Published : 25,May 2022 01:38 PM

``23 இன்ச் தழும்போடுதான் மீண்டேன்”-பாசிடிவ் வைப்ஸ் பகிர்ந்த `காதலர் தினம்’ ஹீரோயின் சோனாலி

Sonali-Bendre-reveals-she-was-left-with-23-inch-scar-after-her-cancer-surgery

தமிழ் கலைத்துறையில் காதலர் தினம் திரைப்படம் மூலம் பட்டிதொட்டியெங்கும் பிரபலமானவர் நடிகை சோனாலி பிந்த்ரே. பாலிவுட் திரையுலகில் பல படங்களில் நடித்து பிரபலமடைந்த இவர், கடந்த 2018-ம் ஆண்டு புற்றுநோயுடன் போராடி மீண்டிருந்தார்.

புற்றுநோயிலிருந்து மீண்டு பலருக்கும் நம்பிக்கை தரும் வகையில் வாழும் சோனாலி, தான் எப்படி நம்பிக்கையுடன் நோயிலிருந்து மீண்டேன் என்பது குறித்து தற்போது பேட்டியொன்றில் பேசியுள்ளார். அப்பேட்டியில் புற்றுநோயை வென்ற தனக்கு, அறுவைசிகிச்சைக்குப் பிறகு 23 இன்ச்சில் வடுவொன்று இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார் அவர். தனது வாழ்வை புற்றுநோய்க்கு முன் மற்றும் புற்றுநோய்க்குப் பின் என பிரிக்கலாம் எனக்கூறி அதை BC and AC என்று வகைப்படுத்தியுள்ளார் சோனாலி.

image

ஆங்கில ஊடகமொன்றுக்கு புற்றுநோயுடனான தனது கடந்த காலம் குறித்து பேட்டியளித்துள்ள அவர், “எந்தவொரு விஷயத்தையும் நாம் அனுபவிக்கும்போது, அதிலிருந்து நிறைய பாடம் கற்றுக்கொள்வோம். அப்படி நான் என்னுடைய புற்றுநோயுடனான போராட்டத்தின்போது, இரண்டு விஷயங்கள் கற்றுக்கொண்டேன். அவை, நாம் முன்னோக்கி செல்கையில் இலக்கு மட்டுமே எல்லா நேரமும் முக்கியமல்ல. அந்த இலக்கை அடைய எந்த வழியாக, என்ன மாதிரியான பயணத்தை மேற்கொள்கிறோம் என்பதும் முக்கியம். இக்காரனங்களினாலேயே நானும் என் கணவரும் என் வாழ்வை, BC மற்றும் AC (புற்றுநோய்க்கு முன், புற்றுநோய்க்கு பின்) என்று இரண்டு விதமாக பிரித்து பார்க்கிறோம்” என்று கூறியுள்ளார்.

image

மேலும் பேசியுள்ள அவர், “எனக்கு புற்றுநோய் உறுதியானபோது என்னுடைய மருத்துவர்கள், என்னிடம் சொன்ன முதல் விஷயம் `எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் நீங்கள் மருத்துவமனைக்கு வந்துவிடுங்கள்’ என்பதுதான். ஏனெனில் தொற்று அபாயம் எனக்கு அதிகம் இருந்தது. மருத்துவர்கள் அறிவுரைப்படி விரைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். அதன் பிறகு ஏராளமான சிகிச்சைகள் எனக்கு நடந்தது. அறுவை சிகிச்சைகளுக்குப் பிறகு, `இன்னும் 24 மணி நேரத்துக்குள் நீங்கள் நடக்க வேண்டும்’ என்று என்னுடைய அறுவை சிகிச்சை மருத்துவர் கூறினார்.

சொன்னதுபோலவே அறுவை சிகிச்சை செய்யப்பட்ட 24 மணிநேரத்தில் மருத்துவமனை காரிடரில் நான் நடந்தேன். மிக மிக சிரமப்பட்டு, அடிமேல் அடிவைத்து நான் நடந்தேன். அந்த சமயத்தில் என்னுடைய உடம்பில் 23 - 24 இன்ச்சுக்கு அறுவை சிகிச்சையால் ஏற்பட்ட வெட்டுக்காயம் இருந்தது. அசையவே சிரமமாக இருந்த அந்த வடுவோடு, நம்பிக்கையோடு நடந்தேன். இன்று இவ்வளவு தூரம் பயணப்பட்டுள்ளேன்.

image

எப்போதுமே வாழ்வை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றே நினைக்கிறேன். எந்த நெகடிவ் எண்ணங்களும் மனதில் இருக்கக்கூடாது. இன்றைய தேதியில், உலகில் எல்லா தரவுமே விரல் நுனியில் நமக்கு கிடைக்கிறது. வெளியிலிருந்து பார்க்கையில் இது பெரிய விஷயம் போல தெரியலாம். ஆனால் உண்மையில் இந்தளவுக்கான சமூக வலைதள விஷயங்கள், நெகடிவ்வாக மாறிவிடும் அபாயமும் உள்ளது. உங்களை சுற்றி என்ன நடக்கிறது என்பதை நீங்களே உணர்ந்துதான் அறியவேண்டும். அப்படி செய்தால் மட்டுமே வேறு யாரோ இண்டர்நெட்டில் சொல்லும் யூகங்கள் உங்கள் எண்ணங்களை தீர்மானிக்காது இருக்கும்” என்றார்.

இதையும் படிங்க... "பெரிய நடிகர்களின் படங்களுக்கே மக்கள் தியேட்டர் செல்கின்றனர்”- கே.எஸ் ரவிக்குமார்

சற்று முன்எடிட்டர் சாய்ஸ்