Published : 27,Aug 2021 10:04 PM

"தியேட்டர் அனுபவத்தை மிஸ் பண்றோம்!" - விஷ்ணுவர்தனின் 'ஷெர்ஷா'வுக்கு செம வரவேற்பு

Shershaah-would-have-joined-100-crore-club-if-it-had-released-in-big-screen

சமீபத்தில் ஓடிடி மூலம் வெளியான பாலிவுட் திரைப்படமான 'ஷெர்ஷா' படத்துக்கு கிடைத்திருக்கும் வரவேற்பு, பாலிவுட் வட்டாரத்தில் புதிய திருப்புமுனையாக அமைந்துள்ளது. நம்ம ஊரு விஷ்ணுவர்த்தன் இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு கிடைத்துள்ள வரவேற்பும், ரசிகர்கள் கோரிக்கை தொடர்பாக சற்றே விரிவாகப் பார்ப்போம்.

தமிழில் 'குறும்பு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் விஷ்ணுவர்தன். தொடர்ந்து 'அறிந்தும் அறியாமலும்', 'பட்டியல்', `சர்வம்' உள்ளிட்ட படங்களை இயக்கினார். அஜித்தின் `பில்லா', `ஆரம்பம்' படங்களையும் இயக்கினார். இதைத்தொடர்ந்து மூன்று வருடங்களாக படம் எதுவும் இயக்காமல் இருந்த விஷ்ணுவர்தன், தற்போது இந்தியில் ஒரு படத்தை இயக்கி இருக்கிறார்.

கார்கில் போரின்போது வீர மரணம் அடைந்த கேப்டன் விக்ரம் பத்ராவின் வாழ்க்கையை மையப்படுத்தி 'ஷெர்ஷா' எனும் படம் உருவாகி இருக்கிறது. அதில் விக்ரம் பத்ரா கதாப்பாத்திரத்தில் பாலிவுட் நடிகர் சித்தார்த் மல்ஹோத்ரா நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக நடிகை கியாரா அத்வானி நடித்துள்ளார்.

இப்படத்தின் பணிகள் அனைத்தும் கடந்த ஆண்டே முடிந்து ரிலீஸுக்கு தயாராகிவிட்டாலும், கொரோனா அச்சுறுத்தலால் வெளியாகாமல் இருந்தது. திரையரங்குகள் திறப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்பதை உணர்ந்து, இப்படத்தை கடந்த 12-ஆம் தேதி நேரடியாக ஓடிடியில் ரிலீஸ் செய்தது படக்குழு.

image

ஆரம்பத்தில் ஜூலை 3, 2020 அன்று படம் திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டது. ஆனால், கொரோனா முதல் லாக்டவுன் நீண்ட நாட்களுக்கு நீடித்ததால், ஒரு வருடம் வரை படம் வெளியிட முடியாமல் போனது. அதன்பின் ஜூலை 2, 2021-ம் தேதி படம் வெளியாகும் என்று இந்த ஆண்டு பிப்ரவரியில் அறிவித்தார் படத்தை தயாரித்த பிரபல இயக்குநர் கரண் ஜோஹர். துரதிர்ஷ்டவசமாக, கொரோனா இரண்டாவது அலை காரணமாக ஏப்ரல் மாதம் மீண்டும் லாக்டவுன் விதிக்கப்பட்டது. வேறு வழியில்லாமல் படத்தை நேரடியாக அமேசான் பிரைமில் வெளியிட முடிவு செய்தனர். அதன்படி, ஆகஸ்ட் 12 அன்று வெளியான `ஷெர்ஷா' விமர்சன ரீதியாகவும், பார்வையாளர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றது.

குறிப்பாக, விக்ரம் பத்ராவாக வாழ்ந்த சித்தார்த் மல்ஹோத்ராவுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது. நடிகர் கமல்ஹாசன் உட்பட பலர் படத்துக்கான வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர். இதனிடையே, `ஷெர்ஷா'வின் டிஜிட்டல் வெளியீடு குறித்து அதிருப்தி தெரிவித்துள்ள நிறைய நெட்டிசன்கள், படம் பெரிய திரையில் பார்ப்பதற்கு ஏற்ற பிரமாண்ட தயாரிப்பாக உருவாகி இருக்கிறது. இந்தப் படம் தியேட்டரில் வெளியாகி இருந்தால் மிகப்பெரிய வெற்றிப்படமாக இருந்திருக்கும். எனவே, தயாரிப்பாளர்கள் இன்னும் சில மாதங்கள் காத்திருந்து பெரிய திரையில் வெளியிட வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இதேபோல், சினிமா வர்த்தகத்தைத் தொடர்ந்து அலசி வரும் தரன் ஆதர்ஷ், ``ஷெர்ஷா படம் கொரோனா தொற்றுநோய்க்கு முன்பு வெளியிடப்பட்டிருந்தால், ரூ.100 கோடி வசூலை தாண்டியிருக்கும். ரூ.125 - 150 கோடி வரை வசூலிக்க வாய்ப்பிருந்திருக்கும். சித்தார்த் மல்ஹோத்ராவின் வாழ்க்கையில் ஷெர்ஷா திருப்புமுனையாக அமைந்துவிட்டது. படம் வெளியாகி 15 நாட்கள் ஆகியும், இப்போதுகூட, மக்கள் அதைப் பற்றி பேசிக்கொண்டிருக்கிறார்கள். இப்போதெல்லாம், திரைப்படங்களைப் பொறுத்தவரை மக்கள் பெரிதாக பேசிக்கொள்வதில்லை. வெளியீட்டிற்குப் பிறகு, அண்மைக் காலத்தில் இந்தப் படம் பெற்ற வரவேற்பு மிகவும் அரிது. அந்த வகையில், ஷெர்ஷா முற்றிலும் தனித்து தெரிகிறது" என்றுள்ளார்.

இதேபோல், வர்த்தக நிபுணர் கோமல் நஹத்ரா என்பவர், ``மக்கள் ஷெர்ஷாவை விரும்பிய விதத்தில் பார்க்கும்போது, அது தியேட்டரில் வெளியாகி இருந்தால் எளிதாக ரூ.100 கோடியை தொட்டிருக்கும். சித்தார்த் மல்ஹோத்ராவுக்கு இது ஒரு சிறந்த சாதனையாக இருந்திருக்கும்" என்றுள்ளார்.

image

இதனிடையே, படத்தின் ஓடிடி வெளியீடு குறித்து பேசியுள்ள தரன் ஆதர்ஷ், ``தியேட்டரிலிருந்து வரும் வருவாயை யார் விரும்ப மாட்டார்கள் சொல்லுங்கள். சில முடிவுகள் படத்தின் நலனுக்காகவே தவிர தனிநபரின் நலனுக்காக அல்ல. இந்தப் படம் திரையரங்குகளில் வந்திருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இதையே சித்தார்த் மல்ஹோத்ராவும் உணர்ந்திருப்பார் என்று நம்புகிறேன். தொற்றுநோய் இன்னும் இருக்கிறது என்பதால் இதுதான் சிறந்த வழியாக இருந்திருக்கும்" என்றுள்ளார்.

கோமல் நஹத்ராவோ, ``படத்தை எந்த மீடியத்தில் வெளியிட வேண்டும் என தீர்மானிப்பது தயாரிப்பாளரின் உரிமை. தயாரிப்பாளர்கள் தான் நன்மை தீமைகளை எடைபோட்டிருக்க வேண்டும். நேரடியாக ஓடிடியில் வெளிவந்தால் என்ன நடக்கும், காத்திருந்து தியேட்டரில் ரிலீஸ் செய்திருந்தால் என்ன நடக்கும் என்று யோசித்திருக்க வேண்டும். என்றாலும், நேரடி ஓடிடி வெளியீடு என்பது அவ்வளவு எளிமையான முடிவாக இருந்திருக்காது. ஏனென்றால், வட்டி, பட்ஜெட் போன்ற பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. இதைக் கருத்தில் கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கும்" என்றிருக்கிறார்.

'ஷெர்ஷா' படத்தின் வெற்றி பாலிவுட் நடிகர் சித்தார்த் மல்ஹோத்ரா திரைப்பட வாழ்க்கையில் ஒரு மைல்கல்லாக அமைந்திருக்கிறது. ஏனென்றால், அவரின் கடந்த சில படங்கள் தோல்வி முகத்தை தழுவியிருந்தன. இதனால் தற்போது பெற்றுள்ள வெற்றி பாலிவுட் வட்டாரத்தில் அவருக்கான மவுசை அதிகரித்துள்ளது. இந்த வெற்றி அவரை திரைப் பயணத்தில் அடுத்தகட்டத்துக்கு எடுத்துச் செல்ல உதவும் என நம்பப்படுகிறது. அதேபோல், தமிழகத்திலிருந்து பாலிவுட் சென்று கவனம் ஈர்த்த இயக்குநர்கள் பட்டியலில் இப்போது விஷ்ணுவர்தனும் இணைந்திருக்கிறார்.

- மலையரசு

சற்று முன்எடிட்டர் சாய்ஸ்