Published : 06,Nov 2021 08:42 PM

நியூசிலாந்தை வீழ்த்துமா ஆப்கான்? டி20 உலகக்கோப்பையில் பெரிய அணிகளை வீழ்த்திய சின்ன அணிகள்!

Does-Afghanistan-give-upset-to-New-Zealand-by-winning-them-and-recap-of-upsets-given-by-small-teams-to-big-cricket-playing-Countries

நடப்பு டி20 உலகக் கோப்பையில் இந்திய கிரிக்கெட் அணி அரையிறுதி போட்டியில் விளையாட தகுதி பெற வேண்டுமென்றால் அது ஆப்கானிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் இடையே நடைபெறும் ஆட்டத்தின் முடிவை பொருத்தே அமையும். இந்த போட்டியில் நியூசிலாந்தை ஆப்கானிஸ்தான் அணி 9 ரன்களுக்கும் குறைவாக வீழ்த்த வேண்டும். அது நடந்தால் இந்தியா தகுதி பெற வாய்ப்பு உள்ளது. 

image

அந்த ‘அதிசய மற்றும் அற்புத’மிக்க வெற்றியை ஆப்கானிஸ்தான் பதிவு செய்யுமா என ஒட்டுமொத்த இந்திய கிரிக்கெட் ஆர்வலர்களும் அந்த போட்டியை எதிர்நோக்கி உள்ளனர். 

இந்த வேளையில் உலகக் கோப்பை அரங்கில் வளர்ந்து வரும் சின்னஞ்சிறிய அணிகள், சர்வ வல்லமை பொருந்திய வெயிட்டான அணிகளுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளன. 

50 ஓவர் உலகக் கோப்பை தொடரை பொறுத்தவரையில் 2007, 50 ஓவர் உலகக் கோப்பை தொடரில் இந்தியா, வங்கதேச அணியிடமும், பாகிஸ்தான், அயர்லாந்து அணியிடமும் தோல்வியை தழுவியுள்ளன. கடந்த 2011, 50 ஓவர் உலகக் கோப்பையில் இங்கிலாந்து, அயர்லாந்து அணியிடம் தோல்வியை தழுவி இருந்தது. 

இப்படியான சில அதிர்ச்சி அளிக்கும் தோல்விகளை டி20 உலகக் கோப்பையிலும் குட்டி அணிகள் கொடுத்துள்ளன. அதை இப்போது பார்க்கலாம். 

image

ஆஸ்திரேலியா vs ஜிம்பாப்வே!

கடந்த 2007, டி20 உலகக்கோப்பை தொடரில் 50 ஓவர் உலகக் கோப்பையை தொடர்ச்சியாக மூன்று முறை வென்றிருந்த ஆஸ்திரேலிய அணியை ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இருந்தது ஜிம்பாப்வே. 

image

வங்கதேசம் VS வெஸ்ட் இண்டீஸ்!

பவர் ஹிட்டர்கள் அதிகம் நிறைந்த வெஸ்ட் இண்டீஸ் அணி, வங்கதேச அணிக்கு எதிரான 2007, டி20 உலகக்கோப்பை குரூப் சுற்று போட்டியில் 164 ரன்களை குவித்தது. அதை சேஸ் செய்த வங்கதேச அணி 18 ஓவர்களில் 165 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.

image 

நெதர்லாந்து VS இங்கிலாந்து!

2009 டி20 உலகக்கோப்பை தொடர் இங்கிலாந்தில் நடைபெற்றது. தொடரை நடத்தும் அணி என்ற அந்தஸ்துடன் களம் இறங்கிய இங்கிலாந்து அணி, நெதர்லாந்துக்கு எதிராக 20 ஓவர்களில் 162 ரன்களை எடுத்தது. அதை விரட்டிய நெதர்லாந்து அணி கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்றது. 

image

ஆப்கானிஸ்தான் VS வெஸ்ட் இண்டீஸ்!

கடந்த 2016 டி20 உலகக் கோப்பையை வென்றது வெஸ்ட் இண்டீஸ் அணி. ஆனால் அந்த அணியை 2016 தொடரில் வீழ்த்திய ஒரே அணியாக திகழ்ந்தது ஆப்கானிஸ்தான். சூப்பர் 10 - குரூப் 1 சுற்றுப் போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் விளையாடின. முதலில் பேட் செய்த ஆப்கான் அணி 20 ஓவர்கள் விளையாடி 123 ரன்களை எடுத்தது. சுலப இலக்கை விரட்டிய வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவர்களில் 117 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வி கண்டது. 

ஸ்காட்லாந்து VS வங்கதேசம்!

பல அணிகளுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளது வங்கதேச கிரிக்கெட் அணி. அப்படிப்பட்ட அணியை நடப்பு டி20 உலகக் கோப்பையின் முதல் சுற்று போட்டியில் வீழ்த்தி அசத்தியிருந்தது ஸ்காட்லாந்து அணி. 

image

இப்படியாக குட்டி அணிகள் வலுவான அணிகளை தங்களது அசத்தலான ஆட்டத்தின் மூலம் ஆட்டம் காண செய்துள்ளன. அதில் ஆப்கானிஸ்தான் அணியும் ஒன்றாக உள்ளது. அந்த அணியின் பலமே பந்து வீச்சு தான். முஜீப், ரஷீத், நபி என மூன்று ஆஸ்தான சுழற்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். அதில் முஜீப் காயம் காரணமாக கடந்த இரண்டு போட்டிகளாக விளையாடாமல் உள்ளார். நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் அவர் அணியில் இடம் பெறுவதும் ஆப்கான் அணிக்கு பலமாக அமையும். அதனால் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் ஆப்கானிஸ்தான் வீரர்கள் ‘மிராக்கிள்’ செய்தாலும் செய்யலாம். அது இந்தியாவுக்கு சாதகமாக அமையவும் வாய்ப்புள்ளது.  

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்