Published : 14,Jul 2022 05:14 PM
மீண்டும் அணியில் கோலி! இன்றாவது அதிரடி காட்டுவாரா? இங்கிலாந்து தொடரை வெல்லுமா இந்தியா?

இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றியதுபோல், ஒருநாள் தொடரையும் கைப்பற்றும் முனைப்பில் இன்று 2வது ஒருநாள் போட்டியில் இந்தியா களம் காண்கிறது. முன்னதாக நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது. அடுத்து இரு அணிகளும் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் மோதி வருகின்றன. லண்டனின் ஓவல் அரங்கில் நடந்த முதல் ஆட்டத்தில் இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் சாதனை வெற்றி பெற்றது. பும்ரா - ஷமி வேகக் கூட்டணியின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் திணறிய இங்கிலாந்து வெறும் 110 ரன்னில் சுருண்டது.
எளிய இலக்கை துரத்திய ரோகித் - தவான் தொடக்க ஜோடி ஆட்டமிழக்காமல் 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை வசப்படுத்தியது. இந்தியா 1-0 என முன்னிலை வகிக்க, 2வது ஒருநாள் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று மாலை நடைபெற உள்ளது. முதல் போட்டியில் அடைந்த மோசமான தோல்விக்கு பதிலடி கொடுக்கும் முனைப்புடன் இங்கிலாந்தும், தொடர்ச்சியாக 2வது வெற்றியுடன் தொடரை கைப்பற்ற இந்தியாவும் வரிந்துகட்டுவதால், இன்றைய ஆட்டத்தில் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. சென்ற ஆட்டத்தில் காயம் காரணமாக விளையாடாத கோலி, இன்று மீண்டும் ஸ்ரேயாஸ் அய்யருக்கு பதிலாக களமிறங்குகிறார். இங்கிலாந்து அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. முதல் போட்டியில் களமிறங்கிய அதே ஆடும் லெவனுடன் களம் காண்கிறது.
இரு அணிகளின் ஆடும் லெவன்:
இந்தியா: ரோஹித் சர்மா (கேப்டன்), ஷிகர் தவான், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ஆர் ஜடேஜா, முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா, யுஸ்வேந்திர சாஹல் மற்றும் பிரசித் கிருஷ்ணா.
இங்கிலாந்து: ஜேசன் ராய், ஜானி பேர்ஸ்டோவ், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர் (கேப்டன் & விக்கெட் கீப்பர்), லியாம் லிவிங்ஸ்டோன், மொயின் அலி, டேவிட் வில்லி, கிரேக் ஓவர்டன், பிரைடன் கார்ஸ் மற்றும் ரீஸ் டாப்லி.