Published : 30,Jun 2022 02:12 PM
ஆதாருடன் பான் எண்ணை இணைத்துவிட்டீர்களா? இனி இரு மடங்கு அபராதம்

ஆதாருடன் பான் எண்ணை இணைக்காவிட்டால் நாளை முதல் இரு மடங்கு அபராதம் விதிக்கப்படவுள்ளது.
ஆதாருடன் பான் எண்ணை இணைப்பதை மத்திய அரசு கட்டாயமாக்கி உள்ளது. அவ்வாறு இணைக்க கடந்த மார்ச் மாதம் 31-ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டது. பலமுறை அவகாசம் நீட்டிக்கப்பட்ட நிலையில், மார்ச் 31-ம் தேதிக்குக்குள் இணைக்காதவர்களுக்கு 500 ரூபாய் அபராதத்துடன் ஜூன் 30-ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டது. இது இன்றுடன் முடிவுக்கு வரும் நிலையில், நாளை முதல் இருமடங்கு அபராதமாக, 1000 ரூபாய் வசூலிக்கப்படவுள்ளது.
இதனிடையே, அடுத்த ஆண்டு மார்ச் 31-ம் தேதி வரை இந்த அபராதத்துடன் பான் எண்ணை ஆதாருடன் இணைக்க மத்திய நேரடி வரிகள் வாரியம் கூடுதல் அவகாசம் வழங்கியுள்ளது. அதன் பிறகும் இணைக்காதவர்களின் பான் எண்கள் முடக்கப்படும் எனத் தெரிகிறது.