[X] Close

மரியாதை இல்லாததா சென்னை மொழி? - ஓர் அலசல் | #MadrasDay2021

சிறப்புக் களம்

Is-Chennai-Tamil-is-not-respectful-while-comparing-to-other-districts-An-insight-look

"சென்னையில பேசுறதெல்லாம் தமிழா? அந்த மொழியில ஒரு மரியாதையே இல்ல" என தென் தமிழகத்தில் இருந்து வரும் பெரும்பாலானவர்கள் இதை ஒரு குறையாக சொல்வார்கள் அல்லது ஏளனமாக பார்ப்பார்கள். உண்மையில் சொல்ல வேண்டுமென்றால் மதுரை தமிழ், கொங்கு தமிழ், கரிசல் தமிழ், நாஞ்சில் தமிழ், ஈழத் தமிழ்போல சென்னைத் தமிழும் ஒரு வட்டார வழக்குதான். தமிழகத்தின் அனைத்து வட்டார வழக்குகளையும் போலவே தன்னை சுற்றி இருக்கும் இயல்பான காரணங்களால் உருவாகி காலம்காலமாக தொடர்ந்து இப்போதும் சென்னை தமிழ் பேசப்பட்டுதான் வருகிறது.


Advertisement

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வருபவர்களுக்கு முதலில் சென்னை தமிழ் ஏதோ "ஏலியன்கள் மொழி" போல தோன்றினாலும், ஆண்டுகள் உருண்டோட இந்த வட்டார வழக்குக்கு அவர்களும் பழகிப்போவார்கள். பேசவும் தொடங்கி விடுவார்கள். எல்லா வட்டார வழக்குகளிலும் கெட்ட வார்த்தைகள் இருக்கிறது. அதேபோலதான் சென்னை மொழியிலும் கெட்ட வார்த்தைகள் இருக்கிறது. ஆனால் என்னமோ சென்னைக்காரர்கள்தான் கெட்ட வார்த்தைகள் பேசுகிறார்கள் என்பதுபோல ஒரு பொய்யான பிம்பம் கட்டமைக்கப்படுகிறது. சென்னை தமிழை கிண்டல் செய்யும் வெளியூர்காரர்கள் பலருக்கும் தமிழின் "ழ" வார்த்தையை சரிவர உச்சரிக்க தெரியாது. ஆனால் சென்னை பூர்வகுடி மக்கள் "ழ"வை அழகாக உச்சரிப்பார்கள்.

இதில் உச்சக்கட்ட கொடுமை என்றால் சென்னை பாஷையை கிண்டல் செய்யும் சொந்த ஊர்காரர்களும் இருக்கிறார்கள். பெரும்பாலும் சென்னை மொழியை ஏளனப்படுத்துபவர்கள் புதிதாக விரிவடைந்திருக்கும் சென்னையின் மேட்டுக்குடி மக்களாகவே இருக்கும். அதாவது போயஸ் தோட்ட வாசிகளுக்கு பார்டர் தோட்ட மொழியை பிடிப்பதில்லை என்பதே நிதர்சனம். சென்னை மொழியில் பெரும்பாலும் பிறமொழி பாதிப்பு இருக்கும். அதாவது சென்னை ஒரு காலத்தில் ஒருங்கிணைந்த மெட்ராஸ் மாகாணம். அதனால் ஆங்கிலம், தெலுங்கு, உருதி, இந்தி மொழி பேசுபவர்கள் அதிகம் இருந்ததால், இந்த வட்டார வழக்கில் அதன் கலப்புகள் இருக்கும்.


Advertisement

நைனா, டப்பு, துட்டு, நாஷ்டா, கோசரம் திட்டுவதற்காக பயன்படுத்தப்படும் கசமாலம் ஆகியவை பிறமொழி கலப்பில் இயல்பாக தமிழுடன் கலந்து சென்னையின் வட்டார வழக்காக மாறியது. இதுதான் எதார்த்தம். எப்படி நாஞ்சில் வட்டார வழக்கில் மலையாள மொழியின் தாக்கம் இருக்கிறதோ அதுபோலதான் சென்னை தமிழில் இருக்கும் தாக்கங்கள். இவை தான் இந்த மொழியின் பேச்சு வழக்கிலும் காணலாம். குதிரையை குதர, கழுதையை கய்த என பேசும்போது பயன்படுத்தப்படுகிறது. கெட்ட வார்த்தைகளை பயன்படுத்தும்போது அதில் பெரும்பாலும் பெண்களை வைத்துதான் கூறப்படுகிறது. இது சென்னை மொழியில் அதிகம் என கூறுவார்கள். இப்படி கூறுபவர்கள் சற்றே மற்ற வட்டார வழக்குகளையும் கவனத்துடன் காது கொடுத்த கேட்கவேண்டும்.

image

இன்னாபா... ஷோக்கா கீறியா?... நாஷ்டா துன்னுக்கினியா? என்று யாராவது விசாரித்தால் மெர்சலாகிவிடாதீர்கள்.. அதாவது மிரண்டு விட வேண்டும். அக்மார்க் மெட்ராஸ்வாசிகளின் அன்பின் வெளிப்பாடாக கரைபுரண்டு வரும் வார்த்தை வெள்ளத்தின் நட்புத்துளிகள்தான் அவை. என்னப்பா உன் கூட படா பேஜாரா போச்சுபா... சரியான பஜாரியா இருக்குறா இவ.... போன்ற சொல்லாடல்கள்.


Advertisement

கெரோசினை கிருஷ்ணாயில் என்று மாற்றியதும் சென்னைக்காரர்கள்தான். பொதுவாக ஒவ்வொரு வட்டார வழக்கையும் ரசிக்க வேண்டும். எந்த ஊர் வட்டார வழக்கும் கேவலமானதும் இல்லை ஒதுக்கப்பட்டதும் இல்லை. மிக முக்கியமாக ஒடுக்கப்பட்டவர்களின் மொழிதான் சென்னையின் வட்டார வழக்கு என்று கூட சொல்லலாம்.

image

இது குறித்து "மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்", "வெட்டுப்புலி" ஆகிய நாவல்களை எழுதிய எழுத்தாளர் தமிழ்மகன் கூறியது "சென்னை மக்கள் எதையும் எளிதாக எடுத்துக்கொள்ள கூடிய மனம் படைத்தவர்கள். அதேதான் அவர்களின் பேச்சு வழக்கிலும் இருக்கும். அதாவது வந்தாரை வாழ வைக்கும் சென்னைப்போல, சென்னையின் தமிழிலும் பல மொழிகள் சங்கமித்திருக்கும். தெருவிலோ சாலையிலோ இரண்டு பேர் குடித்துவிட்டு சண்டை போடுகிறார்கள் என்றால் அதனை பார்க்கும் சென்னை வாசி "குஷ்ட்டு அஷ்டாம்பா" என்று எளிதாக சொல்லிவிட்டு கடந்துவிடுவார்.

சென்னை மக்களின் மனதை இந்த மொழி எளிதாக சொல்லிவிடும். "என்னப்பா" என்ற வார்த்தை இங்கு பயன்படுத்தப்படும் அன்பான வார்த்தை. முதலில் சென்னைக்கு வரும் தென் மாவட்ட மக்கள் இதை புரிந்துக்கொள்வதில்லை. அதிகப்படியான அன்பை செலுத்தும் மக்களின் மொழி இயல்பாகத்தான் இருக்கும். "என்னாப்பா" என்ற வார்த்தை ஒருமையில் அழைப்பதாக பலரும் நினைக்கிறார்கள். சென்னை பாஷையை கிண்டலுக்குறிய விஷயமாக மாற்றியது சினிமாதான். அதில்தான் பெரும்பாலும் சென்னை பாஷை தவறாக சித்தரிக்கப்பட்டிருக்கும்" என்றார் அவர்.

25 ஆண்டுகளுக்கு முன்பு பேசப்பட்ட சென்னை பாஷைக்கும் இன்று பேசப்படும் பாஷைக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. அன்று புழக்கத்தில் இருந்த பல சொற்கள் மறைந்து தற்போது அந்த இடத்தில் உருமாறி வேறு சில வார்த்தைகள் ஆக்கிரமித்துவிட்டன. சென்னையும் மாநகராட்சியில் இருந்து பெருநகர மாநாகராட்சியாக மாறிவிட்டது. இப்போதும் சென்னை பாஷையை வட சென்னை மற்றும் மத்திய சென்னையின் ஒரு சில பகுதிகளில் மட்டுமே கேட்க முடிகிறது. நாகரிக வளர்ச்சியால் சென்னையின் வட்டார வழக்கும் மெல்ல மறைந்து வருகிறது... "என்னாப்பா நான் சொல்றது சர்தானே"?


Advertisement

Advertisement
[X] Close