Published : 15,Jul 2022 06:03 PM

படைப்பாளிக்கு சுவாரஸ்யமான முயற்சிதான்… ரசிகனுக்கு? - இரவின் நிழல் விமர்சனம்

Iravin-Nizhal-Review

இயக்குநர் பாத்திபன் இயக்கத்தில், ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வரலட்சுமி, ரோபோ சங்கர், ப்ரிகிடா, ப்ரியங்கா ஆகியோர் நடித்திருக்கும் திரைப்படம் இரவின் நிழல். இன்று திரைக்கு வந்திருக்கும் இந்த சினிமா மீதான எதிர்பார்ப்பு கொஞ்சம் அதிகமாகவே இருந்தது. மொத்த சினிமாவும் சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட்டிருக்கிறது என்பதே இந்த எதிர்பார்ப்புக்கு காரணம்.

image

முதலில் சிங்கிள் ஷாட் என்றால் என்ன? கேமராவை ஆன் செய்து மொத்த சினிமாவும் படம் பிடிக்கப்பட்ட பிறகே கட் செய்யப்படும். ஒன்னரை மணி நேர சினிமாவும் அதில் வந்து போகும் கதாபாத்திரங்களும் ஒரு சேர எந்த பிழையும் செய்யாமல் ஒத்துழைத்தால் மட்டுமே இது சாத்தியம். அதனை சாத்தியப்படுத்தியிருக்கிறார்கள் பார்த்திபன் மற்றும் குழுவினர். ஆனால் இது ஒரே டேக்கில் எடுக்கப்படவில்லை. அதாவது முதல் முயற்சியிலேயே இம்முயற்சி கை கொடுக்கவில்லை. மீண்டும் மீண்டும் முயன்று இந்த சிங்கிள் ஷாட் சினிமாவை சாத்தியப்படுத்தியிருக்கிறார் பார்த்திபன்.

இடைவேளை வரை நாம் மேலே விளக்கிய விசயங்களைத்தான் காட்டியிருக்கிறார்கள். இரவின் நிழல் எப்படி படமாக்கப்பட்டது என்பதே இரவின் நிழல் சினிமாவின் முதல் பாதி. உலகம் முழுக்க சிங்கிள் ஷாட்டில் நிறைய சினிமாக்கள் எடுக்கப்பட்டிருக்கின்றன. ஈரானிய இயக்குநர் ஷரம் மோக்ரி இயக்கத்தில் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட பர்ஷிய மொழி சினிமா Fish and Cat. அதே போல 2015 ஆம் ஆண்டு வெளியான ஜெர்மன், ஆங்கில சினிமா விக்டோரியா. செபாஷ்டின் ச்சிப்பெர் இயக்கிய இந்த சினிமாவும் சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட்டதே. இதுபோல நிறைய உதாரணங்களைச் சொல்லலாம். இவற்றை சொல்வதற்கு ஒரு காரணம் உண்டு. அதாவது உலகம் முழுக்க நிறைய சிங்கிள் ஷாட் சினிமாக்கள் எடுக்கப்பட்டிருந்தாலும். அதன் கதை சொல்லும் பாணி பெரும்பாலும் லீனியராகவே இருக்கும். சிங்கிள் ஷாட் படங்களில் நான் லீனியர் குறிப்பாக ப்ளாஸ்பேக் கதைகள் எல்லாம் செல்வதென்பது ரொம்பவே அரிது. அல்லது யாரும் முயன்றதே இல்லை.

image

இரவின் நிழல் இந்த இடத்தில் தான் தனித்துவம் பெருகிறது. கதையின் நாயகன் நந்துவின் வெவ்வேறு வயதில் நடக்கும் சம்பவங்களின் தொகுப்பாக இக்கதை இருக்கிறது. அந்த வெவ்வேறு வயது நந்துவை (பார்த்திபன்) தனது குரல் நரேஷன் மூலம் எப்படி பார்த்திபன் ஒரு கதையாக கோர்த்திருக்கிறார் என்ற வித்யாசமான முயற்சியே இரவின் நிழலின் வலிமை. 63 ஏக்கரில் செட் போட்டு காட்சிகளுக்கு ஏற்ப கலை வேலைப் பாடுகளை மெனக்கெட்டு செய்திருக்கிறார்கள். படத்தில் ஆர்.கே.விஜய்முருகனின் கலை இயக்கம் பிரம்பிக்க வைக்கிறது. கலை வேலை என்றால் செட்ப்ராபர்ட்டிகளை ரெடி செய்வது என பலரும் நினைக்கும் இடத்தில் கதையோடு காட்சிகளை இணைப்பதற்கு ஒரு கலை இயக்குநரின் பங்களிப்பு எவ்வளவு முக்கியம் என இரவின் நிழல் நமக்குச் சொல்கிறது.

ஒளிப்பதிவு இயக்குநர் ஆர்தர் ஏ.வில்சனின் திட்டத்தின் கீழ் ஒரு கிம்பிளை ஒன்றரை மணி நேரம் நூல் பிடித்தார் போல கையாண்டு அசத்தியிருக்கிறார் ஏ.கே.ஆகாஷ். இவ்விருவரை விடவும் முக்கியமான ஒரு நபர் போகஸ் புல்லர். 63 ஏக்கர் செட்டுக்குள் நடக்கும் கதையில் வந்து போகும் கதாபாத்திரங்கள், ப்ராபர்டிகள், குதிரை, நாய் என எதுவும் எங்கும் போகஸ் மிஸ் ஆகாமல் பதிவு செய்து நமக்கு கொடுத்திருக்கிறார்கள் சங்கரன் டிசோசா, ராஜேஷ். ஒளிப்பதிவுக் குழுவினருக்கும் கலை வேலை குழுவினருக்கும் சிறப்பு பாராட்டுகள். கூடவே ரகுமானின் இசையும் பிரமாதம்.

image

சரி படத்தின் கதை? -சின்ன வயது முதல் பல்வேறு கால கட்டத்தில் வெவ்வேறு சூழல் மற்றும் மனிதர்களால் பாதிக்கப்பட்ட நந்து என்கிற ஒரு மனிதனின் வாழ்வில் நடக்கும் சம்பவங்களே கதை. ஆதிகால மேடை நாடகம் முதல் நவீன மேடை நாடகம் வரை ஒரு விசயத்தை கவனிக்கலாம். காட்சிகளுக்கு ஏற்ப மேடையின் பின்னே இருக்கும் திரை மாற்றப்படும். ராமன் வனத்திற்கு செல்லும் போது மரங்கள் வரையப்பட்ட ஒரு திரை இறக்கப்படும். பட்டாபிசேக காட்சி என்றால் அரண்மனை போன்ற ஓவியம் வரையப்பட்ட திரை இறக்கப்படும். இரவின் நிழலில் இதே டெக்னிக்கை கொஞ்சம் டெக்னிக்கலாக செய்திருக்கிறார்கள். அதாவது வித்யாசமாக முயன்று ஒரு சராசரி சினிமாவைத் தந்திருக்கிறார்கள். உங்கள் உழைப்பு, மெனக்கெடல், குழு ஒற்றுமை என அனைத்தும் பாராட்டத்தக்கது. ஆனால் ரிசல்ட் ரசிகர்களை திருப்திபடுத்தியதா என்றால் சந்தேகம் தான். இரவின் நிழல் அனைவரையும் தொடராது.

எப்போதும் வித்தியாசமாக யோசிக்கும் பார்த்திபன் பாராட்டுக்குரியவர். ஆனால், அவர் அப்படி யோசிப்பதால் அவருக்கு மட்டுமே சுவாரஸ்யம். முழுமையான ஒரு படைப்பைத் தந்தால் மட்டுமே ரசிகனுக்கும் சுவாரஸ்யம்.

 - சத்யா சுப்ரமணி

சற்று முன்எடிட்டர் சாய்ஸ்