Published : 11,Jun 2021 03:52 PM
மலைவாழ் மக்கள் மத்தியில் தடுப்பூசி விழிப்புணர்வு ஏற்படுத்திய குமரி மாவட்ட ஆட்சியர்

மலையோர பகுதிகளில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், கன்னியாகுமரியில் இன்று மாவட்ட ஆட்சியர் தலைமையில் அதிகாரிகள் நேரடி ஆய்வு செய்துள்ளனர். பழங்குடியின மக்கள் வசிக்கும் கிராமங்களில் செய்யப்பட்ட இந்த ஆய்வுக்கு பிறகு, மாவட்ட ஆட்சியர் 'மலைவாழ் மக்களுக்கு தடுப்பூசி செலுத்த அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம்' எனக்கூறியுள்ளார்.
குமரி மாவட்டத்தில் 48 மலையோர கிராமங்களில் 8000 பழங்குடியின காணியின மக்கள் வசித்து வருகின்றனர். இந்த மக்கள் வசிக்கும் கிராமங்களில் கொரோனா இரண்டாவது அலை அதிகமாக பரவி வருகிறது. பழங்குடியின மக்கள் வசிக்கும் இந்த பகுதிகளில், கொரோனா அறிகுறிகள் இருந்தால் அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் தனியார் மருத்துவமனைக்கு சென்று மருந்தை வாங்கிக்கொண்டு பலரும் வீடுகளிலேயே சுயமாக சிகிச்சை செய்திருக்கின்றனர். விழிப்புணர்வின்றி அவர்கள் செய்த இந்த செயலால், இதுவரை தச்சமலை உட்பட கிராமங்களை சேர்ந்த 4 பழங்குடியின மக்கள் கொரோனாவால் உயிர் இழந்துள்ளனர்.

இதனால் இந்த கிராமங்களில் மலைவாழ் மக்களுக்கு கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை நிலவி வந்தது. அதைத்தொடர்ந்து, இன்று மாவட்ட ஆட்சியர் அரவிந்த் தலைமையில் வருவாய்த்துறை மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் மைலார், மோதிரமலை, கோதையார், தச்சமலை உட்பட பல மலையோர கிராமங்களில் நேரடியாக சென்று பழங்குடியின காணியின மக்களை நேரில் சந்தித்து அவர்களது குறைகளை கேட்டறிந்தனர். பல கிராம மக்கள் அவர்களது பிரச்சனைகள் குறித்து மாவட்ட ஆட்சியருடன் எடுத்து கூறியதுடன் மனுக்களையும் வழங்கியுள்ளனர். இன்னும் சிலர், தடுப்பூசி செலுத்துவது குறித்து தங்களுக்கு இருந்த சந்தேகங்களை, மாவட்ட ஆட்சியரிடம் கேட்டு தெளிவுபெற்றிருக்கின்றனர்.
இந்த நேரடி ஆய்வின்போது மாவட்ட ஆட்சியர் பழங்குடியின மக்களிடம் தடுப்பூசி எடுக்க வலியுறுத்தியும் உள்ளார் ஆட்சியர். இந்த ஆய்வுக்கு பிறகு பத்திரிக்கையாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர், "இந்த மலையோர கிராமங்களில் பழங்குடியின மக்களுக்கு அதிகமாக கொரோனா தொற்று பரவி வருகிறது. மாவட்ட நிர்வாகம் அதை தடுக்கும் விதமாக பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. மக்கள், தங்களுக்கு கொரோனா அறிகுறிகள் இருந்தால் அதை மறைத்து வைக்கக்கூடாது என்றும், கொரோனா பரிசோதனைக்கு தங்களை உட்படுத்திக் கொள்ள வேண்டுமென்றும் கூறியுள்ளோம்.

பரிசோதனை மையங்களை அதிகரிக்க, நடவடிக்கை எடுத்து வருகிறோம். மேலும், மக்களுக்கு தரமான சிகிச்சைக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த மலையோர கிராமங்களில் உள்ள பழங்குடியின மக்களுக்கு தடுப்பூசி செலுத்தவும் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. இனி மாவட்டத்துக்கு வரும் தடுப்பூசியில் 500 டோஸ் தடுப்பூசியை முதலில் மலையோர கிராமத்தை சேர்ந்த பழங்குடியின மக்களுக்கு செலுத்த திட்டமிட்டுள்ளோம்" என கூறியுள்ளார்.
- கே.எஸ். மனு