[X] Close

தமிழ்நாட்டில் மாநிலங்களவைத் தேர்தல் எப்போது? - மீண்டும் கிளம்பும் சர்ச்சை

இந்தியா

When-is-the-Rajya-Sabha-election-in-Tamil-Nadu-again-controversy-started

மேற்கு வங்க மாநிலத்திலிருந்து ஒரு மாநிலங்களவை உறுப்பினர் தேர்ந்தெடுக்க ஆகஸ்ட் 7-ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் எப்போது மாநிலங்களவைத் தேர்தல் நடத்தப்படும் என்கிற கேள்வியை மீண்டும் எழுந்துள்ளது. வேண்டுமென்றே இந்த இடைத்தேர்தல்கள் தாமதப்படுத்தப்படுவதாக திமுக குற்றம்சாட்டியுள்ள நிலையில், மேற்கு வங்கத்தில் மாநிலங்களவை தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருப்பது சர்ச்சையை மீண்டும் புதுப்பித்துள்ளது.


Advertisement

அதிமுகவை சேர்ந்த முஹம்மத் ஜான் மாரடைப்பால் காலமானதால், தமிழ்நாட்டில் ஒரு மாநிலங்களவை இடம் காலியானது. அந்த காலியிடத்துக்கான இடைத்தேர்தல் இன்னமும் நடைபெறவில்லை.

இந்நிலையில், சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில், அதிமுகவின் மாநிலங்களவை உறுப்பினர்கள் கே.பி.முனுசாமி மற்றும் வைத்தியலிங்கம் வெற்றி பெற்று சட்டப்பேரவை உறுப்பினரானார்கள். இவர்களும் தங்களுடைய மாநிலங்களவை உறுப்பினர் பதவியை காலி செய்ததால் தற்போது மாநிலங்களவைக்கு தமிழ்நாட்டில் இருந்து மூன்று உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.


Advertisement

இந்த மூன்று மாநிலங்களவை காலியிடங்களுக்கான தேர்வு எப்போது நடைபெறும் என தேர்தல் ஆணையம் இன்னும் முடிவு செய்யவில்லை. மேலும், தாமதமின்றி இந்த இடைத்தேர்தல்களை நடத்த வேண்டும் என திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு மற்றும் வில்சன் ஆகியோர் தேர்தல் ஆணையத்தில் மனு அளித்து இருந்தார்கள்.

ஒரேநேரத்தில் மூன்று இடைத்தேர்தல்களையும் ஒன்றாக நடத்த வேண்டுமா அல்லது இரண்டு மாநிலங்களவை உறுப்பினர்கள் ராஜினாமா செய்ததால் ஏற்பட்ட காலியிடங்களுக்கு தனியாக தேர்தல் நடத்த வேண்டுமா என்ற சர்ச்சை தொடர்ந்து வருகிறது. 

இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் சட்டரீதியான ஆலோசனைகளை பெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இடைத்தேர்தல்களை தனித்தனியாக நடத்தினால் திமுகவுக்கு எத்தனை இடங்கள் கிடைக்கும் என்பது குறித்து அரசியல் ரீதியான தாக்கங்கள் அலசப்பட்டு வருகின்றன.


Advertisement

இதனிடையே, கோவிட் பரவல் காரணமாக மாநிலங்களவைத் தேர்தலை நடத்துவதில் கூட ஒரு சில மாதங்களுக்கு முன்பு வரை தயக்கம் இருந்து வந்தது. தற்போது இரண்டாம் அலை தாக்கம் குறைந்த நிலையில், மாநிலங்களவைத் தேர்தல் கேரளாவில் நடத்தப்பட்டுள்ளது என்பதும், தற்போது மேற்கு வங்கத்திலும் தேர்தல் நடத்த தேதி அறிவிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்ட தினேஷ் திரிவேதி பிப்ரவரி மாதம் 12ஆம் தேதியன்று ராஜினாமா செய்தார். அவர் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியும் விட்டு விலகினார். ஆகவே, மேற்கு வங்க மாநிலத்தில் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் தேர்ந்தெடுக்க தேர்தல் ஆணையம் ஆகஸ்ட் 7-ஆம் தேதியன்று தேர்தல் அறிவித்துள்ளது.

இந்தப் பின்னணியில், தேர்தல் ஆணையம் தமிழகத்தில் மாநிலங்களவைத் தேர்தல் நடத்த எப்போது அறிவிப்புகளை வெளியிடும் என்பது ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. தாமதம் ஏன் என்கிற கேள்வியை மீண்டும் திமுக எழுப்பும் என அந்தக் கட்சியை சேர்ந்த தலைவர்கள் வலியுறுத்தி வருகிறார்கள். 

சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று உள்ளதாலும், அத்துடன் கூட்டணிக் கட்சிகளை சேர்ந்தவர்களும் கணிசமான இடங்களில் வெற்றி பெற்று உள்ளதாலும் மாநிலங்களவைத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு வலுவாக உள்ளதாக அவர்கள் கருதுகிறார்கள். அதேசமயத்தில், மூன்று காலியிடங்களுக்கும் ஒரே நாளில் தேர்தல் நடந்தால், அதிமுக ஓர் இடத்தை கைப்பற்ற வாய்ப்பு உள்ளதாக அந்த கட்சியின் மூத்த தலைவர்கள் கருதுகிறார்கள். 

- கணபதி சுப்பிரமணியம்


Advertisement

Advertisement
[X] Close