[X] Close

'மு.க.ஸ்டாலின் வலிமையான முதலமைச்சர்' - ஆளுநர் ஆர்.என். ரவி புகழாரம்

கல்வி

Governor-RN-Ravi-lauded-Stalin-as-a-powerful-Chief-Minister
இந்தியாவிலேயே சுகாதாரத்துறையில் தமிழ்நாடு முன்னிலை வகிப்பதாகவும், வலிமையான முதல்வராக ஸ்டாலின் திகழ்வதாகவும் டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ஆர்.என். ரவி புகழாரம் சூட்டினார்.
தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் 34-வது பட்டமளிப்பு விழா, அப்பல்கலைக்கழகத்தின் வெள்ளி விழா அரங்கில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு ஆளுநரும், பல்கலைக்கழகங்களின் வேந்தருமான ஆர்.என். ரவி சிறப்பிடம் (Medalists) பெற்ற மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்ற பின், முதன்முறையாக பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்.
பட்டமளிப்பு விழாவில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், ''இந்தியாவிற்கே முன்மாதிரி பல்கலைக்கழகமாக எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. கொரோனா காலக்கட்டத்தில் மிக சிறப்பாக செயல்பட்டுள்ளது இந்த பல்கலைக்கழகம். கலைஞரால் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் என பெயர் சூட்டப்பட்டது. தனி மனிதர்களாக இருந்து பட்டம் பெற இருக்கும் மாணவர்களாகிய நீங்கள் இன்று நாட்டுக்கு சேவையாற்ற வருகிறீர்கள்.
image
 இதுவரை வீட்டுக்கு பிள்ளையான நீங்கள் தற்போது நாட்டுக்கு பிள்ளையாக மாறியிருக்கிறீர்கள். வள்ளுவரின் ’நோய் நாடி’ எனும் குறளுக்கு ஏற்ப செயல்படுங்கள். தமிழக அரசு நிச்சயம் உங்களுக்கு உறுதுணையாக இருக்கும். ’வருமுன் காப்போம்’ எனும் திட்டங்கள் மூலம் பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு மருத்துவ சேவையாற்றினோம். குழந்தைகள் உயிர் காத்திட அறுவைசிகிச்சைக்கு அதிக நிதி கொடுத்தவர் கருணாநிதி. இளம் சிறார் இருதய அறுவை சிகிச்சை திட்டத்தை கருணாநிதி கொண்டு வந்தார். 44 லட்சம் மக்கள் இதுவரை, ’மக்களை தேடி மருத்துவம்’ எனும் திட்டத்தின் மூலம் பயன்பெற்றுள்ளனர். தமிழ்மொழியில் மருத்துவ நூல்களை மொழிபெயர்த்து உள்ளோம். 8 கோடி தடுப்பூசிகள் இதுவரை செலுத்தப்பட்டுள்ளது. 30 லட்சம் தடுப்பூசி ஒரே நாளில் செலுத்தப்பட்டுள்ளது. கிராமப்புற மருத்துவ சேவை மிக சவாலாக உள்ளது. இங்கு பட்டம் பெற்ற மாணவர்கள் கிராமப்புறங்களில் மருத்துவ சேவையாற்ற வேண்டும் என்று வேண்டுகோள் வைக்கிறேன்'' என்றார்.
ஆளுநர் ஆர்.என். ரவி பேசுகையில், 'வலிமையான முதலமைச்சரே' என்று தனது உரையைத் தொடங்கினார். அவர் உரையாற்றுகையில், ''இன்று என்ன சாதித்தீர்களோ, அது உங்களின் அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பால் சாத்தியமாகி உள்ளது. அர்ப்பணிப்பு, கடின உழைப்பு எப்போதும் உங்களை உயர்த்தும். எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் கல்வி, சேவை, ஆராய்ச்சியில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கொரோனா இன்னும் போகவில்லை. புதுப்புது வகைகளில் வந்துகொண்டே இருக்கிறது. கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றுவதால், வாழ்க்கை முறையை பாதுகாப்பானதாக வைத்துக்கொள்ள முடியும்.

 
image
மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் மக்களின் நல்வாழ்வு மிக முக்கியமானதாக உள்ளது. ஏழைகளுக்கு மருத்துவம் எளிதில் கிடைக்கும் நிலையை உருவாக்க வேண்டும். இந்தியாவிலேயே சுகாதாரத் துறையில் தமிழ்நாடு முன்னிலை வகிக்கிறது. தவிர்க்கமுடியாத வகையில் சேவைத்துறை வணிகமயமாகி வருகிறது. சந்தை என்றால் அனைத்துக்கும் விலை இருக்கும். மதிப்புமிக்க சேவைத்துறை வணிகமயமாகி விடக்கூடாது. மருத்துவர்கள், நோயாளிகள் சொல்வதை முதலில் கேட்க வேண்டும். அந்தக்கலையை மருத்துவர்கள் முதலில் கற்றுக்கொள்ள வேண்டும். நோயாளிகளை திறந்த மனதுடன் அணுக வேண்டும். தினந்தோறும் கற்றுக்கொண்டு, அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
 
சமுதாயத்தின் விலைமதிக்க முடியாத சொத்துக்களான மருத்துவர்கள், தங்கள் உடல்நலனை சரியாக பராமரிக்க வேண்டும். கடும் அழுத்தம் நிறைந்ததாக மருத்துவர்களின் வாழ்வு இருந்தாலும், அவர்கள் தங்கள் உடல்நலன், மன நலனை சரியாக பார்த்துக்கொள்ள வேண்டும். யோகா உள்ளிட்ட உடற்பயிற்சிகள் செய்து உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டும். 941 முதல் 950 வரையிலான திருக்குறள்களின் படி வாழ வேண்டும்'' என்றார்.
 
நிறைவாக எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் சுதா ஷேஷைய்யனின் ’Pandemic and Problems : Lessons for recovery and resilience’ என்ற ஆங்கில நூலை ஆளுநர் வெளியிட, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெற்றுக்கொண்டார்.
 
Advertisement:

Advertisement

Advertisement
[X] Close