Published : 25,Jan 2022 07:53 AM

திருப்பூர்: சிறுத்தை பதுங்கியுள்ள இடத்தை சுற்றி வலைவிரிப்பு: தயார்நிலையில் 3 கூண்டுகள்

திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகே இரு முதியவர்கள் மற்றும் ஒரு வனவேட்டை தடுப்புக் காவலரை தாக்கிய சிறுத்தையை பிடிக்கும் முயற்சிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

பாப்பாங்குளத்தைச் சேர்ந்த வரதராஜன் நேற்று காலை தமது சோளதட்டைக்கு சென்றபோது, காட்டு விலங்கு ஒன்று தாக்கியுள்ளது. வரதராஜனை தாக்குவதற்கு முன்பு அந்த விலங்கு, மாறன் என்ற முதியவரையும் தாக்கியுள்ளது. காயமடைந்த இருவரும் திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

பிற்பகலில் நிகழ்விடத்துக்கு வந்த வனத்துறையினர், 13 அதிநவீன கண்காணிப்பு கேரமாக்களை பொருத்தி கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தினர். பாதுகாப்பு கவச உடையணிந்து 6 வனக்காவலர்கள் அப்பகுதிக்குள் நுழைந்த நிலையில், பதுங்கியிருப்பது சிறுத்தை என்பது தெரியவந்தது. அப்போது அந்த சிறுத்தை தாக்கியதால் வனவேட்டை தடுப்புக் காவலர் மணிகண்டன் காயமடைந்தார்.

இதனிடையே, சிறுத்தை இருக்கும் இடம் உறுதி செய்யப்பட்ட நிலையில், மசால் புல் பயிரிடப்பட்டுள்ள பகுதியை சுற்றிலும் வனத்துறையினர் வலை அமைத்தனர். மாட்டிறைச்சி வைக்கப்பட்ட 3 கூண்டுகளை வைத்தும், அதிக ஒளித் திறன் கொண்ட மின் விளக்குகளை ஒளிரவிட்டும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சிறுத்தையை கண்ட அச்சத்திலும், அதை பிடிப்பதை பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்திலும் ஏராளமான மக்கள் திரண்டனர்.

சிறுத்தை ஆக்ரோஷமாக உள்ள நிலையில், கூடியிருந்த மக்களை காவல்துறையினரும், வருவாய்த்துறையினரும் அப்புறப்படுத்தினர். சிறுத்தை பவானிசாகர் வனப்பகுதியிலிருந்து வந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

முன்னதாக கோவை குனியமுத்தூரில், கிட்டங்கியில் பதுங்கி 5 நாட்களுக்கும் மேலாக போக்கு காட்டிய சிறுத்தையொன்றை வனத்துறையினர் பிடித்து டாப்ஸ்லிப் வனப்பகுதிக்குள் விட்டது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்