Published : 21,Jul 2021 08:21 PM

“பறவைக்காய்ச்சலுக்கு முதல் உயிரிழப்பு; பதற்றம் வேண்டாம்”: எய்ம்ஸ் மருத்துவர் அறிவுரை

What-is-bird-flu-and-its-symptoms--and-how-fatal-can-it-be-

இந்தியாவில் பறவைக்காய்ச்சலுக்கு முதல் மனித இறப்பு இன்று பதிவாகியுள்ளது. பறவைகளை தாக்கும் அவியன் இன்ஃப்ளூயென்சா என்ற நோய்த் தாக்கம், 12 வயதான சிறுவனுக்கு ஏற்பட்டு அதனால் அவர் இறந்திருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளன. புனே தேசிய வைரலாஜி ஆய்வகத்தின் வழியாக உறுதிசெய்துள்ளார் எய்ம்ஸ் முதன்மை மருத்துவர் ரந்தீப் கலீரியா.

கொரோனா பரவல் அதிகமிருக்கும் இந்த நேரத்தில், பறவை காய்ச்சல் இறப்பு பதிவாகியுள்ளது பலருக்கும் அதிர்ச்சியை தந்துள்ளது. பதற்றத்தை தடுக்கும் வகையில், பத்திரிகையாளர்களிடம் பேசிய மருத்துவர் ரந்தீப் கலீரியா, “இந்த வைரஸ் பாதிப்பை ஏற்படுத்தும் ஹெச்.5.என்.1 வைரஸ், மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்கு மிக மிக அரிதாகவே பரவும். ஆகவே இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவருடன் கடந்த நாட்களில் தொடர்பிலிருந்துவர்களுக்கு பரிசோதனை ஏதும் செய்ய வேண்டிய அவசியமில்லை. இது தொற்று வியாதியாக இருக்காது என்பதால் மக்களும் அச்சப்படவோ பதற்றப்படவோ வேண்டாம். தற்போதைக்கு நோய்த்தடுப்பு நடவடிக்கையாக பறவைகள் சார்ந்து இயங்கும் நபர்களுக்கு இந்த நோய்ப்பாதிப்பு குறித்தும், சுய சுகாதாரம் குறித்தும் அறிவுறுத்தல்கள் தரப்பட்டு வருகிறது” எனக் கூறினார்.

image

எய்ம்ஸை சேர்ந்த துணைப்பேராசிரியரான நீரஜ் நீஷ்சல் கூறும்போது, “இந்த நோய் மனிதர்களில் ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு பரவுமென்பதற்கு இதுவரை ஒரு சான்றும் இல்லை” என்று கூறியுள்ளார். பறவைகாய்ச்சல் பற்றிய சில அடிப்படை தகவல்களை, இங்கே காணலாம்.

பறவை காய்ச்சல் பரவும் விதம்: இந்த பாதிப்பு ஏற்படக்காரணமான அவியன் இன்ஃப்ளூயென்சா டைப் ஏ வைரஸ், வனத்தில் வாழும் பறவைகளில் இயல்பாகவே இருக்கும். இவை வீட்டுப்பிராணிகளான கோழி, வாத்து, வான்கோழிகள் போன்றவற்றை தாக்கும் போது அவற்றுக்கு இந்த பாதிப்பு ஏற்படும். இதே வைரஸ் பன்றிகள், பூனைகள் மற்றும் சில நேரங்களில் புலிகளை கூட தாக்கலாம்.

இதில் ஹெச்.ஏ. மற்றும் என்.ஏ. என்று இரு வகை புரதங்கள் உள்ளன. அதிலும் பல வகைகள் இருக்கின்றன. ஹெச்.ஏ.வில் மட்டும் 18 வகைகள் உள்ளது. இவை இருபுரதமும் இணைந்தோ அல்லது தனியாகவோ பறவைகள், விலங்குகளை தாக்கும்.

image

அந்த பறவைகள் / விலங்குகளுடன் மனிதர்களுக்கு நேரடியாக தொடர்பு ஏற்படும்போது, இது மனிதர்களை தாக்கும். சில நேரங்களில் இப்படி பாதிக்கப்பட்ட பறவை / விலங்கு இருக்கும் பன்னைகளில் பணியாற்றினால் அப்போது காற்றின் வழியாகவோ, ஈரமான தரைத்தளம் வழியாகவோக்கூட பரவலாம். இதனாலேயே பன்னைகளில் இருப்போருக்கு கூடுதல் எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. இப்படி மனிதர்களுக்கு பரவும் இந்த பாதிப்பு ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு மிக மிக அரிதாகவே பரவும்.

இந்த வைரஸ் மனிதர்களை தாக்கும்போது பறவைக்காய்ச்சல் அல்லது பன்றிக்காய்ச்சல் பாதிப்பு ஏற்படுகிறது.

இறைச்சியின் வழியாக இது பரவும் என்ற அச்சம் பலருக்கும் உள்ளது. ஆனால் நன்கு சமைக்கப்பட்ட இறைச்சியை எடுப்போருக்கு இந்த நோய் தாக்கம் ஏற்படுவது குறித்து இதுவரை நிரூபிக்கப்படவில்லை. இக்காரணத்தினால் மக்கள் மத்தியில் எந்தவொரு உணவையும் நன்கு வேகவைத்து சாப்பிட வேண்டுமென மருத்துவர்கள் அறிவுறுத்துவர்.

பறவை காய்ச்சல் அறிகுறிகள்: அமெரிக்க நோய்த்தடுப்பு நிறுவனம், பறவைக்காய்ச்சலின் அறிகுறிகளை பட்டியலிடும்போது, கீழ்க்காணும் அறிகுறிகளில் சில மிதமாகவோ அதிகப்படியாகவோ ஏற்படலாம் என சொல்கிறது. அந்த அறிகுறிகள்:

  • காய்ச்சல், இருமல், வறண்ட தொண்டை, தசை வலி, வாந்தி, இடுப்பு வலி, வயிற்றுப்போக்கு, வாந்தி.
  • தீவிர சுவாசப்பிரச்னை
  • நரம்பியல் பாதிப்புகள்

இந்த நோய்த்தாக்கத்தால் அதிகம் பாதிக்கப்படும் நபர்களாக 40 வயதுக்கு உட்பட்டோர்தான் இருக்கின்றனர். அவர்களிலும், 10 – 19 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கே இறப்பு விகிதம் அதிகம் உள்ளது.

image

பறவைக் காய்ச்சல் இறப்பு விகிதம்: இது 1997ம் ஆண்டு முதன்முதலில் ஒருவருக்கு உறுதிசெய்யப்பட்டது. தற்போதுவரை உலகளவில் இந்த ஏ(ஹெச்.பி.ஏ.ஐ) ஹெச்.5.என்.1 என்ற பறவைக்காய்ச்சல் தாக்குதல் 700 பேருக்கு உறுதிசெய்யப்பட்டிருப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது. 16 நாடுகளில் பரவியிருக்கும் இதற்கு, இறப்பு விகிதம் 60% என்றிருக்கிறது.

தகவல் உறுதுணை:TheIndianExpress

தொடர்புடை செய்தி:சீனாவில் முதல் உயிரிழப்பை பதிவுசெய்த குரங்கு-பி வைரஸ் பாதிப்பில் யாருக்கு ஆபத்து அதிகம்?

சற்று முன்எடிட்டர் சாய்ஸ்