காலத்திற்கு தனது பேட்டை தொடவில்லை என்றும், தீவிர மனஅழுத்தத்தில் இருந்ததாகவும் விராட் கோலி மனம் திறந்து பேசியுள்ளார்.

ஆசியக் கோப்பை தொடரில் நாளை (28.08.2022) பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தனது 100-வது சர்வதேச டி20 ஆட்டத்தில் விளையாட உள்ளார் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி. சுமார் 42 நாட்கள் ஓய்வுக்குப் பின்னர் அவர் களமிறங்குகிறார். ரன் மிஷின் என்று அழைக்கப்பட்ட இவர், கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் வங்கதேசத்துக்கு எதிரானப் போட்டியில் 70-வது சதம் அடித்தப் பின்னர், கடந்த இரண்டரை வருடங்களுக்கும் மேலாக சதமடிக்கவில்லை. மேலும், அதன்பின்னர் தனது பார்மை இழந்து ரன் அடிக்க தவறி வருவதால் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறார். அவ்வப்போது முன்னாள் மற்றும் இந்நாள் வீரர்கள், விராட் கோலிக்கு ஆதரவு தெரிவித்தாலும், அணியில் இருந்து நீக்கவேண்டும் என்ற எதிர்ப்பு குரல்களும் எழுந்த வண்ணம் இருக்கின்றன. 

இந்நிலையில், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலுக்கு அளித்தப் பேட்டியில் தனது மனநிலை குறித்து முதல்முறையாக மனம் திறந்து பேசியுள்ளார் விராட் கோலி. அதில், “நான் மன அழுத்தத்தில் இருந்ததை ஒப்புக்கொள்ள எனக்குத் தயக்கமில்லை. கடந்த 10 வருடகளில் முதல்முறையாக என்னுடைய பேட்டை ஒரு மாதமாகத் தொடவில்லை. சமீபத்தில் என்னுடைய ஆர்வத்தை கொஞ்சம் போலியாக வெளிப்படுத்துவதாக உணர்ந்தேன். இல்லை, நீ தீவிரமாகத்தான் விளையாடுகிறாய் என எனக்கு நானே நம்பவைக்க முயன்றேன். ஆனால் இயக்கத்தை நிறுத்தும்படி என்னுடைய உடல் கூறியது. ஓய்வெடுத்து இச்சூழலில் இருந்து வெளியே வா என என்னுடைய மூளை சொன்னது. இப்படி உணர்வது இயல்பானது.

image

ஆனால் தயக்கம் இருப்பதால் இதைப் பற்றி நாம் பேசமாட்டோம். மனதளவில் பலவீனமாக நம்மைக் காட்டிக்கொள்ள மாட்டோம். பலமுள்ளவனாக நடிப்பது நம்முடைய பலவீனத்தை ஒப்புக்கொள்வதை விடவும் மோசமானது. மனதளவில் வலிமையானவனாக நான் பார்க்கப்படுகிறேன். ஆனால் எல்லாவற்றுக்கும் ஓர் எல்லை உண்டு. அந்த எல்லையை நாம் அறிய வேண்டும், இல்லாவிட்டால் நிலைமை மிகவும் மோசமாகிவிடும். உண்மையில் இந்தக் காலக்கட்டம் நான் உணர மறுத்த பல பாடங்களை எனக்குக் கற்றுத் தந்தது. உங்கள் தொழிலை விட வாழ்க்கையில் இன்னும் நிறைய இருக்கிறது. நான் எப்பொழுதும் எனது மனம் சொல்வதை பின்பற்றும் ஒரு பையனாக இருந்தேன்.

ஒருபோதும் வேறொருவராக இருக்க நான் விரும்பவில்லை. அதற்காக முயற்சிக்கவும் இல்லை. உண்மையில் எனது உள்நிலையை முழுமையாக நான் உணரவில்லை, பயிற்சி செய்யும்போது உற்சாகமாக இல்லை, அதனால் அந்த சூழலிலிருந்து நான் விலகிச் செல்ல வேண்டியிருந்தது. அப்படிப்பட்ட சூழலில் நீங்கள் ஈடுபடும்போது, உங்களால் எதையும் பார்க்க முடியாது. உங்களை அங்கிருந்து அகற்றும்போதுதான், என்ன நடக்கிறது என்பதை உங்களால் புரிந்துகொள்முடியும். இது ஒரு அற்புதமான இடைவெளி. இவ்வளவு நீண்ட இடைவெளியை நான் பெற்றதில்லை.

image

தற்போது காலையில் நான் ஜிம்மிற்குச் செல்ல உற்சாகமாக எழுந்திருக்கிறேன் என்பதை முதலில் உணர்ந்தேன். பென் ஸ்டோக்ஸ் மற்றும் ட்ரெண்ட் போல்ட்டிற்கு என்ன நடந்தது என்பதை நீங்கள் பார்த்திருக்கிறீர்கள்... மொயின் அலி, டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுப் பெற்றார். இவை அசாதாரணங்கள் அல்ல; இது மிகவும் சாதாரணமான நடைமுறை.

ஓய்வுக்குப் பின் நான் இப்போது உறுதியாக, இலகுவாக என்னை உணர்கிறேன். ஆடுகளத்தில் ஆக்ரோஷத்துடன் செயல்படுவதை அசாதாரணமாக நான் கருதவில்லை. எப்படித் தொடர்ந்து அவ்வாறு இருக்க முடிகிறது என்று வெளியில் மட்டுமல்ல அணியிலும் கேட்பார்கள். ஒரு விஷயம் தான் சொல்வேன், எப்படியாவது என்னுடைய அணி வெற்றி பெற வேண்டும். அதற்காக என்னை உந்திக் கொண்டுதான் விளையாடச் செல்வேன். ஏனெனில் நான் கிரிக்கெட்டை காதலிக்கிறேன். நான் மனதளவில் மிகவும் மோசமாக உணர்கிறேன் என்பதை ஒப்புக்கொள்ள நான் வெட்கப்படவில்லை” இவ்வாறு பல விஷயங்களை மனம் திறந்து பேசியுள்ளார்.

இந்நிலையில் மனம் திறந்து பேசியுள்ள விராட் கோலிக்கு ஆதரவாக இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் துணைக் கேப்டன் கே.எல். ராகுல் ஆதரவாக பேசியுள்ளனர்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்