Published : 17,Mar 2022 08:16 PM

’ஜேம்ஸ்’ விமர்சனம்: புனித் ராஜ்குமாரின் கடைசிப் படம் ‘ஜேம்ஸா?’ ’கேம்ஸா?

James-Movie-Review

கன்னட ’பவர் ஸ்டார்’ மறைந்த புனித் ராஜ்குமார் கடைசியாக நடித்த ‘ஜேம்ஸ்’ இன்று அவரது, 47 வது பிறந்தநாளையொட்டி தியேட்டர்களில் ரிலீஸ் ஆகியுள்ளது. அவர் ரசிகர்கள் மட்டுமல்லாமல் பார்வையாளர்கள் மத்தியிலும் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளை கிளப்பியுள்ள ‘ஜேம்ஸ்’ படம் எப்படி?

ட்ரக்ஸ், இல்லீகல் ஆர்ம்ஸ், ஹியூமன் ட்ராஃபிக்கிங் என நிழலுலக கேங்ஸ்டர்களுக்குள் நடக்கும் டிஷ்யூம் டிஷ்யூம் தான் கதை. பிசினஸ் போட்டியால் தனது அப்பா கொல்லப்பட, தனக்கு நம்பிக்கையாக, எத்தனைப் பேர் தன்னை கொல்ல வந்தாலும் ஒத்த ஆளா நின்னு சுட்டு பொசுக்குற மாவீரனை காவலனாக தேடுகிறார் விஜய் கெய்க்வாட் கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகர் ஸ்ரீகாந்த். அந்த மாவீரம் கொண்ட காவலனாக சேர்கிறார் சந்தோஷ் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் புனித் ராஜ்குமார். தனது வேலைக்காக வாங்கிய பணத்திற்கு எக்ஸ்ட்ராவாகவே பாய்ந்து, பறந்து, வில்லன்களை அடித்து உதைத்து, சுட்டுத்தள்ளி ஸ்ரீகாந்த்தின் குடும்பத்தைக் காப்பாற்றுகிறார். காப்பாற்றுவது மட்டுமல்ல… ஸ்ரீகாந்த்தின் குடும்பத்தையே கொல்லத் துடிக்கும், மற்றொரு கேங்ஸ்டர் முகேஷ் ரிஷியையும் அவர் மகன்களையும் ப்ளான் போட்டுக் கொடுத்து போட்டுத்தள்ளுகிறார் புனித் ராஜ்குமார்.

படத்தில் இருக்கும் ஒரேயொரு நாயகி கேங்ஸ்டர் ஸ்ரீகாந்த்தின் தங்கை பிரியா ஆனந்த். வேறு வழியில்லை, கதாநாயகனைத்தானே காதலிக்கமுடியும்? படத்தில் இருக்கும் ஒர்ர்ரே ஹீரோ புனித் ராஜ்குமார். அவரும் இவரைத்தானே காதலிக்கமுடியும்? எத்தனை படைகள் திரண்டு வந்தாலும் ஒற்றை ஆளாக நின்று, பாகுபலியாய் சீறிப்பாய்ந்து விரட்டியடித்து, வில்லன்களை பலிகொடுக்கும் ஒரு மாவீரன் இருந்தால் என்ன செய்வோம்? தனது குடும்பத்தையே காப்பாற்றி தனக்கு அரணாக இருக்கும் புனித் ராஜ்குமாரை தனது தங்கைக்கே திருமணம் செய்துவைக்க முடிவு செய்து விழாவையும் ஏற்பாடு செய்கிறார் ஸ்ரீகாந்த். அப்போதுதான், திடீரென்று முகம் மாறும் புனித் ராஜ்குமார், ”அவ்ளோதானா சார்? என்னைப் பார்த்தா பயம் வர்லையா?” என்றபடி விழாவுக்கு வந்திருந்த அத்தனைப் பேரையும் அடித்து, உதைத்து, சுட்டு வீழ்த்தி ஸ்ரீகாந்த்தையும் அவரது தங்கையையும் சிறைபிடிக்கிறார். ஸ்பாய்லர்தான். ஆனால் படம் பார்க்காதவர்கள் கூட யூகிக்கக்கூடிய ட்விஸ்ட்டில் ஸ்பாய்லர் எல்லாம் ஒன்றுமில்லைதான்.

ஸ்ரீகாந்த் கூடவே இருந்து காப்பாற்றி, அவரது நம்பிக்கையை பெற்று, காதலித்த அவரது தங்கையையும் திருமணம் செய்யப்போகும் சூழலில் ஏன் இப்படி செய்தார் புனித் ராஜ்குமார்? பாதுகாவலராக வந்தவரே இப்படி நடந்துகொள்ள காரணம் என்ன? யார்தான் அந்த ஜேம்ஸ்?இப்படி பல்வேறு கேள்விகளுக்கு பழிவாங்கல் கதையாக விரிகிறது ஃப்ளாஷ் பேக்.

image

‘மை நேம் இஸ் பில்லா’ ரேஞ்சுக்கு பில்ட்-அப் கொடுக்கப்பட்டு, கோட்டு சூட்டுடன் அங்குமிங்கும் உலாவும் ஹாலிவுட் ஸ்டைல் வில்லன்கள். ’அவன் எங்கடா வந்தான்… சத்தியமூர்த்தி வரவெச்சாண்டா’ என்கிற ‘போக்கிரி’ ரேஞ்சுக்கு வில்லன்களை வரவைத்து கொல்லும் ட்விஸ்டுகள், ‘தனி ஒருவன்’ பட நண்பர்கள், ‘துப்பாக்கி’ பட கோட்டு சூட்டுடன் ஃபங்ஷன், சிறுமிகளை வினய் கடத்தி வைத்திருக்கும் ‘டாக்டர்’ பட அதே லொக்கேஷன் என படம் முழுக்க தேஜாவுபோல் உள்ளது. அதாங்க… ஏற்கனவே பார்த்ததுபோல் உள்ளது.

ஓப்பனிங் முதல் எண்டிங்வரை தனது கதாபாத்திரத்துக்கு ஏற்ற நடிப்பால், செம்ம மாஸ் காட்டி திணறடிக்கிறார் புனித் ராஜ்குமார். ஃபைட் சீன்களில் காரில் பறந்துவரும்போது நமது மூஞ்சிலேயே கார் சக்கரம் உரசிவிட்டு செல்வதுபோல் பீதி கிளப்புகிறார். ஒவ்வொரு அடியும் இடிபோல் விழுகிறது. பில்டப் காட்சிகளுக்கு ஏற்றார்போல் ‘ஃபிட்’ ஆக நடித்திருக்கிறார். அதேபோல், முதல் பாடலான ‘பாரு பாரு இவன் சிங்கம்’ பாடலில் ஸ்டைலிஷ் நடனத்தால், இதயத்தை ஈர்க்கிறார். ‘கேம் எனக்கு புடிக்கும். ஆனா, டபுள் கேம் ஆடுறது எனக்கு புடிக்காது என்கிற புனித் ராஜ்குமாரை ’சந்தோஷ் - ஜேம்ஸ்’ என ’டபுள்கேம்’ ஆடவைத்திருக்கிறார் இயக்குநர் சேத்தன் குமார்.

கேங்ஸ்டரின் தங்கையாக நடித்திருக்கும் நாயகி பிரியா ஆனந்திற்கு வழக்கமான ரோல்தான். கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான ‘ராஜகுமாரா’ படத்திற்குப் பிறகு இரண்டாவது முறையாக புனித் ராஜ்குமார்- சரத்குமார் கூட்டணியில் இணைந்துள்ளார். இப்படத்திலும் நாயகன் வில்லன்களை அடித்து உதைத்து, சுட்டுப் பொசுக்குவதை ஆச்சர்யத்துடன் பார்ப்பது, அவரைக் காதலிப்பது அவ்வளவுதான்.

image

ஜோசப் ஆண்டனியாக மெயின் வில்லனாக வரும் சரத்குமார் கேங்ஸ்டர் என்பதால் நின்ற இடத்தில் ஆடாமல் அசையாமல் கோட் போட்டுக்கொண்டு ‘மூஞ்சி மட்டும்தான் வேலை செய்யுது. மத்ததெல்லாம் அப்படியேத்தான் இருக்கு’ என்று போக்கிரி பட வடிவேல் சொல்வதுபோல் லிப்ஸ் மூவ்மெண்ட் மட்டுமே கொடுக்கிறார். வில்லன் என்றால் ஹீரோவிடம் க்ளைமாக்ஸில் அடிவாங்காமல் இருக்கமுடியுமா என்ன? மெயின் கேங்ஸ்டரே அடிவாங்கும்போது மற்றவர்களும் அடிவாங்காமல் இருக்கமுடியுமா என்ன? வாங்கிக்கொண்டே இருக்கிறார்கள். நாமும்தான்.

படத்தில் இயக்குநரைவிட ஸ்டண்ட் மாஸ்டர்தான் அதிகமாக உழைத்திருக்கிறார். சண்டைக்காட்சிகள் ரசிக்கும்படியாக இருக்கிறது. அதேநேரத்தில், படம் முழுக்க சண்டைக்காட்சிகளையே நிரப்பினால் எப்படி இருக்கும் இயக்குநர் சேத்தன் குமார்? ஒரு காட்சியில் ’யாரு அவன்? மிருகத்தைவிட கொடியவன். நக்சலைட்டா? டெர்ரரிஸ்ட்டா?’ என்கிறார் கதாநாயகனைப் பார்த்த கதாநாயகி. நக்சலைட்டுகள் குறித்த புரிதல் இல்லாமல் இருக்கிறது இந்த வசனம். ஸ்வாமி ஜே கெளடாவின் ஒளிப்பதிவு ஓகே. ஆனால், வழக்கமான மசாலா தெலுங்கு படங்களையே ஓவர் டேக் செய்கின்றன. போட்டி கேங்ஸ்டர்களிடமிருந்து காப்பாற்றும்போதே புனித் ராஜ்குமாரின் அதிரடி சண்டைக் காட்சிகளைப் பார்த்து ஏற்கனவே மிரண்டு போயிருக்கிறார் வில்லன் ஸ்ரீகாந்த். ஆனால், அவரிடம் ’அவ்ளோதானா சார்? பயம் வரலையா?’ என்று புனித் ராஜ்குமார் கேட்கும்போது, ஏற்கனவே பயந்துபோனவனை போயி திரும்பவும் பயப்பட சொல்றீங்களே என்று கேட்கத்தோன்றுகிறது.

சிறப்புத் தோற்றத்தில் ஆர்மி ஆஃபிஸராக வரும் சிவராஜ்குமார், சில நிமிடக் காட்சிகளில் வந்து ’கடவுளுக்கு எல்லாரையும் புடிக்கும். ஆனா, ரொம்ப நல்லா புடிச்சவங்களை அவரே அழைச்சுக்குவாராம்’ என்று சொல்லும்போதே சொல்லும்போதே புனித் ராஜ்குமாரை நினைவுபடுத்தி இதயத்தை ஈரமாக்குகிறார். மற்றொரு அண்ணன் ராகவேந்திரா ராஜ்குமாரும் ஒரு சில காட்சிகளில் வந்து போகிறார். அவ்வளவுதான்.

image

படத்திற்கு ‘ஜேம்ஸ்’ என்று வைத்ததற்கு பதிலாக ‘கேம்ஸ்’ என்று வைத்திருக்கலாம். படம் முழுக்க வீடியோ கேம்ஸ் விளையாடுவதுபோல ஒருவருக்கொருவர் சுட்டுக் ‘கொல்’கிறார்கள். வழக்கம்போல, போலீஸ் என்கவுண்டர்களிலாவது போலீஸுக்கு இடது கையில் காயம் ஏற்படும். ஆனால், அத்தனை துப்பாக்கிகள் சுட்டும்கூட, அவரைச்சுற்றியுள்ள அத்தனைப்பேரும் சுட்டுக்கொல்லப்பிறகும்கூட கதாநாயகன் மீது ஒரு கோலி குண்டுகூட துளைக்கவில்லை. படத்தின் ஒரு காட்சியில் சுட்டு கொல்லப்பட்டவர்களைப் பார்த்து “எந்திரிங்கடா… கதை சொல்றேன் எந்திரிங்கடா” என்று கதறும் ஒரு கதாப்பாத்திரம். திரைக்கதையும் நம்மைப் பார்த்து அப்படித்தான் கதறுகிறது. அதனால், புனித் ராஜ்குமாரின் ரசிகர்கள் நிச்சயமாக பார்க்கலாம். ’இனி, அவர் நடிப்பில் ஒரு படம் வெளிவரப்போவதில்லை’ என்கிற அடிப்படையில் பார்வையாளர்கள் ’ஜேம்ஸ்’ஸைப் பார்க்கலாம். மற்றபடி ஒன்றுமில்லை இந்த ஜேம்ஸிடம்.

- வினி சர்பனா

சற்று முன்எடிட்டர் சாய்ஸ்