[X] Close

டி20 உலகக் கோப்பை யாருக்கு? போட்டியின் முடிவை மாற்றும் 5 முக்கிய வீரர்கள்!

விளையாட்டு,சிறப்புக் களம்

Australia-vs-New-Zealand-5-match-winners-to-watch-out-for-in-T20-World-Cup-final
டி20 உலகக் கோப்பையை வெல்லப் போவது யார்? என்பதை நிர்ணயிக்கும் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் துபாயில் இன்று மோதுகின்றன. ‘சூப்பர் 12’ சுற்றில் தோல்வியை சந்திக்காத பாகிஸ்தானை வீழ்த்திய ஆஸ்திரேலிய அணி, கோப்பையை வெல்லும் வாய்ப்பில் முன்னணியில் இருந்த இங்கிலாந்தை வீழ்த்திய நியூசிலாந்து அணி என, அரையிறுதி சுற்றில் அசுர பலத்துடன் மோதி வென்ற இவ்விரு அணிகள் இறுதிப்போட்டியில் பலப்பரீட்சை நடத்துகின்றன.
 
ஒருநாள் உலகக் கோப்பையை 5 முறை வென்ற ஆஸ்திரேலிய அணி, இதுவரை டி20 உலகக் கோப்பையை வென்றதில்லை. இதுவரை நான்கு முறை அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளது. 2010-ஆம் ஆண்டில் இறுதிப்போட்டி வரை முன்னேறி இங்கிலாந்திடம் கோட்டை விட்டது ஆஸ்திரேலியா.
 
image
நியூசிலாந்து இறுதி சுற்றை அடைந்திருப்பது இதுவே முதல்முறை. அதனால் யார் மகுடம் சூடினாலும் அவர்களுக்கு இது முதலாவது 20 ஓவர் உலகக்கோப்பையாக இருக்கும். இரு அணிகளும் சம பலத்துடன் உள்ளதால் யார் கோப்பையை வெல்வார்கள் என்பது கணிக்க முடியாத ஒன்றாக உள்ளது. ஏனெனில் இரு அணியிலும் ஆட்டத்தின் போக்கை எந்த நேரத்திலும் மாற்றக்கூடிய திறன் உள்ள வீரர்கள் உள்ளனர். அவர்களில் குறிப்பிடத்தக்க 5 வீரர்களை இங்கே காணலாம்.
 
image
டேவிட் வார்னர்
 
மோசமான ஃபார்ம் காரணமாக 2021 ஐபிஎல் சீசனின் நடுப்பகுதியில் டேவிட் வார்னரிடம் இருந்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் பதவி பறிக்கப்பட்டது. ஐக்கிய அரபு அமீரகத்துக்கு வந்தபின் சில போட்டிகளில் வார்னர் எதிர்பார்த்த பேட்டிங் செய்யவில்லை என்பதால், அவர் பெஞ்சில் அமர வைக்கப்பட்டார். இதனால் டேவிட் வார்னர் பேட்டிங் ஃபார்ம் மீது விமர்சனங்கள் கடுமையாக எழத் தொடங்கின. அவை அனைத்துக்கும் நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் தனது பேட்டிங் மூலம் வார்னர் பதில் அளித்தார்.
 
இதுவரை 6 போட்டியில் 2 அரை சதங்கள் உட்பட 236 ரன்கள் குவித்து மிரட்டலான 'பார்மில்' உள்ளார் வார்னர். அவர் மீண்டும் ஃபார்முக்கு திரும்பியது ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங் வரிசையை மேலும் பலப்படுத்தியுள்ளது. இன்றைய போட்டியில் வார்னர் தொடக்க வீரராக மிரட்டலாக ஆடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
image
கேன் வில்லியம்சன்
 
உலககெங்கிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களால் கொண்டாடப்படும் கேப்டனாக திகழ்பவர் கேன் வில்லியம்சன். 2019 ஒருநாள் உலகக் கோப்பைப் போட்டி, 2021 டெஸ்ட் உலக சாம்பியன்ஷிப் போட்டி, 2021 டி20 உலகக் கோப்பைப் போட்டி என கடந்த 3 வருடங்களில் 3 உலகக் கோப்பைப் போட்டிகளில் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளது நியூசிலாந்து அணி. இந்த மூன்று தொடர்களிலும் கேப்டனாக செயல்பட்டு சாதித்துள்ளார் கேன் வில்லியம்சன்.
 
இதுவரை கிரிக்கெட் வரலாற்றில் எந்தவொரு கேப்டனும் ஒரே ஆண்டில் தனது அணிக்கு இரண்டு ஐசிசி பட்டங்களை பெற்று கொடுத்தது இல்லை. இன்றைய போட்டியில் நியூசிலாந்து வெற்றி பெறும் பட்சத்தில் அந்த பெருமைக்கும் கேன் வில்லியம்சன் சொந்தமாவார். தனது நுணுக்கமான ‘ஷாட்’களை ஆடி எதிரணி பந்து வீச்சாளர்களுக்கு சவால் அளிக்கும் வில்லியம்சன், பீல்டிங்யின் போதும் நெருக்கடியான சூழலில் ‘கூலாக’ செயல்பட்டு அணியை வெற்றிப்பாதையில் வழிநடத்துபவர். வரலாற்று சிறப்புமிக்க வெற்றி வாகை சூடுவாரா கேன் வில்லியம்சன் என்பதனை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
 
image
ஆடம் ஜம்பா
 
நடப்பு தொடரில் தனது மாயாஜால சுழல் பந்துவீச்சில் ஆதிக்கம் செலுத்தி வருகிறார் ஆடம் ஜம்பா. இந்த தொடரில் 6 ஆட்டங்களில் 12 விக்கெட்டுகள் சாய்த்து அருமையான ஃபார்மில் இருக்கிறார் அவர். எதிரணியின் ரன் ரேட்டை ‘ஸ்பீடு ப்ரேக்கர்’ போட்டு நிறுத்துவதில் கைதேர்ந்தவர். நியூசிலாந்தின் பலவீனமான மிடில் ஆர்டர், ஜம்பாவின் சுழலில் சிக்கிவிடும் அபாயம் அந்த அணிக்கு இருக்கிறது.
 
image
இஷ் சோதி
 
சுழல் மிரட்டலில் ஆஸ்திரேலியாவுக்கு ஆடம் ஜம்பா எப்படியோ, அதேபோல் நியூசிலாந்து அணிக்கு இஷ் சோதி. ஒவ்வொரு போட்டிகளிலும் முதல் ஓவரிலேயே விக்கெட்டை கைப்பற்றி எதிரணியின் பேட்டிங் வரிசையை சீர்குலைப்பதில் மாயாஜால பவுலர். அரையிறுதியில் இங்கிலாந்துக்கு எதிராக ஆட்டத்தில்கூட, தனது இரண்டாவது ஓவரின் முதல் பந்திலேயே ஜோஸ் பட்லரின் விக்கெட்டை சாய்த்து ரன் உயராமல் பார்த்துக்கொண்டவர் அவர். இன்றைய ஆட்டத்தில் இஷ் சோதியின் சுழலில் வீழாமல் விக்கெட்டை தற்காத்துக் கொள்வது என்பது ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களுக்கு சற்று சவாலாகவே இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
 
image
கிளென் மேக்ஸ்வெல்
 
நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் கிளைன் மேக்ஸ்வெலிடம் (6 ஆட்டத்தில் 36 ரன்) இருந்து இதுவரை பெரிய அளவில் அதிரடி வெளிப்படவில்லை. ஆனால் மிக முக்கியமான ஆட்டங்களில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தும் அபாயகரமான வீரர் ஆவார். அவ்வகையில் இன்றைய முக்கியமான ஆட்டத்தில் மேக்ஸ்வெல் பேட்டிங்கில் மிரட்டுவார் என எதிர்பார்க்கலாம். தவிர பகுதிநேர பந்து வீச்சாளராகவும் மேக்ஸ்வெல் அணிக்கு கைக்கொடுப்பார்.
 
Advertisement:

Advertisement

Advertisement
[X] Close