Published : 01,Feb 2022 10:01 AM

ஐபிஎல் 2022 மெகா ஏலம்: ஸ்ரேயாஸ் அய்யர் முதல் டேவிட் வார்னர் வரை; கேப்டன் ரேஸில் 5 வீரர்கள்

From-Shreyas-Iyer-to-David-Warner-5-potential-captaincy-options-likely-to-fetch-big-money-at-2022-IPL-auction

2022 ஐபிஎல் தொடர் மார்ச் இறுதியில் தொடங்கி மே மாதம் வரை நடைபெற உள்ளது. இதற்காக வீரர்கள் பொது ஏலம் பிப்ரவரி 12, 13 ஆகிய தேதிகளில் பெங்களூருவில் நடைபெறவுள்ளது. இதையொட்டி 318 வெளிநாட்டவர், 896 இந்தியர் என்று மொத்தம் 1,214 வீரர்கள் ஏலப்பட்டியலில் தங்களது பெயரை பதிவு செய்துள்ளனர். அதற்கு முன்பாக பழைய அணிகள் ஒவ்வொன்றும் அதிகபட்சமாக 4 வீரர்களை மட்டும் தக்கவைத்துக்கொண்டு மற்ற வீரர்களை விடுவித்துள்ளது. 2 புதிய அணிகளும் ஏலத்திற்கு முன்பாக அதிகபட்சமாக தலா 3 வீரர்களை எடுத்துள்ளது.

மெகா ஏலத்தில் எந்தெந்த வீரர்களை எடுப்பது என்பது குறித்து அனைத்து அணிகளும் தீவிரமாக ஆலோசித்து மும்முரமாக தயாராகி வருகின்றன. சில ஐபிஎல் அணிகளில், கேப்டனுக்கான இடம் காலியாக உள்ளது. இச்சூழலில், கேப்டன் பொறுப்புக்காக எந்தெந்த வீரர்களுக்கு அணிகள் அதிக தொகையை செலவிடப்போகின்றன என்ற கணிப்புகள் வெளியாகி வருகின்றன.

image

ஸ்ரேயாஸ் அய்யர்

ஸ்ரேயாஸ் அய்யருக்கு இந்த ஐபிஎல் மெகா ஏலத்தில் இருந்து பண மழை பொழியவுள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. அவரை ஏலத்தில் எடுக்க எவ்வளவு கோடிகள் ஆனாலும் பரவாயில்லை என்பது போல பல அணிகள் காத்துள்ளன. ஆர்சிபி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு தற்போது நல்ல கேப்டன் தேவைப்படுகின்றனர். ஏற்கனவே கேப்டன்ஷிப் பற்றிய அனுபவம் கொண்டதுடன் இளம் வீரராக இருக்கும் ஸ்ரேயாஸ் அய்யரை தங்கள் அணிக்கு கேப்டனாக விளையாட வைக்க இந்த அணிகள் விரும்புகின்றன. தொடர் தோல்விகளில் தத்தளித்த டெல்லி அணியை இறுதிப்போட்டி வரை அழைத்துச் சென்றவர் ஸ்ரேயாஸ் ஐயர். ஆனால் ரிஷப் பண்ட் வந்தவுடன் டெல்லி அணி அவரை கழட்டிவிட்டுள்ளது.

image

டேவிட் வார்னர்

149 போட்டிகளில் 5,449 ரன்களை குவித்துள்ள ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர், ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் சேர்த்த வெளிநாட்டு வீரர் என்ற பெருமையை பெற்றவர். ஒவ்வொரு சீசனிலும் 500 ரன்களுக்கும் அதிகமாக அடித்திருக்கும் அவர், ஹைதரபாத் அணிக்காக விளையாடியபோது மூன்று முறை ஆரஞ்சு கேப் வாங்கி அசத்தியவர். வார்னர் தலைமையிலான ஹைதராபாத் அணி, 2016-ம் ஆண்டு கோப்பையை வென்று அசத்தியது.

கடந்த ஐபிஎல் சீசனில் பேட்டிங்கில் சொதப்பிய டேவிட் வார்னர், டி20 உலகக்கோப்பையில் தொடர் நாயகன் விருது வென்று அசத்தினார். இதனால் வார்னரை தங்களது அணிக்குள் எடுக்க கடும் போட்டி நிலவும் என்பது உறுதி. இந்த ஐபிஎல் மெகா ஏலத்தில் வார்னரின் தொடக்க விலை ரூ.2 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  ஆர்சிபி அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து விராட் கோலி விலகிவிட்டதால் அந்த அணிக்கு கேப்டன் தேவை. எனவே டேவிட் வார்னரை பல கோடிகள் செலவிட்டாவது வாங்கிவிட ஆர்சிபி திட்டமிட்டுள்ளது.

image

இஷான் கிஷான்

கடந்த 2018ம் ஆண்டு முதல் மும்பை அணியின் அதிரடி ஓப்பனராக இருந்து வருபவர் இஷான் கிஷான். 16 பந்துகளில் அரை சதம் விளாசி, மும்பை அணியில் அதிவேக அரை சதத்தை பதிவு செய்தவர். அதிரடியுடன் சேர்ந்து விக்கெட் கீப்பராகவும் உள்ளதால் அவருக்கு இந்த ஐபிஎல் ஏலத்தில் அதிக கிராக்கி  இருக்கப்போகிறது. 2016இல் நடந்த 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையில் இந்திய அணிக்கு தலைமை தாங்கிய அனுபவம் உடையவர் என்பதாலும் அதிரடியான  இளம் பேட்ஸ்மேன் என்பதாலும் கேப்டன்சி போட்டியில் இஷான் கிஷானுக்கு பெரும் தேவை இருக்கும். மும்பை அணியின் அடுத்த கேப்டனாகவே இவர் டார்கெட் செய்யப்பட்டுள்ளதால், நிச்சயம் மெகா ஏலத்தில் எடுக்க அந்த அணி முயற்சிக்கும்.

image

ஜேசன் ஹோல்டர்

ஐபிஎல் தொடரில் வேகப்பந்துவீச்சு ஆல்-ரவுண்டர்களுக்கு சமீப காலங்களாக அதிக 'டிமாண்ட்' இருந்து வருகிறது. அந்த வகையில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஜேசன் ஹோல்டர், தனது பக்கம் அனைவரின் கவனத்தை திருப்பியுள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் 4 பந்துகளில் 4 விக்கெட்களை கைப்பற்றி ஆச்சரியம் கொடுத்தார். இதனால் 3 - 2 என அந்த அணி தொடரைக் கைப்பற்றி அசத்தியது. இதே போல பேட்டிங்கிலும் அதிரடி மன்னனாக இருந்து வருகிறார். ஹோல்டருக்கு கரிபியன் லீக் தொடரில் அதிக கேப்டன்சி அனுபவம் உள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கும் கேப்டனாக இருந்துள்ளார். எனவே கேப்டனாகவும், ஆல்ரவுண்டராகவும் ஜேசன் ஹோல்டர், 2022 ஐபிஎல் சீசனில் முக்கிய வீரராக இருப்பார் என கருதி அனைத்து அணிகளும் அவரை வளைத்துப்போட முடிவெடுத்துள்ளன.

இதையும் படிக்க: 4 பந்தில் 4 விக்கெட்; மிரட்டிய ஜேசன் ஹோல்டர் - வெஸ்ட் இண்டீஸிடம் வீழ்ந்தது இங்கிலாந்து

image

ஷிகர் தவான்

ஷிகர் தவான் பல ஆண்டுகளாக ஐபிஎல் தொடரில் தொடர்ந்து ரன் குவித்து வருகிறார். கடந்த சீசனில் 16 ஆட்டங்களில் 587 ரன்கள் குவித்த ஷிகர் தவான் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டார். 192 ஐபிஎல் போட்டிகளில் 5,784 ரன்கள் எடுத்துள்ள தவான், லீக் போட்டிகளில் எப்போதுமே அதிக ரன்களை எடுத்தவர்களில் ஒருவராக உள்ளார். 36 வயதாகும் ஷிகர் தவான், தன்னால் என்ன முடியும் என்பதை தென்னாப்பிரிக்க தொடரில் நிரூபித்து விட்டார். இதனால் அவரின் வயதை பொருட்படுத்தாமல் பல்வேறு அணிகளும் பணத்தை வாரி வழங்க அணிகள் துடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிக்க: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் லோகோ அறிமுகம்

சற்று முன்எடிட்டர் சாய்ஸ்