Published : 17,Jun 2022 09:07 PM
வாயில் பாதி.. கையில் பாதி பரோட்டா.. விஜய் அலுவலகத்தில் இறந்து கிடந்த பெயிண்டர்!

நடிகர் விஜய்யின் அலுவலகத்தில் வேலை பார்த்துவந்த பெயிண்டர் உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை கிழக்கு கடற்கரை சாலை பனையூரில் உள்ள நடிகர் விஜய்யின் அலுவலகத்தின் உட்பகுதிகள் புதுமைபடுத்தும் பணியானது நடைபெற்று வருகிறது. இங்கு வேலை செய்து வந்த பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த பெயிண்டரான பிரபாகரன்(34), நடிகர் விஜய்யின் அலுவலகத்தில் தங்கி பெயிண்ட் அடிக்கும் வேலையை செய்து வருகிறார். சனிக்கிழமையன்று சம்பளத்தை பெற்றுக்கொண்டு தன்னுடைய குடும்பத்தினரை காண பழைய வண்ணாரப்பேட்டைக்குச் சென்ற பிரபாகரன் நேற்று இரவு 8 மணியளவில் குடிபோதையில் நடிகர் விஜய்யின் அலுவலகத்திற்க்கு வந்துள்ளார். அங்கிருந்த மேஸ்திரியிடம் தனக்கு பசிப்பதாகவும், பரோட்டா வாங்க 100 ரூபாய் தரும்படி கேட்டு பெற்றுக்கொண்டு சென்றதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்று அவருடன் வேலைபார்க்கும் சக வேலையாட்கள் வேலைக்கு வந்தபோது, அலுவலகத்தின் உட்புறமாக கையிலும் வாயிலும் பரோட்டாவுடன் பிரபாகரன் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். தகவலறிந்து வந்த கானத்தூர் போலீசார் பிரேத பரிசோதனைக்காக பிரபாகரின் உடலை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குடிபோதையில் பரோட்டா சாப்பிட்டதில் உணவுக்குழாயில் அடைப்பு ஏற்பட்டு இறந்திருக்கலாம் என்றும், உடற்கூறு ஆய்வின் அறிக்கை வந்த பிறகே இறப்பிற்கான முழுமையான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.