Published : 21,Jun 2021 07:35 PM

'ரகுராம் ராஜன் to எஸ்.நாராயண்' - முதல்வரின் பொருளாதார ஆலோசனை குழு - ஐவரின் பின்னணி என்ன?

Five-members-of-the-Economic-Advisory-Council-to-the-Chief-Minister-MK-Stalin-to-promote-economic-growth-in-Tamil-Nadu

தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி மேம்படுத்த 'முதலமைச்சருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு' அமைக்கப்பட்டுள்ளது.

இக்குழுவில், நோபல் பரிசு பெற்றவரும், அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் தொழில்நுட்பக் கழகத்தின் பேராசிரியருமான எஸ்தர் டஃப்லோ இடம் பெற்றுள்ளார். இவருடன், இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் மற்றும் பேராசிரியர் ரகுராம் ராஜன், ஒன்றிய அரசின் முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன், பொருளாதார நிபுணர் மற்றும் பேராசிரியர் ஜான் ட்ரீஸ், முன்னாள் ஒன்றிய நிதிச் செயலாளர் எஸ்.நாராயண் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். 

இக்குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், மாநிலத்தின் பொருளாதாரத்தை மீட்டெடுத்து அதன் பயன்கள் அனைத்து தரப்பினரையும் சென்றடைய அரசு உறுதி பூண்டுள்ளதாக ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தின் ஒட்டுமொத்த கடன்சுமையை குறைக்கவும், நிதிநிலையை மேம்படுத்தவும் கவனம் செலுத்தப்படும் என்றும், கடந்த சில ஆண்டுகளில் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி மந்த நிலையில் உள்ளதை மாற்றி அமைப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் தமிழக அரசு மேற்கொள்ளும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரகுராம் ராஜன்:

image

தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்டவர் ரகுராம் ராஜன். ரிசர்வ் வங்கியின் ஆளுநர் என்ற மிகப்பெரிய பதவியில் இருந்தவர். 2008-09ஆம் ஆண்டில் அமெரிக்க பொருளாதாரம் பின்னடைவு சந்திக்கும் என முன்கூட்டியே கணித்து எச்சரிக்கை மணி அடித்தவர். மன்மோகன் சிங் பிரதமராக இருந்த போது, அவரின் முதன்மை பொருளாதார ஆலோசகராக இருந்தவர். பிறகு ரிசர்வ் வங்கியின் ஆளுநர் ஆனார். மத்திய பாரதிய ஜனதா அரசின் பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியவர். பணமதிப்பு நீக்கம், சரியான முறையில் அமல்படுத்தாத ஜி.எஸ்.டி.போன்றவை பொருளாதாரத்தின் வேகத்தை குறைத்து விட்டதாக மத்திய அரசை சாடியவர்.

அரவிந்த் சுப்பிரமணியன்:

image

தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்ட அரவிந்த் சுப்பிரமணியன், உலக வங்கியில் முக்கிய பதவிகளை வகித்தவர். பிரதமர் மோடியின் பொருளாதார ஆலோசகர் குழுவில் 2014 முதல் 3 ஆண்டுகள் பதவி வகித்தார். பணமதிப்பு நீக்கம் குறித்த அறிவிப்பு வெளியாகும் போது, தலைமை பொருளாதார ஆலோசகராக இருந்தார். இவரது பதவிக்காலத்தை நீட்டிக்க மத்திய அரசு முன் வந்த போதும், அவர் அமெரிக்காவுக்கு சென்றுவிட்டார். தாயகம் திரும்பிய பின் ஹரியானா மாநிலத்தில் உள்ள அசோகா பல்கலைக்கழகத்தில் பேராசியராக பணியாற்றியலர்.

எஸ்தர் டஃப்லோ:

image

பிரான்ஸை பூர்வீகமாக கொண்டவர் எஸ்தர் டஃப்லோ. அமெரிக்காவில் உள்ள மசாசூசெட்ஸ் தொழில் நுட்பக் கழகத்தின் பேராசிரியராக உள்ளார். வறுமை ஒழிப்பு குறித்து இந்தியா மட்டுமின்றி உலகம் எங்கும் ஆய்வுகளை நடத்தியுள்ளார். 2019 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசை கணவர் அபிஜித் பானர்ஜியுடன் இணைந்து பெற்றுள்ளார், எஸ்தர் டஃப்லோ. ஏழை, எளியோரின் வறுமையைப் போக்குவதற்கான ஆய்வுகளை முன்னிலைப்படுத்தியவர். 2013 ஆம் ஆண்டு, அப்போதைய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் கீழ் செயல்பட்ட உலகளாவிய பொருளாதார ஆணையத்தின் ஆலோசகராகவும் இருந்துள்ளார்.

ஜான் ட்ரீஸ்:

image

ஜான் ட்ரீஸ் பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த பொருளாதார நிபுணர். மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தை கொண்டு வந்து கிராமப்புறங்களில் உள்ள ஏழை மக்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கியவர். இவர் ஒரு சமூக செயற்பாட்டாளரும் கூட. ஆண், பெண் பாகுபாடின்றி அனைவரும் சமம் எனக் கோட்பாட்டை முன்னெடுத்தவர். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆட்சி காலத்தில், பொருளாதார ஆய்வுக்குழு உறுப்பினராக இருந்துள்ளார். கல்வி, வேலைவாய்ப்பு, குழந்தை பராமரிப்பு போன்ற சமூகப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

எஸ்.நாராயண்:

image

சென்னையை சேர்ந்த எஸ்.நாராயண் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆவார். 1965 முதல் 2004 ஆம் ஆண்டு வரை மாநில அளவிலும், மத்திய அரசிலும் பல்வேறு உயர் பதவிகளை வகித்தவர். நிதி, தொழில், வர்த்தகம், எரிபொருள், விவசாயம், கப்பல் போக்குவரத்து, சாலை வசதி என பல்வேறு துறைகளில் தலைமை பதவி வகித்தவர். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் ஆலோசகராகவும் இருந்துள்ளார். அதே போல், முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலத்திலும், மத்திய அரசின் நிதி செயலாளராக இருந்துள்ளார். பணி ஒய்வு பெற்ற பிறகும், பல தொழில் நிறுவனங்களுக்கு இன்றும் ஆலோசகராக உள்ளார்.

சற்று முன்எடிட்டர் சாய்ஸ்