Published : 17,Mar 2022 09:11 PM
”ரோகித் சர்மா குவிக்கும் வெற்றியின் ரகசியம் இதுதான்” - மும்பை அணி பயிற்சியாளர் ஜாகீர் கான்

வெற்றி மீது வெற்றிகளாக குவித்து வருகிறார் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் ஷர்மா. ஐபிஎல் களத்தில் இதுநாள் வரை மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அவர் ஈட்டி வந்த வெற்றிகளை இப்போது சர்வதேச கிரிக்கெட் களத்தின் பக்கமாக மடைமாற்றி உள்ளார் என்றே இதை சொல்ல வேண்டும். இந்நிலையில் அவர் தொடர் வெற்றிகளை குவிக்க காரணம் என்ன என்பதை விளக்கியுள்ளார் முன்னாள் இந்திய வீரர் ஜாகீர் கான்.
“ரோகித் ஷர்மாவை வீரர்களின் கேப்டன் என சொல்லலாம். ஒரு வீரராகவும், ஒரு கேப்டனாகவும் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் பல ஆண்டுகளாக ரோகித் இயங்கி வருகிறார். அவர் சிறந்த கேப்டனாக திகழ காரணம் என்னவென்றால் அவர் ஒவ்வொரு வீரர்களுடனும் தனது தனிப்பட்ட நேரத்தை ஒதுக்குவார். அவர்களுடன் கலந்து பேசுவார். அது தான் அவருக்கு வெற்றியை தேடி கொடுக்கிறது.
இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்குவதிலும் சரி, அவர்களை வளர செய்வதிலும் சரி மும்பை அணிக்கு தனிச்சிறப்பு உண்டு. ரோகித் ஷர்மாவின் அனுபவமும், அணுகுமுறையும் அணியில் இடம் பெற்றுள்ள ஒவ்வொரு வீரரையும் அவரவர் வழியில் தலைவர்களாக மாற்றும் என நான் நம்புகிறேன்.
நடந்து முடிந்த மெகா ஏலத்தின் மூலம் அனுபவமும், இளமையும் கலந்த கலவையாக அணியை நாங்கள் உருவாக்கி உள்ளோம் என நம்புகிறேன். நிச்சயம் இது குறுகிய கால மற்றும் நீண்ட கால பலன்களை எங்களுக்கு அளிக்கும்” என தெரிவித்துள்ளார் மும்பை இந்தியன்ஸ் அணியின் கிரிக்கெட் ஆபரேஷன்ஸ் இயக்குனர் ஜாகீர் கான்.