Published : 11,Sep 2017 02:19 AM
முதலமைச்சர் அணி அதிமுக பொதுக்குழு : நடைபெறுமா? தடைபெறுமா?

அதிமுகவில் முதலமைச்சர் அணி சார்பில் நாளை நடைபெற உள்ள பொதுக்குழு கூட்டத்துக்கு தடை விதிக்க கோரிய மனுவை சென்னை உயர் நீதிமன்றம் இன்று விசாரிக்கிறது.
அதிமுகவில் பழனிசாமி அணிக்கும், தினகரன் அணிக்கும் இடையே கட்சியைக் கைப்பற்றுவது தொடர்பாக கடும் மோதல் நிலவி வருகிறது. அதிமுக கட்சி யார் வசம் உள்ளது என்பது தொடர்பாக பன்னீர்செல்வம் அணியும், முன்னதாக இணைந்திருந்த தினகரன், பழனிசாமி அணியும் தேர்தல் ஆணையத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்திருந்தன. ஆனால் பழனிசாமி, தினகரன் அணியிடையே மோதல் வெடிக்க, பன்னீர்செல்வம் அணி பழனிசாமி அணியுடன் கைகோர்த்தது. இதனால் அதிமுக கட்சியை மீட்பதில் இருதரப்பிற்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்த சமயத்தில் பழனிசாமி அணி பொதுக்குழுவை கூட்டப்போவதாக அறிவித்திருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தினகரன், பொதுச்செயலாளருக்கு மட்டுமே பொதுக்குழுவைக் கூட்ட உரிமை உள்ளது என்றும், மற்றவர்களுக்கு உரிமை இல்லை என்றும் கூறினார். இந்நிலையில் தினகரன் அணியில் உள்ள எம்எல்ஏ வெற்றிவேல் பழனிசாமி அணி கூட்டும் பொதுக்குழுவிற்கு எதிராக வழக்கு தொடர்ந்திருந்தார். மேலும் ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்ட செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்களிடம், முதலமைச்சர் தரப்பினர் நிர்பந்தம் செய்து கையெழுத்து வாங்கி வருவதாக தினகரன் அணியினர் குற்றஞ்சாட்டியுள்ளனர். இந்த வழக்கு மீதான மனுவை சென்னை உயர்நீதிமன்றம் இன்று விசாரிப்பதால், நாளை பழனிசாமி அணியின் பொதுக்குழு நடைபெறுமா, தடைபெறுமா என்பது இன்று தெரியவரும்.