Published : 17,Mar 2022 07:17 PM
தீபக் சாஹர் இந்த சீசனில் விளையாடுவாரா?.. ஐபிஎல் 2022-ம் சில கேள்விகளும்!

எதிர்வரும் 26-ஆம் தேதி 15-வது ஐபிஎல் சீசன் ஆரம்பமாக உள்ளது. பத்து அணிகள் இந்த சீசனில் பங்கேற்கின்றன. வீரர்களுக்கு ஏற்பட்டுள்ள காயம், பேட்டிங் ஆர்டர், தொடர் முழுவதும் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ள வீரர்கள் விளையாடுவார்களா என ஒவ்வொரு அணியும் கேள்விகளால் குழம்பி நிற்கின்றன.
தீபக் சாஹர் - சி.எஸ்.கே!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக பவர்பிளே ஓவர்களில் விக்கெட்டுகளை கைப்பற்றிக் கொடுக்கும் பவுலரான தீபக் சாஹர் இந்த சீசனில் விளையாடுவது சந்தேகம் என்ற சூழல் உருவாகியுள்ளது. அவர் இல்லாத பட்சத்தில் அவருக்கு மாற்றாக அந்த இடத்தில் சென்னை அணி யாரை விளையாட வைக்கும் என்பது மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது.
சென்னை அணி இரு வேறு விதமாக இந்த சிக்கலை அணுகும் என சொல்லப்படுகிறது. அதாவது தொடக்க ஆட்டக்காரர்களாக ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் ராபின் உத்தப்பா களம் இறங்கினால் கிறிஸ் ஜோர்டான் மற்றும் ஆடம் மில்னே விளையாடுவார்கள் என தெரிகிறது. அதுவே இளம் வீரர் ராஜ்வர்தன் விளையாட வாய்ப்பு பெற்றால் ருதுராஜ் கெய்க்வாட்டுடன் டேவன் கான்வே களம் இறங்குவார் என தெரிகிறது.
ஆர்.சி.பி-யில் கோலியின் ரோல் என்ன?
தனக்கு கேப்டன் பொறுப்பு வேண்டாம் என அதனை கடந்த சீசனோடு Quit செய்துவிட்டார் விராட் கோலி. இந்நிலையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் கோலி எந்த இடத்தில் பேட்டிங் செய்வார் என்ற கேள்வி எழுந்துள்ளது. கேப்டன் டூப்ளசிஸ் உடன் தொடக்க வீரராக களம் இறங்குவாரா அல்லது மூன்றாவது பேட்ஸ்மேனாக களம் காண்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. எப்படியும் அவர் டாப் ஆர்டரில் தான் விளையாடுவார். ஒருவேளை கோலி மூன்றாவது பேட்ஸ்மேனாக களம் கண்டால் அனுஜ் ராவத் தொடக்க வீரராக ஆர்.சி.பி-யின் புதிய கேப்டன் உடன் களம் இறங்குவார்.
வெங்கடேஷ் ஐயருடன் களம் காணும் வீரர் யார்?
அதே போல கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் தொடக்க வீரராக வெங்கடேஷ் ஐயருடன் களம் காணும் மற்றொரு பேட்ஸ்மேன் யார்? விக்கெட் கீப்பர் யார்? என்ற கேள்விகளும் உள்ளன. மேலும், மும்பை அணியில் விளையாட உள்ள பிரதான நான்கு வெளிநாட்டு வீரர்கள் யார்? நோர்க்யா விளையாடாத பட்சத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி என்ன செய்யும்? என பல்வேறு கேள்விகள் ஒவ்வொரு அணியிலும் எழுந்துள்ளது. இதற்கெல்லாம் அனைத்து அணிகளும் சுமூக தீர்வை கண்டு தொடரை வெற்றிகரமாக விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது.