Published : 31,Jul 2022 09:59 AM
திருட்டு பைக்கில் ஆடுகளை திருட முயற்சி... கையும் களவுமாக பொதுமக்களிடம் சிக்கிய நபர்கள்!

திருவாரூர் அருகே திருட்டு பைக்கில் ஆடு திருடிய இரண்டு நபர்களை பொதுமக்கள் விரட்டி பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
திருவாரூர் அருகே தப்பலாம்புலியூர் கடைவீதியில், கடந்த வாரம் அதே ஊராட்சிக்குட்பட இலங்கைசேரியை சேர்ந்த அன்புதாஸ் என்பவரது இருசக்கர வாகனம் மர்ம நபர்களால் திருடப்பட்டுள்ளது. இதுகுறித்து திருவாரூர் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் நேற்று தப்பலாம்புலியூர் கடைவீதி வழியாக காணாமல் போன இரு சக்கர வாகனத்தில் மர்ம நபர்கள் இரண்டு ஆடுகளை திருடி சென்றுள்ளனர். அப்போது வண்டியின் உரிமையாளர் அன்புதாஸ் தனது வாகனத்தில் ஆடுகள் எடுத்துச் சென்றதை பார்த்து அந்த நபர்களை விரட்டி சென்றுள்ளார்.
அப்போது அதே பகுதியில் உள்ள வேகத்தடையில் நிலை தடுமாறி மர்ம நபர்கள் கீழே விழுந்துள்ளனர். அங்கிருந்த பொதுமக்கள் அனைவரும் சேர்ந்து இரண்டு பேரையும் பிடித்து தாலுகா காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து சென்று பொதுமக்கள் அந்த இரண்டு திருடர்களையும் போலீசாரிடம் ஒப்படைத்தனர். திருட்டு பைக்கில் ஆடுகள் திருட முயற்சித்தோரின் நடவடிக்கை, அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.