Published : 04,Nov 2021 12:55 PM

குறையாத ரஜினியின் மாஸ்.. அண்ணன் தங்கை பாசம் - எப்படியிருக்கிறது அண்ணாத்த?

Annaatthe-movie-detail-review

தஞ்சை மாவட்டத்தின் சூரக்கோட்டையில் ஊராட்சி மன்ற தலைவராக இருக்கும் காளையன், அடிதடி, சண்டை, பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவது என அந்த ஊரின் செல்வாக்கு மிக்க நபர். தாய், தந்தையற்ற காளையனுக்கு எல்லாமே தங்கச்சி தங்க மீனாட்சிதான். பாசம் கொட்டி வளர்க்கும் தங்கைக்கு வரன்பார்த்து திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. திருமணத்தன்று தங்கை மீனாட்சி காணவில்லை என்றதும் குடும்பமே களேபரமாகிறது. தங்க மீனாட்சி எங்கே சென்றார், அவர் சிக்கிகொண்ட பிரச்னையிலிருந்து காளையன் அவரை மீட்டது எப்படி என திரைக்கதையாக விரிகிறது 'அண்ணாத்த'.

காளையனாக ரஜினி. கிராமத்து காளையாக மிரட்டுகிறார். அதே மாஸ்..அதே ஸ்டைல் கொஞ்சம் கூட குறையவில்லை. தங்கை பாசத்தில் உருகுவதாகட்டும், எதிரிகளை அடித்து துவம்சம் செய்வதாகட்டும், நயன்தாராவுடன் ரொமான்ஸ் என அனைத்து ஏரியாக்களிலும் அதகளம் செய்திருக்கிறார். ஃபுல் எனர்ஜியுடன் அருணாச்சலம் ரஜினியை பார்த்தது போல இருக்கிறது. தீபாவளி பட்டாசு போல திரையில் தெறித்திருக்கிறார்.

image

தங்க மீனாட்சியாக கீர்த்தி சுரேஷ், தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்துக்கு நியாயம் சேர்த்திருக்கிறார். ஆனால் அடிக்கடி 'அண்ணா' என்பதும், ரஜினி சென்டிமெண்டாக பேசும்போது க்ளோஷப் ஷாட்டில் கண்ணீர்வடிப்பதும், வில்லன்களிடம் அடிவாங்குவதாகவுமே கீர்த்தி சுரேஷ் வலம் வருகிறார். நயன்தாராவுக்கு முக்கியத்துவம் குறைவு என்ற போதிலும், அவர் திரையில் தோன்றும் காட்சிகள் அப்லாஸ் அள்ளுகின்றன. கேமியோ ரோலாக வரும் மீனா, குஷ்பு கவனத்தை ஈர்க்கின்றனர். பிரகாஷ்ராஜ், கஜபதி பாபு நடிப்பில் குறைவைக்கவில்லை.

படத்தின் இடைவேளைக்கு 10 நிமிடம் முன்பாக கதை தொடங்குகிறது. முதல் பாதி முழுவதும் சுவாரஸ்யமற்ற பலவீனமான திரைக்கதை பெரிய அளவில் ரசிகர்களை ஈர்க்கவில்லை. அங்காங்கே சில காட்சிகள் ஈர்த்தாலும் பெரும்பாலான காட்சிகள் தேமே என நகர்கிறது. காவல்நிலையத்தில் பிரகாஷ்ராஜூக்கு முன்பாக ரஜினி பேசும் வசனங்கள், சூரி, சத்யன், சதீஷ் காமெடி காட்சிகளில் திரையரங்கு முழுவதும் அமைதியே நீடிக்கிறது. சில ரசிகர்கள் மெனக்கெட்டு சிரிக்கவேண்டிய நிலை. வசனத்திலும், நகைச்சுவை காட்சிகளிலும் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்!

image

அதேபோல மீனா, குஷ்பு வெயிட்டான வின்டேஜ் ஹீரோயின்களின் காட்சிகளை எதிர்பார்த்து காத்திருந்தபோது, சில இடங்களில் ஓவர் ஆக்டிங்கும், சுவாரஸ்யமற்ற ஏமாற்றமும் மிஞ்சுகிறது. 'சம்பாதிச்ச காசுல வியர்வை இருக்கணும், அடுத்தவன் கண்ணீர் இருக்க கூடாது' 'உண்மைய விட நியாயம் பெருசு' போன்ற தத்துவ வசனங்கள் ஆரம்பத்தில் ஈர்த்தாலும் கொல்கத்தா வில்லன்களிடம், அதுவும் சண்டைகாட்சிகளில் தத்துவம் பேசுவது சோர்வைத்தருகிறது.

படம் முழுக்க இயக்குநர் சிவாவின் முந்தைய படங்களின் சாயல்களை தவிர்க்க முடியவில்லை. விஸ்வாசம் படத்தில் மகளுக்காக அஜித் மும்பை செல்வதைப்போல, இந்த படத்தில் தங்கைக்காக ரஜினி கொல்கத்தா செல்கிறார். அதே பைக் சீன், இறுதி காட்சியில் 'என்சாமி' வசனத்துக்கு பதிலாக 'தங்க மீனாட்சி' என தங்கையை அழைப்பது என விஸ்வாசமும், வீரம் படத்தின் தங்கை காட்சிகளையும் அண்ணாத்த படத்தின் திரைக்கதை நினைவூட்டுகிறது.வில்லன்கள் அபிமன்யூ, கொல்கத்தாவில் வசிக்கும் தெலுங்கு வில்லன்போல இருக்கும் ஜகபதி பாபு கதையுடன்  ஒட்டாதது நெருடல்.

image

தமிழ்சினிமாவின் அண்ணன்- தங்கை பாசம் என்ற பிழிந்து சக்கையாக்கியதை மீண்டும் பிழிந்திருக்கிறார் சிவா. தங்கைக்காக அனைத்தையும் தியாகம் செய்யும் அண்ணன்கள், மாப்பிள்ளையே தேர்வு செய்யும்போது மட்டும் எல்லாவற்றையும் முடித்துவிட்டு 'உனக்கு ஓகேதானேமா' என கேள்விகேட்டுவிட்டு முழுமையான பதிலை கூட கேட்காமல் துள்ளி குதிப்பது தமிழ் சினிமாவின் மாறாத டெம்ப்ளேட். அண்ணன் தங்கை என வழியும் பாசத்தில் தங்கைக்கு விருப்பமான துணையை தேர்ந்தெடுப்பதில் மட்டும் சொதப்புவது ஆகச்சிறந்த முரண்பாடு. சம்பந்தம் பேசுகையில், 'உங்க குல சாமியும், எங்க குல சாமியும் ஒன்னுதான் கல்யாணம் பண்றதில பிரச்னையில்லை' என பிரகாஷ்ராஜ் மனைவி பேசும் வசனத்தின் மூலம் என்ன சொல்ல வருகிறார் சிவா?.

Grandfather' Rajinikanth screens 'Annaatthe' for his family and grandson - The Hindu

வெற்றியின் ஒளிப்பதிவு படத்துக்கு பலம் சேர்க்கிறது. "சார சார காத்தே" பாடல் காட்சிகள் ஈர்க்கின்றன. இசையில் இமான் மெனக்கெட்டிருக்கலாம் என தோன்றுகிறது. அண்ணன் தங்கைக்குமான சென்டிமெண்ட் காட்சிகளில் ஈர்க்கும்படியான மியூசிக் மிஸ்ஸிங். சண்டை காட்சிகளில் பின்னணி இசையில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். திரைக்கதையில் சுவாரஸ்யத்தையும், விறுவிறுப்பையும், படத்தின் நீளத்தையும் குறைத்திருந்தால் அண்ணாத்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்திருக்கும். 

படத்தின் இறுதியில் ரஜினி கீர்த்தி சுரேஷிடம், 'நீ தப்பு பண்லமா, நான்தான் தப்பு பண்ணேன்' என கூறும் வசனம் அன்னிச்சையாக ரசிகர்களை நோக்கி சொல்வதாக அமைந்துவிட்டது. 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்