Published : 27,Oct 2021 09:39 PM
முதல் ஓவரில் 3 விக்கெட் வீழ்த்தி வரலாற்று சாதனை படைத்தார் நமீபியாவின் டிரம்பெல்மேன்!

நடப்பு டி20 உலகக் கோப்பையில் அரிதான சாதனையை படைத்துள்ளார் நமீபியா நாட்டு இடது கை வேகப்பந்து ரூபன் டிரம்பெல்மேன். டி20 கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக ஆட்டத்தின் முதல் ஓப்பனிங் ஓவரில் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தியதே அவர் படைத்துள்ள சாதனை. இதனை ஸ்காட்லாந்து அணிக்கு எதிரான சூப்பர் 12 சுற்று போட்டியில் நிகழ்த்தியுள்ளார் அவர்.
23 வயதான அவர் ஸ்காட்லாந்து பேட்ஸ்மேன்கள் ஜார்ஜ் முன்சி, கேலம் மேக்லியோட் மற்றும் அந்த அணியின் கேப்டன் ரிச்சி பெரிங்டன் என மூவரையும் முதல் ஓவரில் டக் அவுட் செய்தார். இந்த ஆட்டத்தில் 4 ஓவர்கள் வீசி 17 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்துள்ளார் அவர்.
அபுதாபியில் நடைபெற்று வரும் இந்த ஆட்டத்தில் 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 109 ரன்களை எடுத்துள்ளது ஸ்காட்லாந்து. தற்போது அந்த ரன்களை விரட்டி வருகிறது நமீபியா. 5 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 26 ரன்கள் எடுத்துள்ளது நமீபியா.