Published : 15,Sep 2017 11:08 AM

இர்மா பாதிப்பு....முதியோர் இல்லத்தில் மின்சாரம் இல்லாததால் 8 பேர் உயிரிழப்பு

Storm-irma--Elderly-home-there-is-no-power-out-of-the-eight-deaths

ஃபுளோரிடாவில் முதியோர் இல்லத்தில் தங்கி இருந்த 8 பேர் உயிரிழந்துள்ளதை அடுத்து இர்மா புயலால் பலியானவர்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது. இந்த ம‌ரணம் வருத்தம் தெரிவித்துள்ள மா‌காண ஆளுநர் இது தொடர்பாக முழு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

கரீபியன் தீவுகள், அமெரிக்கா, கியூபா ஆகிய நாடுகளை புரட்டிப் போட்ட இர்மா புயலால் லட்சக்கணக்கானோர் வீடுகளை இழந்து தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். தற்போது புயல் ஓய்ந்தாலும் அதனால் ஏற்பட்‌ட பாதிப்பில் இருந்து மீள்வதற்கு பல மாதங்கள் நீடிக்கலாம் என மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

இந்தச் சூழலில் அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தி‌ன் மியாமி நகரில் உள்ள முதியோர் இல்லத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த 8 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் இர்மா புயலின் கோர தாண்டவத்துக்கு அம்மாகாணத்தில் மட்டும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது. இர்மா புயலால் மின்சாரம் துண்டிக்கப்பட்டதே முதியோர் இல்லத்தில் நிகழ்ந்த மரணத்துக்கு காரணம் என தெரியவந்துள்ளது. தவிர அங்குள்ள மேலும் 115 பேருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டிருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இதனால் அவர்க‌ள் அனைவரும் உடனடியாக வேறு இடத்துக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

பு‌யலால் மின்சாரம் துண்டிக்கப்பட்டதே இந்த ‌உயிரிழப்புகளுக்கு காரணம் என மியாமியின் ஹாலிவுட் நகர் காவல்துறை தலைவர் தாமஸ் சான்சேஸ் விளக்கம் அளித்துள்ளார். முதியோர் இல்லத்தில் நிகழ்ந்துள்ள இந்த மரணம் தமக்கு மிகுந்த மன வலியை கொடுத்திருப்பதாக ஃபுளோரிடா மாகாண ஆளுநர் ரிக் ஸ்காட்டும் வருத்தம் தெரிவித்துள்ளார். முதியோர்களின் உயிர்களை காப்பாற்றாமல் மெத்தனமாக இருந்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ள அவர், இது தொடர்பாக விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இருளில் மூழ்கிய லட்சக்கணக்கான வீடுகளுக்கு மீண்டும் மின் இணைப்பு வழங்கும் பணிகளில் ஃபுளோரிடா மாகாண அதிகாரிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். புயலின்போது நிவாரண முகாம்களில் தங்கி இருந்த பலர் தற்போது மீண்டும் அவரவர் வீடுகளுக்கு திரும்பி வருவதால் மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சுமார் 25 சதவீதத்துக்கும் மேலான வீடுகள் இந்த புயலில் சேதமடைந்திருப்ப‌தாக அமெரிக்காவின்‌ மத்திய நெருக்கடி மேலாண்மை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

‌ஏற்கெனவே பொருளாதார நெருக்கடியால் சிக்கி தவித்து வரும் கியூபாவுக்கு இர்மா புயலால் கூடுதல் சுமை ஏற்பட்டுள்ளது. வீடுகள்‌, கட்டடங்கள் முழுமையாக சேதமடைந்துள்ளன. லட்சக்கணக்கான ஏக்கரில் பயிரடப்பட்டிருந்த விளைநிலங்களும் வெள்ள நீரில் அடியோடு மூழ்கிப் போயுள்ளன. விமான நிலையங்களும் மூ‌டப்பட்டிருப்பதால் சுற்றுலா ‌வருவாயும் பாதிக்கப்பட்டுள்ளது. தலைநகர் ஹவானாவில் மட்டும் தற்போது மீட்புப் பணிகள் முழு வீச்சில் தொடங்கியுள்ளன. எனினும் தெருக்களில் குப்பை மேடாக கொட்டியிருக்கும் கட்டட இடிபாடுகள் இதுவரை அகற்றப்படவில்லை. இதனால் பொதுமக்களே களமிறங்கி அந்த பணி‌யை செய்து வருகின்றனர். 

சற்று முன்எடிட்டர் சாய்ஸ்