Published : 24,Oct 2021 06:27 PM

அதிகரிக்கும் குழந்தைகள் தற்கொலைகள்... பெற்றோர் தரப்பில் செய்ய வேண்டியதுதான் என்ன?

What-should-parents-do-to-stop-the-Rising-child-suicides

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையம் அருகே செல்போனில் விளையாடுவதை பெற்றோர் கண்டித்ததால் ஆத்திரமடைந்த 11ஆம் வகுப்பு மாணவி இன்று தற்கொலை செய்திருக்கிறார்.

‘தன் மகனை சான்றோன் எனக் கேட்ட தாய்’ என்ற வள்ளுவர் சொல்லுவார். அதற்கேற்றார்போலேயே பெற்றோர்கள் ஒவ்வொருவரும் தன் பிள்ளைகளை பேணி பாதுகாத்து வளர்த்து வருகின்றனர். அப்படி குழந்தைகளை வளர்க்கையில், சில சூழ்நிலையில் பெற்றோர்கள் பிள்ளைகளை கண்டிக்கும் சூழலும் ஏற்படுவதுண்டு. அப்படி கண்டிக்கும்போது பெற்றோரின் கண்டிப்பை பிள்ளைகள் தவறாக எடுத்துக்கொள்ளும் சூழல்களும், அதன் வெளிப்பாடாய் விபரீதமான முடிவுகளை நோக்கி பிள்ளைகள் செல்வதும் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. அப்படிப்பட்ட சம்பவம் தான் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே குருமந்தூரில் நடந்துள்ளது.

ஈரோடு மாவட்டம் குருமந்தூர் மேடு பகுதியை சேர்ந்த விவசாயி, குழந்தைவேல். இவருக்கு சந்தோஷ் என்ற மகனும் தக்சன்யா என்ற மகளும் உள்ளனர். தக்சன்யா கோபிசெட்டிபாளையத்தில் செயல்பட்டுவரும் தனியார் பள்ளியில் 11ம் வகுப்பு பயின்று வந்துள்ளார். இவர் கடந்த வருடத்தில் இருந்து கொரோனா தொற்று காரணமான பள்ளிகள் மூடப்பட்டிருந்த நிலையில் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்று வந்ததுள்ளார். ஒரு சில மாதங்களுக்கு முன்பு பள்ளிகள் திறந்த நிலையில் தக்சன்யா பள்ளிக்கு சென்று வந்துள்ளார்.

பள்ளி சென்று வீடு திரும்பிய பின்னர், கொரோனா காலத்தில் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்பதற்காக வாங்கிய தனது செல்போனில் தக்சன்யா அதிக நேரம் செலவிட்டு வந்துள்ளார். குறிப்பாக கேம் விளையாடிக் கொண்டு சரிவர படிக்காமல் இருந்து வந்துளார். இதனால் தக்சன்யாவை பெற்றோர் கண்டித்துள்ளதாக கூறப்படுகிறது. பெற்றோரின் கண்டிப்பால் மனம் உடைந்த நிலையில் வீட்டில் உள்ள அறையில் மின் விசிறியில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டு, எல்லோரையும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளார்.

image

இந்நிகழ்வை தொடர்ந்து, பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு மொபைல் கொடுக்கும்போது, அதை அவர்கள் அதை சரியாகப் பயன்படுத்துகிறார்களா என்று கண்காணிப்பது அவசியம் என்கின்றனர் குழந்தை நல ஆர்வலர்கள். மேலும், எப்போதுமே பெற்றோருக்கும் குழந்தைக்கும் இடையே ஆழமான பேச்சுவார்த்தை இருக்க வேண்டும். குழந்தைகளுக்கு ஏற்படும் தற்கொலை எண்ணத்தை தடுப்பதற்கு, மாவட்டம் தோறும் குழுக்கள் அமைக்கவேண்டும். அப்போதுதான் இதற்கு நிரந்தர தீர்வு கிடைக்கும். இம்முயற்சியில் மாநில அரசு இறங்கலாம்” என்று யோசனையும் சொல்கின்றனர்.

தொடர்புடைய செய்தி: ‘தற்கொலை தீர்வல்ல மாணவச் செல்வங்களே...’ - நீதிபதி கற்பக விநாயகம் சொன்ன குட்டி கதை!

மனநல ஆலோசகர்கள் கூறுகையில், “பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் ஒரு நாளைக்கு எத்தனை மணி நேரம் ஆன்லைனில் செலவிடுகிறார்கள் என்பதை கண்காணிப்பு அவசியமாகிறது. அதேபோல திடீரென அவர்களுக்கு செல்போன் கிடைக்காத சூழல் உருவாகும் பொழுது வளரிளம் பருவ குழந்தைகள் தற்கொலைக்கு முயற்சிக்க்கின்றனர். எனவே பெற்றோர் நடவடிக்கைகளைக்கூட தன்மையாக செய்ய வேண்டும். இதற்கு பெற்றோர்கள் குழந்தைகளிடம் அதிக நேரம் செலவிட வேண்டும். அப்போது அந்த குழந்தையின் தனித்திறமையை கண்டறிந்து அவர்களுக்கு பிடித்ததை பெற்றோர்கள் செய்ய முயற்சிக்கலாம். தனித்திறமையுள்ள குழந்தைகளை அதற்கு ஊக்குப்படுத்தவும் செய்யலாம்” என அறிவுரை வழங்குகிறார்கள்.

தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)

- சுபாஷ் பிரபு.

சற்று முன்எடிட்டர் சாய்ஸ்