[X] Close

மீண்டும் தூசித்தட்டப்படும் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு: எடப்பாடி பழனிசாமியை சேர்க்க சதியா?

சிறப்புக் களம்,தமிழ்நாடு

kodanad-estate-murder-and-Robbery-case-Is-there-a-conspiracy-to-add-Edappadi-Palanisamy
கோடநாடு பங்களாவில் நடந்த கொலை, கொள்ளையும், அந்த வழக்கில் தொடர்புடையவர்களின் சந்தேக மரணங்களும் ஏதோவொரு தடயங்களை அழிப்பதற்கான முயற்சி நடைபெற்றதோ என்கிற சந்தேகம் இருக்கிறது என்கிறார் பத்திரிகையாளர் பிரியன்.
 
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் முக்கியக் குற்றவாளி சயானிடம் காவல் துறையினர் நேற்று மறு விசாரணை நடத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தில் இன்று அதிமுகவினர் பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்து, கலைவாணர் அரங்குக்கு வெளியே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, ‘’கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் ரகசிய வாக்குமூலத்தில் எனது பெயரை சேர்த்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. எனது பெயரோடு அதிமுக நிர்வாகிகள் சிலர் பெயரையும் சேர்க்க முயற்சி நடக்கிறது. பொய்யான வழக்குகளை கொண்டுவந்து அச்சுறுத்தும் நடவடிக்கைளை திமுக மேற்கொள்கிறது.
 
image
நீதிமன்ற விசாரணையின் போது சயான் எந்தக் கருத்தையும் கூறாதபோது, தற்போது திடீரென அவரிடம் ரகசிய விசாரணை நடத்தப்படுவது ஏன்? விசாரணை முடிவடையும் நிலையில் இருக்கும் போது அதனை மீண்டும் விசாரிப்பதில் சதி இருக்கிறது. இதனைக் கண்டித்து சட்டப்பேரவையை இன்னும் நாளையும் அதிமுக புறக்கணிக்கிறது’’ என்று ஆக்ரோஷமாக கூறினார்.
 
இதையடுத்து சட்டசபையில் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணைப் பற்றி விளக்கமளித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘’கோடநாடு விவகாரத்தில் உண்மை குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். சட்டத்தின் ஆட்சி கண்டிப்பாக நடக்கும். இந்த வழக்கு விசாரணையில் அரசியல் தலையீடு எதுவும் இல்லை. அதனால் யாரும் பயப்படத் தேவையில்லை.
 
தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளபடி கொடநாடு வழக்கு குறித்து விசாரிக்கப்படுகிறது. உண்மை நிலையை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும். மடியில் கனம் இருந்தால் தான் வழியில் பயம் இருக்கும். அதிமுகவினர் எங்க அப்பன் குதருக்குள் இல்லை என்பது போல செயல்படுகின்றனர்’’ என்றார்.
 
இதுதொடர்பாக மூத்த பத்திரிகையாளர் பிரியன் கூறுகையில், ‘’கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் மீண்டும் விசாரணை நடத்தப்படுவது ஏன் என எடப்பாடி பழனிசாமி கேட்கிறார். இக்கேள்வியை கேட்பதற்கு அவருக்கு எந்த உரிமையும் இல்லை. நீதிமன்ற விசாரணையில் இருக்கும் ஒரு வழக்கில் மறு விசாரணை நடத்த காவல்துறையினருக்கு அதிகாரம் இருக்கிறது. கோடநாடு பங்களாவில் நடந்த கொலை கொள்ளையும், அதனைத் தொடர்ந்து நடந்த வழக்கில் தொடர்புடையவர்களின் சந்தேக மரணங்களும் ஏதோவொரு தடயங்களை அழிப்பதற்கான முயற்சி நடைபெற்றதோ என்கிற சந்தேகம் இருக்கிறது.
 
சமீபத்திய விசாரணையின்போது போலீசாருக்கு புதிய தகவல்கள் கிடைத்திருக்கிறது. அதனை உறுதிப்படுத்தவே சயானை போலீசார் விசாரணைக்கு அழைத்துள்ளனர். எனினும் விசாரணையின்போது சயான் எடப்பாடி பழனிசாமி பெயரை சொன்னார் என்பது ஊடகங்களின் ஊகம்தான். எடப்பாடி பழனிசாமியின் பெயரை சயான் கூறினார் என்றால் அவரை விசாரணைக்கு உட்படுத்தலாம்’’ என்கிறார் அவர்.
 
image
கொடநாடு வழக்கின் பின்னணி என்ன?
 
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கும் அவரின் தோழி சசிகலாவுக்கும் கொடநாட்டில் 900 ஏக்கரில் தேயிலைத் தோட்ட எஸ்டேட் சொந்தமாக உள்ளது. இந்த எஸ்டேட்டின் நடுவில் அமைந்துள்ளது, கோடநாடு ஆடம்பர பங்களா. ஜெயலலிதா இங்கு வந்துதான் ஓய்வு எடுத்துச் செல்வார்.
 
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, 2017 ஏப்ரல் 24-ம் தேதி நள்ளிரவில் கோடநாடு எஸ்டேட்டுக்குள் 11 பேர் கொண்ட கும்பல் புகுந்தது. காவலாளி ஓம் பகதூரை கொலை செய்த அந்தக் கும்பல், மற்றொரு காவலாளியான நேபாளத்தைச் சேர்ந்த கிருஷ்ண தாப்பாவை மிகக் கொடூரமாகத் தாக்கியது. அதன் பிறகு பங்களாவுக்குள் நுழைந்த அந்தக் கும்பல், அங்கு இருந்த சில பொருள்களைத் திருடிச் சென்றது.
 
இந்தக் குற்றச்செயலில் ஈடுபட்டவர்களை சிசிடிவி கேமரா உதவியுடன் காவல் துறையினர் கண்டுபிடித்தனர். கேரள மாநிலத்தைச் சேர்ந்த கூலிப்படையினர் 10 பேரை, காவல்துறையினர் கைது செய்தனர். இந்தக் கொள்ளையில் தொடர்புடைய முக்கிய நபரான கனகராஜ், சேலம் மாவட்டம் ஆத்தூரில் சாலை விபத்தில் மரணமடைந்தார். அடுத்த 24 மணி நேரத்துக்குள்ளாகவே இந்த வழக்கில் இரண்டாவதாக குற்றம் சாட்டப்பட்ட சயானுக்குச் சொந்தமான கார் கேரளாவில் விபத்துக்குள்ளானது. இதில் சயானின் மனைவியும் மகனும் உயிரிழந்தனர். சயான் படுகாயங்களுடன் உயிர் பிழைத்தார். இதேபோன்று கோடநாடு பங்களாவில் கம்ப்யூட்டர் ஆப்ரேட்டராக இருந்த இருந்த தினேஷ்குமார் அதே ஆண்டில் தற்கொலை செய்தார்.
 
இப்படி 5 தொடர் மரணங்களை உள்ளடக்கிய கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு உதகை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதில் சாட்சிகள் மாற்றப்படுதாகவும், முக்கியப் பிரமுகர்களுக்கு கொலையில் தொடர்பிருப்பதாகவும் ஜாமீனில் வெளியில் இருந்த சயான், வாளையார் மனோஜ், ஆகியோர் கூறிவந்தனர். இதனைத்தொடர்ந்து இருவரின் ஜாமீன் ரத்து செய்யப்பட்டு மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
 
திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதும் அரசு சார்பு வழக்கறிஞர்கள் மாற்றப்பட்டு புதிதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் இருந்த ஷாஜகான், கனகராஜ் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.
 
கடந்த 13-ம் தேதி இவ்வழக்கு விசாரணை வந்தபோது, குற்றம்சாட்டப்பட்டவர்களிடம் மீண்டும் விசாரணை நடத்த வேண்டும் என நீதிபதியிடம் அரசு வழக்கறிஞர்கள் மனு அளித்தனர். இதையடுத்து சயானிடம் மீண்டும் விசாரணை நடத்த கோத்தகிரி போலீசார் சம்மன் அனுப்பினர். சயான் நேற்று கோத்தகிரி போலீசார் முன்பு ஆஜராகி ரகசிய வாக்குமூலம் அளித்தார்.
அப்போது ஜெயலலிதாவின் கார் டிரைவரான கனகராஜிடம் இருந்து கோடநாடு எஸ்டேட்டில் கொள்ளை போன சில முக்கிய ஆவணங்களை முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் கொடுத்ததாகவும், கொலை வழக்கில் கூடலூர் அதிமுக பிரமுகர்களுக்கு தொடர்பு இருப்பதாகவும் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

Advertisement

Advertisement
[X] Close