
பக்கத்து வீட்டுக்காரரின் மனைவிக்கு “உன்னை எனக்கு பிடித்திருக்கிறது” என மெசேஜ் அனுப்பிய இளைஞருக்கு அந்த கணவர் உள்ளிட்ட சிலரும் அடித்து துவம்சம் செய்திருக்கும் சம்பவம் பஞ்சாப்பில் நடந்திருக்கிறது.
இவை வழக்கமாக நடப்பவைதானே என கேள்வி எழலாம். ஆனால், அடிவாங்கிய அந்த இளைஞர் மீண்டும் தன்னை தாக்க வருவார்கள் என்று எண்ணி ட்விட்டர் மூலம் பஞ்சாப் போலீசை நாடி தன்னை காப்பாற்றும்படி கேட்டுள்ளார்.
அதில், “நான் ஒருவருக்கு I Like u என மெசேஜ் அனுப்பினேன். அதற்கு அவரது கணவன் என் வீட்டிற்கு வந்து என்னை சரமாரியாக அடித்துவிட்டார். அவரிடம் தொடர்ந்து மன்னிப்பும் கேட்டுவிட்டேன்.
ஆனால் அவர் மீண்டும் வந்து என்ன தாக்குவோரோ என்ற கவலை என்னுள் இருக்கிறது. என்னை காப்பாற்றுங்கள். உங்கள் உதவி எனக்கு தேவை.” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு பஞ்சாப் மாநில போலீசின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இருந்து உடனடியாக பதிலும் கொடுக்கப்பட்டிருக்கிறது.
அந்த பதிவில், “ஒரு பெண்ணுக்கு தேவையில்லாமல் மெசேஜ் செய்வதிலிருந்து நீங்கள் என்ன எதிர்ப்பார்க்கிறீர்கள் என தெரியவில்லை. ஆனால் இதை அறிந்த அப்பெண்ணின் கணவர் உங்களை எங்களிடம் கொண்டு வந்து சேர்த்திருக்க வேண்டும். மாறாக தாக்கியிருக்கக் கூடாது.
நாங்கள் சட்டத்தின்படி இருதரப்பு மீதும் முறையான நடவடிக்கை எடுத்திருப்போம். அருகாமையில் இருக்கும் போலீஸ் ஸ்டேஷனில் புகார் தெரிவியுங்கள்” எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
பஞ்சாப் போலீசின் இந்த பதில் நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. அதன்படி பலரும் தரமான பதில் கொடுக்கப்பட்டிருக்கிறது என்றும், பஞ்சாப் போலீசை இனி சுலபமாக அணுகிவிட முடியும் என்றும் பதிவிட்டுள்ளார்கள்.