Published : 16,Sep 2017 05:03 PM
தமிழக அரசின் முடிவில் தலையிடவில்லை: மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்

அதிமுக தலைமையிலான தமிழக அரசின் எந்த நடவடிகையிலும் மத்திய அரசு தலையிடவில்லை என்று மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
இன்று நடந்த உயர்நீதிமன்ற விழா நிகழ்வில் கலந்து கொண்ட பின்னர் சென்னை மெரினா கடற்கரைக்கு வந்த மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்திற்கு சென்று மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். பிறகு எம்.ஜி.ஆர். நினைவிடத்திலும், அண்ணா நினைவிடத்திலும் மரியாதை செலுத்தினார்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், 'மாநில அரசுகளின் உள் விவகாரங்களில் மத்திய அரசு தலையிடாது. தமிழக அரசு விவகாரங்களிலும் தலையிடுவதில்லை. நீட் தேர்வு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் அது குறித்து கருத்து கூற விரும்பவில்லை. ஜெயலலிதாவுடனான தனிப்பட்ட நட்பின் காரணமாக மட்டுமே மரியாதை செலுத்த வந்தேன். ஜெயலலிதா மரணம் குறித்து தமிழக அரசு நீதி விசாரணை நடத்த உத்தரவிட்டிருப்பதால் அதுகுறித்து கருத்துகூற இயலாது’ என்றார்.