Published : 22,Oct 2021 04:57 PM

மம்தா கட்சியின் உ.பி 'என்ட்ரி'... பாஜகவுக்கு குறி... சேதாரமாவதோ காங்.? - ஒரு பார்வை

Mamata-banerjee-plans-to-enter-Uttar-Pradesh-by-breaking-up-the-Congress

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கோவா, அசாம், திரிபுரா மாநிலங்களுக்கு அடுத்து உத்தப் பிரதேசம் மீது தனது கவனத்தை திருப்பியிருக்கிறார். இதற்காக இந்தியாவின் பழம்பெரும் கட்சியான காங்கிரஸின் கோட்டையில் ஒவ்வொரு செங்கலாக உருவத் தொடங்கியுள்ளார் மம்தா. கோவா, அசாம், திரிபுரா மாநிலங்களை அடுத்து உத்தப் பிரதேசத்திலும் அவரது பிளான் கைகொடுக்குமா என்பதை விரிவாகப் பார்ப்போம்.

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பிறகு மம்தா எடுத்து வரும் முயற்சிகள் பலவும் தேசிய அளவில் கவனம் பெற்றிருக்கின்றன. மேற்கு வங்கத்தைத் தாண்டி தனது கட்சியை காலூன்ற முயன்று வருகிறார். குறிப்பாக, பாஜக ஆளும் மாநிலங்களை 'டார்கெட்' செய்து அங்கே முகாம் அமைக்க தீவிர முயற்சி செய்து வருகிறார். மம்தாவின் இந்த ஆக்‌ஷன் பாஜகவுக்கு பாதிப்பை கொடுக்கிறதோ இல்லையோ நிச்சயம் காங்கிரஸுக்கு பாதிப்பை கொடுக்கிறது. ஏனென்றால் அவர் கைவைப்பது காங்கிரஸின் மடியில்தான்.

அசாம், திரிபுரா மாநில காங்கிரஸின் முக்கிய முகம் என அறியப்பட்டவர் சுஷ்மிதா தேவ். முன்னாள் மத்திய அமைச்சர் சந்தோஷ் மோகன் தேவின் மகள் இவர். மேற்கு வங்க வெற்றிக்கு அசாம், திரிபுராவில் காலூன்ற நினைத்து வரும் திரிணாமூல் இந்த இரு மாநிலங்களில் இருக்கும் இளம் தலைவர்களை வளைக்க திட்டமிட்டது. அதில் இருவர் குறிப்பிடத் தகுந்தவர்கள். ஒருவர் அசாம் அரசியலில் தற்போது கவனம் பெற்றுவரும் அகில் கோகாய், மற்றொருவர் சுஷ்மிதா தேவ். அகில் திரிணாமூல் கட்சியில் இணைய இன்னும் முடிவெடுக்காத நிலையில், சுஷ்மிதாவை தங்கள் பக்கம் இழுத்தார் மம்தா.

image

கட்சியில் இணைந்த உடனே சுஷ்மிதாவுக்கு ராஜ்ய சபா எம்.பி பதவி கொடுக்கப்பட்டது. இதே பாணியை கோவாவிலும் பின்பற்றினார் மம்தா. யூனியன் பிரதேசமான கோவாவில் அடுத்த வருடம் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் போட்டியிடுவதன் மூலம் நீண்ட வருடங்களுக்கு பிறகு கோவாவில் கால்பதிக்க முடியும் என நம்பும் மம்தா, இதற்காக இந்த முறையும் காங்கிரஸ் மடியில் தான் கைவைத்தார். கோவா முன்னாள் முதல்வரும், காங்கிரஸின் மூத்த தலைவருமான லூஸின்ஹோ ஃபெலிரோவை தங்கள் கட்சிக்கு இழுத்தார். பரம்பரை பரம்பரையாக காங்கிரஸ்காரராக இருந்துவந்த ஃபெலிரோ திரிணாமூல் கட்சியில் இணைந்தது காங்கிரஸ் தலைமையே எதிர்பாராத ஓர் அதிர்ச்சி. ஃபெலிரோ இணைந்ததோடு மட்டுமில்லாமல் தன்னுடைய படையே அப்படியே திரிணாமுலுக்கு மடை மாற்றிவிட்டார்.

இப்போது இந்தியாவின் பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசம் மீது மம்தாவின் பார்வை திரும்பியுள்ளது. அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் உத்தரப் பிரதேச தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ள திரிணாமூல், இங்கும் தனது கட்சியை பலப்படுத்த காங்கிரஸ் வேட்டையை தொடங்கியுள்ளார் எனத் தெரிகிறது. பிரியங்கா காந்தி உத்தரப் பிரதேச காங்கிரஸின் பொதுச் செயலாளராக பொறுப்பேற்ற பிறகு மாநில காங்கிரஸ் துணைத் தலைவர் பதவியை மாநிலத்தில் வெகுவாக இருக்கும் பிராமண சமூகத்தைச் சேர்ந்த லலிதேஷ் திரிபாதி என்பவருக்கு கொடுத்தார்.

image

முன்னாள் முதல்வர் கம்லா பாட்டியின் பேரனான இந்த திரிபாதி குடும்பத்துக்கும் நேரு குடும்பத்துக்கும் கிட்டத்தட்ட நான்கு தலைமுறை நெருங்கிய பழக்கம் இருக்கிறது. அப்படி இருந்தும் இந்த திரிபாதி 15 நாட்கள் முன் எந்தவித காரணமும் சொல்லாமல், தனது கட்சிப் பதவியை ராஜினாமா செய்தார். இவர் பதவி விலகியதும், சமாஜ்வாதி கட்சியில் சேரப்போவதாக தகவல்கள் சொல்லப்பட்டன. ஆனால் அனைவரது யூகங்களையும் பொய்யாக்கி இப்போது திரிபாதி திரிணாமூல் காங்கிரஸில் இணையவிருக்கிறார். இதனை அவரது ஆதரவாளர்களும் உறுதிப்படுத்தியுள்ள நிலையில், விரைவில் அதிகாரபூர்வ இணைப்பு விழா நடக்கவிருக்கிறது என்றும் தெளிவுபடுத்தியுள்ளனர்.

நான்கு தலைமுறைகளாக உத்தரப் பிரதேச காங்கிரஸில் ஆதிக்கம் செலுத்திய திரிபாதி குடும்பம், வாரணாசி, மிர்சாபூர் வட்டாரங்களில் மிகுந்த செல்வாக்குடன் இருக்கிறது. அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த லலிதேஷ் திரிபாதியை தங்கள் கட்சியின் முகமாக முன்னிறுத்தவது பலன் தரும் என்றும் திரிணாமூல் நம்புகிறது. மேலும், இவரை வைத்து மாநிலத்தின் காங்கிரஸ் பிரமுகர்களை வளைக்கவும் திட்டமிட்டு வருகிறது என்று சொல்லப்படுகிறது. ஆனால், திரிணாமூலின் இந்த `காங்கிரஸ் உடைப்பு' போக்கை காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கடுமையாக விமர்சிக்கத் தொடங்கியுள்ளனர்.

``பாஜகவை எதிர்க்க, காங்கிரஸை வலுப்படுத்துவதற்குப் பதிலாக திரிணாமூல் எங்கள் தலைவர்களை இழுத்து சில்மிஷம் செய்கிறது. இதை பார்க்கும்போது பாஜகவுடன் கைகோத்துக்கொண்டு திரிணாமூல் எங்கள் கட்சியை அழிப்பதாக தோன்றுகிறது" என்றுள்ளார் மக்களவையின் காங்கிரஸ் தலைவரும், எம்.பியுமான ஆதிர் சவுத்ரி.

கண்டனங்கள் ஒருபுறம் இருக்க, மறுபுறம் அரசியல் விவகாரங்கள் உத்தரப் பிரதேசத்தில் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன. தொடர்ந்து முக்கியத் தலைவர்களை தங்கள் பக்கம் இழுக்கத் தொடங்கியுள்ள திரிணாமூல், அகிலேஷ் யாதவுடன் கூட்டணி அமைக்க விருப்பம் தெரிவித்துள்ளது. இதேபோல் காங்கிரஸும் அகிலேஷின் சமாஜ்வாதி உடன் கூட்டணி அமைக்க முயல்வதாக தெரிகிறது.

மம்தா அடிக்கடி உச்சரிக்கும் வார்த்தை `கேலா ஹோப்' (Khela Hobey). `கேலா ஹோப்' என்ற வார்த்தையின் அர்த்தம் 'தொடங்கியது விளையாட்டு' என்பது. அவர் சொல்வதுபோல் உத்தப் பிரதேசத்தில் அரசியல் சித்து விளையாட்டுகள் இப்போது தொடங்கிவிட்டன. தேர்தலுக்கு இன்னும் நான்கு மாதங்களே இருக்கும் நிலையில், களம் நன்றாகவே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

- மலையரசு

| தொடர்புடைய செய்திக் கட்டுரை: 'உ.பி தேர்தல் களத்தில் மகளிருக்கு 40% சீட்'- பிரியாங்காவின் புது வியூகத்துக்குப் பின்னால்? |

சற்று முன்எடிட்டர் சாய்ஸ்