[X] Close

மீண்டும் பயங்கரவாதம் தொடர்பான பாடத்திட்டம்: சர்ச்சையில் டெல்லி ஜேஎன்யூ பல்கலைக்கழகம்?

இந்தியா,சிறப்புக் களம்

JNU-approved-a-counter-terrorism-course-that-links-Islamist-and-communist-terror

டெல்லி ஜேஎன்யூ பல்கலைக்கழகத்தில் பயங்கரவாதம் தொடர்பான புதிய பாடத்திட்டம் சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது. இது தொடர்பாக விரிவாக பார்ப்போம்!

image

இந்தியாவின் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் ஒன்று ஜேஎன்யூ எனப்படும் டெல்லி ஜவஹர்லால் நேரு அரசு பல்கலைக்கழகம். இந்தப் பல்கலைக்கழகத்தின் கல்வி கவுன்சில் சமீபத்தில் புதிய பாடத்திட்டத்தில் COUNTER TERRORISM என்கிற பயங்கரவாதத்தை எதிர்க்கும் வகையிலான கோர்ஸ் அறிமுகப்படுத்த ஒப்புதல் வழங்கி இருக்கிறது. 


Advertisement

"Counter Terrorism, Asymmetric Conflicts and Strategies for Cooperation among Major Powers'' எனப்படும் இந்த பாடத்திட்டத்தை மாஸ்டர் ஆஃப் சயின்ஸ், சர்வதேச தொடர்புகள் பிரிவு மாணவர்கள் கற்க சேர்க்கப்பட்டுள்ளது. இந்தப் பாடத்திட்டத்தில், `மத பயங்கரவாதத்தின் ஒரே வடிவம் ஜிஹாத்' என்றும், இந்த ஜிஹாத் பயங்கரவாதத்தை சீனா மற்றும் சோவியத் ரஷ்யாவில் ஆட்சி செய்து வரும் கம்யூனிச நாடுகளே ஊக்குவித்து உதவி வருகிறது என்றும் கூறப்பட்டுள்ளது எனத் தகவல் வெளியாகி இருக்கிறது. 

இதையடுத்து இந்த பாடத்திட்டம் தொடர்பான சர்ச்சைகள் வெடித்துள்ளன. அரசியல் உள்நோக்கத்துடன், கம்யூனிஸ்ட்களையும், இஸ்லாமியர்களையும் குறிவைத்து பயங்கரவாதிகளாக சித்தரித்து பாடத்திட்டம் வெளியிடத்தில் மத்தியில் ஆளும் பாஜகவின் பின்னணி இருக்கிறது என்று கம்யூனிஸ்ட் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் சந்தேகம் எழுப்பியிருக்கின்றனர்.

image


Advertisement

இதனிடையே, பாடத்திட்டம் எந்த விவாதமுன்றி தன்னிச்சையாக ஒப்புதல் கொடுக்கப்பட்டதாக ‘தி டெலிகிராப்’ பத்திரிகை தளத்துக்கு பேசிய ஜேஎன்யூ பல்கலைக்கழகத்தின் கல்வி கவுன்சில் உறுப்பினர் ஒருவர் தகவல் தெரிவித்திருக்கிறார். 

"பல்கலைக்கழகத்தின் தற்போதைய துணைவேந்தர் எம்.ஜெகதீஷ்குமார் ஆகஸ்ட் 17ம் தேதி கல்வி கவுன்சில் குழுவின் எந்தவித ஒப்புதலையும் பெறாமல், பாடதிட்டத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறார். இதில் இறுதி ஒப்புதல் கொடுக்கப்பட்டது எனக் கூறப்படுவது எல்லாம் வெறும் கண்துடைப்புதான்" என்று அந்த நபர் பேசியிருக்கிறார். 

இவர் மேலும் பேசுகையில், "இந்த பாடத்திட்டத்தின் மூன்றாம் பிரிவு, இஸ்லாமின் புனித நூலான `குர்ஆன்' மதத்தின் பெயரில் தற்கொலை, வன்முறை, பயங்கரவாதம், கொலையை புனிதப்படுத்துகிறது என்று குறிப்பிடுகிறது. மேலும், இஸ்லாம் மத குருமார்கள், இணையதளங்கள், சமூக வலைத்தளங்கள் மூலம் பயங்கரவாத கருத்துக்களை உலகம் முழுவதும் பரப்பி வருகின்றனர் என்றும் குறிப்பிடுகிறது" என்று கூறியிருக்கிறார். 

உதவி பேராசிரியர் அன்ஷு ஜோஷியுடன் இந்த பாடத்திட்டத்தை தயாரித்தவர்களில் ஒருவரான கனேடிய, அமெரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்க ஆய்வுகளுக்கான மையத்தின் தலைவர் அரவிந்த் குமார் என்பவரோ, "இது இந்தியாவின் பார்வையில் உருவாக்கப்பட்டுள்ளது. இஸ்லாமிய பயங்கரவாதம் எப்போதுமே இந்தியாவின் தேசிய பாதுகாப்புக்கு தீங்கு விளைவிக்கும். ஜிகாதி பயங்கரவாதம், தலிபான்கள் மற்றும் பாகிஸ்தானால் நிகழ்த்தப்பட்ட பல்வேறு பயங்கரவாத குழுக்களின் வெளிப்பாடாக பாடத்திட்டம் வெளிவந்துள்ளது" என்றுள்ளார். 

image

இதனிடையே, இந்த பாடத்தின் நான்காம் பிரிவு "அரசு ஆதரவு பயங்கரவாதம்" என்று குறிப்பிட்டு, "மேற்கத்திய நாடுகளுக்கும் சோவியத் யூனியனுக்கும் சீனாவுக்கும் இடையிலான கருத்தியல் போரின் போது அரசு ஆதரவு பயங்கரவாதம் பெரும்பாலும் இருந்தது. சோவியத் யூனியனும், சீனாவும் பயங்கரவாதத்தின் முக்கிய ஆதரவாளர்களாக இருந்தன. மேலும் அவர்கள் கம்யூனிச தீவிரவாதிகள் மற்றும் இஸ்லாமிய பயங்கரவாதிகளுக்கு தளவாட ஆதரவை வழங்கி உதவுவதோடு, இதுபோன்றவர்களுக்கு தங்களின் உளவுத்துறை நிறுவனங்களில் பயிற்சி அளிப்பதிலும் அதிக ஈடுபாடு கொண்டுள்ளனர்" என்பது போன்று குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

கடந்த 2018-ம் ஆண்டு இதேபோல் ஜேஎன்யூ பல்கலைக்கழகத்தில் தேசிய பாதுகாப்பு படிப்புகளில் ``இஸ்லாமிய பயங்கரவாதம்'' என்கிற பெயரில் ஒரு பாடம் சேர்க்கப்பட்டதும் கடுமையான எதிர்ப்பு கிளம்பிய பின், டெல்லி அரசின் சிறுபான்மையினர் நல ஆணையம் நேரடியாக தலையிட்டு நோட்டீஸ் அனுப்பிய பின்பு அது வாபஸ் பெறப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

தற்போது மீண்டும் இதுபோன்று சர்ச்சைக்குரிய பாடத்திட்டங்கள் சேர்க்கப்பட்டதை எதிர்த்து இடதுசாரி, முற்போக்கு இயக்கங்கள் ஆதிக்கம் கொண்ட ஜேஎன்யூ மாணவர்கள், கடும் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பினோய் விஸ்வம் இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு கடிதம் ஒன்றினை எழுதியுள்ளார்.

image

அந்தக் கடிதத்தில் இந்தப் படத்திட்டத்தை கண்டிப்பாக அனுமதிக்கக் கூடாது என்று வலியுறுத்தியுள்ளதோடு, வகுப்புவாத மற்றும் பிராந்திய ரீதியிலான அரசியல் சர்ச்சைகளுக்கும் வித்திடுகின்றது என அவர் விமர்சித்துள்ளார்.

- மலையரசு

இதையும் படிக்கலாம் : பாராலிம்பிக் : உயரம் தாண்டுதலில் வெள்ளி வென்றார் தமிழக வீரர் மாரியப்பன்


Advertisement

Advertisement
[X] Close