Published : 10,Sep 2021 03:24 PM

பவானிபூரில் மம்தாவின் வெற்றியை பறிக்க வியூகம் வகுத்த பாஜக

BJP-plans-to-stop-mamtha-s-bhawanipur-by-election-victory

மேற்கு வங்கத்தில் முதல்வராக நீடிக்க வேண்டுமென்றால் பவானிப்பூர் இடைத்தேர்தலில் ஜெயித்தே ஆகவேண்டும் என்ற நெருக்கடிக்கு மம்தா பானர்ஜிக்கு உள்ளாகியிருக்கும் சூழலில், அவரது வெற்றியை தடுக்க அத்தனை முயற்சிகளையும் தீவிரப்படுத்தியுள்ளது பாஜக.

நடந்து முடிந்த மேற்கு வங்க சட்டமன்ற தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை கண்டு நாடே அதிசயபட்டது. காரணம், அது திரிணாமுல் காங்கிரஸின் தொடர் மூன்றாவது வெற்றி. ஆனால் இந்த வெற்றி அளவுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது முதல்வர் மம்தா பானர்ஜியின் தோல்வி.

image

மம்தா தோல்வியுற முக்கிய காரணமாக அமைந்தது, தனது சொந்த தொகுதியான பவானிப்பூரை விடுத்து பாஜக விட்ட சவாலை நிறைவேற்றுவதற்காக நந்திகிராம் தொகுதியில் களம் கண்டது. அவர் நினைத்திருந்தால் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு இருக்கலாம். ஆனால் ஒட்டுமொத்த பாஜகவினரையும் அந்த ஒரு தொகுதியில் முகாமிட வைத்துவிட்டு மற்ற தொகுதிகளில் இறங்கி அடித்து தனது தேர்தல் வியூகத்தை வெற்றியாக்கினார் மம்தா. நந்திகிராம் தொகுதியில் மம்தா பானர்ஜியின் வெற்றி உறுதியானதுதான் என்றாலும் சொற்ப வாக்கு வித்தியாசத்தில் பாஜகவின் சுவேந்து அதிகாரியிடம் வெற்றி வாய்ப்பை இழந்தார். ஆனால் எனது தோல்வி ஒன்றும் பெரிய விஷயமல்ல கட்சியின் வெற்றியை கொண்டாடுவோம் என அப்போதே மம்தா பானர்ஜி கூறியிருந்தார்.

தொடர்புடைய செய்தி:மே.வ. இடைத்தேர்தல்: தனது கோட்டைக்கே திரும்பும் மம்தா... பாஜக போடும் ப்ளான் என்ன?

இருப்பினும் நவம்பர் 5ஆம் தேதிக்குள் பவானிப்பூர் தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினர் ஆகவில்லை என்றால் முதல்வர் பதவியை அவர் இழக்க நேரிடும். இதனால் வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி நடைபெறும் பவானிபூர் இடைத்தேர்தல் மம்தா பானர்ஜிக்கு அரசியல் ரீதியாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியுள்ளது.

பொதுவாக இடைத்தேர்தல்களில் ஆளும் கட்சியினர் வெற்றி பெறுவது வழக்கமான ஒன்றுதான். அதிலும் ஒரு மாநில முதல்வரை போட்டியிடுகறார் என்றால் வெற்றி வாய்ப்பு மிகவும் சுலபம் தான். மம்தா பானர்ஜியின் பாரம்பரியமான சொந்த தொகுதியான பவானிப்பூரில்தான் போட்டியிடுகிறார் என்பதால் எதிர்க்கட்சிகள் வேட்பாளர்களை நிறுத்துவதில் கூட தயக்கம் காட்டுவார்கள்.

image

ஆனால் மம்தா பானர்ஜியிடம் எதிர்க்கட்சிகள் அவ்வளவு சுலபமாக வெற்றியை விட்டுக் கொடுக்க பாஜக தயாராக இல்லை. அதை இந்த ஒரு இடைத்தேர்தலுக்கு எதிர்க்கட்சியினர் காட்டும் முனைப்பில் இருந்தே நாம் தெரிந்துக்கொள்ளலாம். தொகுதிக்கான தேர்தல் பார்வையாளராக நாடாளுமன்ற உறுப்பினரும் மேற்கு வங்க மாநில பாஜகவின் மாநில துணைத் தலைவருமான அர்ஜுன் சிங் நியமிக்கப்பட்டுள்ளார். இவை தவிர 2 துணை பார்வையாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களைத் தவிர ஒரு தேர்தல் பொறுப்பாளரும் மூன்று துணைப் பொறுப்பாளர்களும் என பவானிபூர் தொகுதியில் உள்ள 8 வார்டுகளில் ஒவ்வொருவருக்கும் தலா ஒரு சட்டமன்ற உறுப்பினர் தேர்தல் பணிகளுக்காக களம் இறக்கப்பட்டு உள்ளனர்.

இவர்களைத் தவிர பாரதிய ஜனதா கட்சியில் உள்ள நட்சத்திர பேச்சாளர்கள், சினிமா பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் என பல முக்கியஸ்தர்களும் பரப்புரைக்காக களமிறக்கப்பட்ட உள்ளனர். டெல்லி பாஜக தலைமையில் இருந்தும் பல முக்கிய தலைவர்கள் தேர்தல் பரப்புரைகளில் விரிவாக ஈடுபடுவார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இத்தகைய முயற்சிகளின் மூலம் நந்திகிராம் தொகுதியைப் போலவே பவானிபூர் தொகுதியிலும் மம்தாவின் வெற்றி வாய்ப்பை பறித்து விட பாஜக வியூகம் வகுத்து இருக்கிறது. இந்த வியூகத்தில் அக்கட்சி வெற்றி பெறுமேயானால் மம்தாவிற்கு அரசியல் ரீதியாக மிகப்பெரும் நெருக்கடி உருவாகக்கூடும். மேலும் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்காக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் அவரது முயற்சிகளுக்கும் இது முட்டுக்கட்டை போடலாம். மொத்தத்தில் ஒரு கல்லில் இரண்டு மாங்காய் என்ற குழியை பாஜக வைத்துள்ளது.

குறியில் மம்தாவின் நிலை என்னவாக மாறும் என்பது, பவானிபூர் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கு பின்பே தெரியும்.

- நிரஞ்சன்

சற்று முன்எடிட்டர் சாய்ஸ்