Published : 29,Mar 2022 09:00 PM
பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்: சற்று பின்வாங்கிய ரஷ்யப் படைகள்?

பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணும் நோக்குடன், உக்ரைன் தலைநகர் கீவ் மீதான தாக்குதலை இப்போதைக்கு நிறுத்திக்கொள்ள முன்வந்துள்ளது ரஷ்யா. போரை நிறுத்தி, பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண இரண்டு தரப்பிலிருந்தும் பல்வேறு நிபந்தனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
துருக்கி நாட்டில் நடைபெறும் பேச்சுவார்த்தையில் ரஷ்யா தனது நிலைப்பாட்டை வலியுறுத்தியவுடன், கிவ் மற்றும் செர்நிஹிவ் நகரங்கள் மீதான தாக்குதலை நிறுத்தி உள்ளதாகவும், அந்தப் பகுதிகளில் படைகளை சற்று பின்வாங்கி உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் உக்ரைன்-ரஷ்யா பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்படலாம் என நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
கிரிமியா பகுதியின் நிலை குறித்து அடுத்த 15 வருடங்களுக்கான திட்டம் குறித்து தனியாக பேச்சுவார்த்தை நடத்தலாம் என ரஷ்யா தெரிவித்துள்ளது. உக்ரைன் நாட்டின் ஒரு பகுதியாக இருந்தாலும், கிரிமியா ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ளது. அதேபோல், டான்பாஸ் பகுதி குறித்து தனி பேச்சுவார்த்தை விளாடிமிர் புடின்-செலென்ஸ்கி இடையே நடைபெறவேண்டும் எனவும் ஆலோசனை நடந்துள்ளது. இதுவரை எந்த முடிவும் எட்டப்படவில்லை என்றும், உக்ரைன் எந்த நிபந்தனையையும் இன்னமும் முழுதாக ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் துருக்கியில் பேச்சுவார்த்தைகளை ஏற்பாடு செய்துவரும் தூதர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த பேச்சுவார்த்தையில் ரஷ்யா செல்வந்தர் அப்ராமோவிச் கலந்துகொள்வது குறிப்பிடத்தக்கது. செல்சி கால்பந்து அணியின் உரிமையாளரான அப்ராமோவிச் பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்வதை இரண்டு தரப்பும் அங்கீகரித்துள்ளது.
உக்ரைன் நாடு ஐரோப்பியா யூனியன் கூட்டணியில் சேர்வதை ரஷ்யா எதிர்க்காது என்றும் பேச்சுவார்த்தையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், நேட்டோ ராணுவ கூட்டணியில் எக்காரணம் கொண்டும் உக்ரைன் சேரக்கூடாது என ரஷ்யா வலியுறுத்தியுள்ளது. ஒரு மாதமாக உலகம் முழுவதும் தாக்கம் ஏற்படுத்திவரும் உக்ரைன்-ரஷ்யா போர் முடிவடைய இந்த பேச்சுவார்த்தை மூலம் வழி கிடைக்கும் என துருக்கி அதிபர் எர்டோகன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.