[X] Close

எளியோரின் வலிமை கதைகள் 29: சாலையோர பலா பழ விற்பனையாளர்களின் பரிதாப வாழ்க்கை!

சிறப்புக் களம்

Stories-of-the-strength-of-the-poor-29-The-miserable-life-of-the-jack-traders

முக்கனிகளில் ஒன்றான பலாவை ருசிக்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். முன்பெல்லாம் எல்லா ஊர்களிலும் கிடைத்துக் கொண்டிருந்த பலா சுளை இப்போது தேசிய நெடுஞ்சாலைகளில் மட்டுமே கிடைக்கக் கூடிய ஒரு பொருளாக மாறிவிட்டது. நுகர்வுக் கலாச்சாரம் அதிகரித்து வந்த நிலையில் இன்னமும் சாலையோரங்களில் வியாபாரம் செய்து பிழைக்கும் எளிய மனிதர்கள் இருந்து கொண்டேதான் இருக்கிறார்கள். அப்படி வியாபாரம் செய்து வந்த சின்ன பிள்ளையை சந்தித்தோம்.

''என் பேரு சின்னப்பிள்ளை. எனக்கு வயசு 40 ஆகுது. சொந்த ஊரு உளுந்தூர்பேட்டை பக்கத்தில் இருக்கிற செங்குறிச்சி. பத்து வருஷத்துக்கு மேல இந்த வியாபாரம் பண்ணிட்டு வரேன். கடுமையா வெயில் அடிக்கும் போதுதான் பலாப்பழம் சீசன் தொடங்கும். பழமெல்லாம் பக்கத்துல இருக்கிற பண்ருட்டியிலதான் வாங்குவோம். காலையில 8 மணிக்கு வியாபாரத்துக்கு வந்தேதனா ராத்திரி 10 மணி வரைக்கும் வியாபாரம் பண்ணுவோம். எல்லா நாளும் வியாபாரம் நல்லா இருக்கும்னு சொல்ல முடியாது. ஒருநாள் எல்லா பழமும் வித்துப் போகும்; ஒரு சில நாள்ல ஒரு பழம் கூட விக்காது. இந்த பழத்தை நம்பித்தான் என் குடும்பம் இருக்குது. எங்க வீட்டுக்காரர் ஏதாவது கூலி வேலைக்குப் போவார். வேலை கிடைக்கலைன்னா பலாச்சுளை விக்கிறதுக்கு வந்துடுவாரு.

image

இந்த வெயில் காலம் ஆரம்பித்து உடனே தான் பலா பழம் சீசன் தொடங்கும். தினந்தினம் சுளைய தூக்கிகிட்டு ஒவ்வொரு பஸ்ஸா துரத்திக் கொண்டு போய் வியாபாரம் பண்றது ரொம்ப கஷ்டங்க. பஸ்ல வர்ற எல்லாரும் வாங்கிட்டு போவாங்கன்னு சொல்ல முடியாது. ஒருத்தர் ரெண்டு பேர்தான் வாங்குவாங்க. ஒரு சிலர் அதிலேயும் பேரம் பேசுவாங்க பாருங்க அததாங்க தாங்க முடியாது. என்ன பண்றது வயிறுன்னு ஒன்னு இருக்கில்லையா அத நினைச்சுக்கிட்டு சரின்னு போய்டுவோம். வாங்கிட்டு வர எல்லா பழமும் சுவையா இருக்கும்னு சொல்ல முடியாது. சில பழம் சுவை குறைந்து போயிருக்கும். அதுக்காக நாம மரத்தையோ விவசாயியையோ கோவிச்சுக்க முடியாது இல்லையா? அந்த பழத்த எடுத்து போட்டுட்டு அடுத்த வேலையை பார்க்க வேண்டியதுதான் அதனால் வர நஷ்டம் எங்கள தான் சேரும். பெரிய பெரிய கம்பெனிகள் கொடுக்கிற தின்பண்டத்தல ஆணி கிடந்தால் கூட எடுத்து போட்டுட்டு சாப்பிடுவாங்க. ஆனா நாங்க விக்கிற ஒரு உள்ள ஒரு தூசி பறந்தால் கூட எடுத்து மூஞ்சி மேல போடுவாங்க. அதையும் தாங்கிக்கிட்டுதான் வியாபாரம் பன்றோம். திருப்பி அவங்க மேல நாங்க கோவிச்சுகிட்டா எங்க வயிறுதானங்க காயும்.  இதெல்லாம் பழகிப் போச்சுங்க'' என்றார் வெள்ளந்தியாக.

எளிய மனிதர்கள் என்றால் எல்லோருக்கும் கொஞ்சம் இளக்காரம்தான். அவர்களுக்குள்ளும் ஒரு மனிதம் இருக்கிறது; ஒரு வாழ்க்கை இருக்கிறது என்பதை எல்லோரும் உணர்வதில்லை. உளுந்தூர்பேட்டை அருகே செங்குறிச்சி பகுதியில் பலாப்பழம் வியாபாரம் செய்யும் நந்தகோபாலை சந்தித்தோம்.

image

''எனக்கு சொந்த ஊர் திருநாவலூர். இப்பதான் இந்த வியாபாரம் செய்ய தொடங்கியிருக்கேன். பண்ருட்டி, கடம்புலியூர், நெய்வேலி பக்கத்துல தான் இந்த பழம் அதிகமாக கிடைக்கும். நம்ம ஊர்ல சீசன் இல்லாத நேரத்துல கேரளாவிலிருந்து பலா வரும். ஆனா அந்த பழம் அந்த அளவுக்கு சுவையா இருக்கும்னு சொல்ல முடியாது. நம்ம ஊர் பழம் தாங்க அருமையான சுவையாக இருக்கும். சின்ன பழம் 50 ரூபாய்க்கு தொடங்கி 200 ரூபா வரைக்கும் வாங்குவோம். வண்டி கூலி அது இதுன்னு 90 பழம் பத்தாயிரம் ரூபா ஆயிடும். ஒரு பழம் நூறு ரூபாய் தொடங்கி முன்னூறு ரூபா வரைக்கும் இங்க வந்து விப்போம். பழம் ஒரு வாரம் வரைக்கும்தான் தாங்கும். அதுக்கு மேல விக்க முடியாது. மாட்டுக்கு தான் போடணும். ஒரு வாரம் வியாபாரத்தில் லாபம் கிடைச்சுதுன்னா இன்னொரு வாரம் நஷ்டத்தில் தான் போகும். 15 சுளை கொண்ட பாக்கெட்டு 15 ரூபாய்க்கு விப்போம் அதுல தாங்க கொஞ்சம் லாபம் அதுவும் எல்லா நாளும் லிக்கும்னு சொல்லமுடியாது. ஏதோ எனக்கு தெரிஞ்ச இந்த தொழிலை நேர்மையா செஞ்சிட்டு வர்றோம்'' என்றார்.

image


Advertisement

எளிய மனிதர்கள் தாங்கள் செய்கிற எந்த தொழிலையும் நேர்மையாக செய்ய பழகிக் கொண்டுள்ளனர். ஒருவேளை நம்மை அவர்கள் ஏமாற்றுகிறார்கள் என்று நாமாகவே எண்ணிக் கொள்கிறோம். காரணம் விளம்பரம் இல்லை என்பதுதான். தொடர்ந்து அடுத்து ஒரு எளிய மனிதரோடு பயணிக்கலாம்.

-பா.ஜோதி நரசிம்மன்

இதையும் படிக்கலாம்: எளியோரின் வலிமை கதைகள் 25: ’கொஞ்சம் கொஞ்சமா பரிசல் ஓட்டற ஆளுங்க குறைஞ்சிக்கிட்டே வராங்க’

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close