Published : 25,Mar 2022 08:27 AM

ஆசிரியை திட்டியதால் தற்கொலை செய்த மாணவர்? - உடலை வாங்க மறுத்து போராடிய கிராம மக்கள்

Namakkal-student-commits-suicide-after-teacher-scolds-him

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே ஆசிரியை கண்டித்ததால் ரயில் முன்பாய்ந்து தற்கொலை செய்துக்கொண்ட மாணவனின் உடலை, 5 மணிநேர பேச்சுவார்த்தைக்கு பிறகு காவல்துறையினர் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே தண்ணீர்பந்தல்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி. கட்டுமான தொழிலாளியான இவரது இரண்டாவது மகன், தண்ணீர்பந்தல்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தார். வழக்கம் போல பள்ளிக்கு சென்ற மாணவன் ரிதுன் வகுப்பறையில் இருந்த போது தாவரவியல் ஆசிரியையொருவர், மாணவன் ரிதுனை அருகில் இருப்பவர்களுடன் பேசிக்கொண்டு இருப்பதை பார்த்து வகுப்பறையை விட்டு வெளியேற கூறியுள்ளார். இதில் மனமுடைந்த மாணவன் ரிதுன் பள்ளிக்கு அருகில் செல்லும் ரயில் தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை செய்துகொண்டதாக சொல்லப்படுகிறது.

image

இதை பார்த்த கிராமத்தினர் ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதன் பின்னர் சம்பவம் இடத்திற்கு வந்த ரயில்வே போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிதோசனைக்கு கொண்டு செல்ல முயன்ற போது, கிராம மக்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பள்ளியை முற்றுகையிட்டு பெற்றோர் மற்றும் கிராம மக்கள் பள்ளி முன்பு தர்ணா போரட்டத்தில் ஈடுபட தொடங்கியுள்ளனர்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த வெப்படை போலீசார் மற்றும் மாவட்ட எஸ்பி சாய் சரண் தேஜஸ்வி மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் ஆகியோர், போராட்டக் குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ``தொடர்ந்து இப்பள்ளியில் மாணவர்கள் சமுதாய, சாதிய பெயரை வைத்து தரக்குறைவாக நடத்தப்படுகிறது. மாணவன் உயிரிழப்புக்கு காரணமான ஆசிரியை மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுத்து கைது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கிராம மக்கள் வலியுறுத்தினர்.

தொடர்ந்து 5 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற போராட்டத்தில் இறுதியாக மாணவன் இழப்பிற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் உறுதியளித்தையடுத்து, மாணவன் சடலத்தை எடுத்துச்செல்ல கிராம மக்கள் அனுமதித்தனர். இருப்பினும் சுமார் 8 மணி நேரத்திற்கும் மேலாக அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. முதல் கட்டமாக முதல் தகவல் அறிக்கை கொடுத்த பின்னரே, அவர்கள் தற்காலிமாக தங்களது போராட்டத்தை கைவிட்டனர்.

image

அதேநேரம் `ஆசிரியை கைது, இறந்த மாணவர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை’ உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றினால் மட்டுமே பிரேதபரிதோசனைக்கு பிறகு மாணவன் சடலத்தை பெற்றுக்கொள்ள போவதாக கிராம மக்கள் தெரிவித்திருக்கின்றனர். 

சமீபத்திய செய்தி:"21 நாட்களாக உணவு இல்லை" - கோவையில் உயிரிழந்த பெண் யானை - ஆய்வில் அதிர்ச்சி தகவல்

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்