[X] Close

"சாதி மீது எனக்கு நம்பிக்கை கிடையாது; மனிதமே முக்கியம்!" - நடிகர் நட்ராஜ் சிறப்புப் பேட்டி

சினிமா,சிறப்புக் களம்

actor-natty-natraj-special-interview

தியேட்டர்களில் வெளியாகி வெற்றியடைந்த ‘கர்ணன்’ படம் இப்போது  ஓடிடியில் வலம் வந்துகொண்டிருக்கிறது. கண்ணபிரான் என்ற காவல்துறை அதிகாரியாக நடித்து, ரசிகர்களின் பெருங்கோபத்தை எதிர்கொண்டவர் நடிகர் நட்டி நட்ராஜ். படம் வெளியானதிலிருந்து அதிகமாக பே(ஏ)சப்படுவது இவரது வில்லத்தனம்தான். தற்போது,  ஓடிடியில் வெளியாகியிருக்கும் சூழலில் அவரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்…


Advertisement

ஓ.டி.டியில் ’கர்ணன்’...

“சந்தோஷமான தருணம். படத்தை மிஸ் செய்தவர்கள் ஓடிடியில் பார்ப்பார்கள். ஒரு தடவை பார்த்தவர்கள் இரண்டு மூன்று தடவை பார்ப்பதற்கும் வாய்ப்பு இருக்கும். கொரோனா இரண்டாவது அலை இல்லையென்றால் கண்டிப்பாக இன்னும் ரசிகர்கள் தியேட்டருக்கு வந்திருப்பார்கள். அப்படி இருந்தும், கொரோனா சூழலில் ’கர்ணன்’ வெற்றிகரமாக ஓடியது. வரவேற்பையும் வசூலையும் குவித்தது. முழுமையாக எல்லா தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தது. ஒரு படம் நல்லா இருந்தா போதும், தமிழ் ரசிககர்கள் விடமாட்டார்கள். எப்படியும் கொண்டாடிவிடுவார்கள்.”


Advertisement

நட்டி நட்ராஜ்  ’திட்டி’ நட்ராஜ் ஆகி ஓஞ்சுபோன நேரத்துல  ஓடிடியில படம் பார்த்துட்டு திரும்பவும் திட்டுவாங்களே? எப்படி எதிர்கொள்ளப் போறீங்க?

 ”அதுக்கு என்னப் பண்றது? முதலில் பயங்கரமாக திட்டினார்கள். இப்போது, ரசிக்க ஆரம்பித்துவிட்டார்கள். அந்தக் கிரெடிட்ஸ் எல்லாம் இயக்குநர் மாரி செல்வராஜ், தனுஷ் சார் உள்ளிட்டப் படக்குழுவினருக்கும்தான்.

image


Advertisement

தலையில கட்டுன துண்டை எடுக்கச்சொல்லி கோபப்படும் நீங்கள், தூண்டில் போடுகிறவர் தானாக துண்டை அவிழ்க்கும்போது ஒரு பார்வை பார்த்து சிரிப்பீர்களே… எப்படி இவ்வளவு அற்புதமாக நடிக்க முடிந்தது?

”நான் என்ன ஸ்பெஷலா பண்ணிட்டேன்? மாரி செல்வராஜ் அப்படி நடிக்க வைத்தார். ஒரு மனிதனின் சைக்காலஜி எங்கெங்கு எப்போது மாறும் என்ற சின்ன விஷயத்தைக்கூட யோசித்தார். நான் அதனை வெளிக்கொண்டு வந்தேன். அவ்வளவுதான்.”

’யாருடைய பாராட்டு – யாருடைய திட்டு’ மறக்க முடியாதது?

    “பாரதிராஜா சாரின் பாராட்டு ரொம்ப நெகிழ்ச்சியா இருந்தது. கர்ணன் பார்த்துட்டு நைட்டு 9.30 மணிக்கு போன் செய்தவர் ’நீ நல்ல ஒளிப்பதிவாளர். உன் நடிப்பும் பிடிக்கும். ஒரே மாதிரிதான் நடிப்பேன்னு நினைச்சேன். ஆனால், கர்ணன் படத்தில் மாற்றி பண்ணியது ரொம்ப சந்தோஷமா இருக்கு. உன் உழைப்பு பாராட்டுக்குரியது’ என்று 20 நிமிடம் ஊக்கப்படுத்திப் பேசினார். அவருடைய பேச்சு அவ்ளோ சந்தோஷமா இருந்துச்சி.

     அதேமாதிரி, என் தங்கச்சிப் பையனின் திட்டு மறக்க முடியாதது. அவனும் கர்ணன் முதல் நாள் பார்த்துட்டு வந்து ’மாமா தியேட்டர் பக்கம் வந்துடாதீங்க. வந்தீங்கன்னா உங்கமேல கொல வெறில இருக்காங்க. அடிச்சாலும் அடிச்சிடுவாங்க. ஜாக்கிரதையா இருங்க. உன் நடிப்பை பார்த்து எனக்கே உன்மேல கோவம் வருது மாமா’ என்றான்.”

சாதிய வன்மம் கொண்ட காவல்துறை அதிகாரி கண்ணபிரான் கதாப்பாத்திரத்தில் நடிக்கவேண்டும் என்று இயக்குநர் மாரி செல்வராஜ் சொன்னபோது உங்களுக்கு என்ன தோன்றியது?

 ”எல்லோரும் தெளிவாக ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். கண்ணபிரான் கேரக்டர் எந்த சாதியையும் முன்னிலைப்படுத்தவில்லை. ஊருக்கு பஸ் கிடைக்கவில்லை என்று பஸ்ஸை அடித்து நொறுக்குகிறார்கள். அங்கு செல்லும் காவல்துறை அதிகாரி தனக்கு ஏற்படும் சின்ன சின்ன அவமானங்களைப் பொறுக்க முடியாமல் கோபமடைகிறார்.  அந்தக் கதாபாத்திரம், அப்படித்தான்  வடிவமைக்கப்பட்டதே தவிர சாதிய வன்மத்தோடு அல்ல. நானும் அந்தக் கண்ணோட்டத்தோடு பார்க்கவுமில்லை.”

image

ஆனால் அப்பா, தாத்தா பெயரைக் கேட்டெல்லாம் அடிப்பது சாதி இல்லாமால் வேறு என்ன?

  “இதனை நீங்கள் இயக்குநர் மாரி செல்வராஜிடம்தான் கேட்கவேண்டும். நான் அந்தப் பார்வையில் பார்த்து நடிக்கவில்லை. காவல்துறை அதிகாரியை மதிக்கமாட்டார்கள், கையெழுத்துப்போட அழைத்தால் வரமாட்டார்கள், தோள் மீது கைப்போட்டு பேசுவார்கள். இதனையெல்லாம் எந்த அதிகாரிகளாலும் ஏற்றுக்கொள்ள முடியாது. அந்த வகையில்தான் என்னிடமும் கதையும் கதாப்பாத்திரமும் சொல்லப்பட்டது.”

 சாதிய ஒடுக்குமுறை குறித்து உங்கள் தனிப்பட்ட பார்வை என்ன?

“என்னோட சொந்த ஊர் பரமக்குடி. ஆனால், படித்து வளர்ந்ததெல்லாம் சிட்டியில். இன்னும் என்னோட சிறுவயது 40 நண்பர்களுடன் தொடர்பில் இருக்கிறேன். மாமன், மச்சான் என்றுதான் பேசிக்கொள்வோம். இதுவரைக்கும் நீ என்ன ஜாதின்னு  யாரிடமும் கேட்டது கிடையாது. கிரிக்கெட் விளையாடுவது, கட் அடித்துவிட்டு சினிமாவுக்கு செல்வது என்று இருந்தோமே தவிர, சாதி கண்ணோட்டத்தில்  இருந்தது கிடையாது. சாதி மீது எனக்கு நம்பிக்கையும் கிடையாது. மனிதனை மனிதனாகத்தான் பார்க்கவேண்டும். மனிதமே முக்கியம்”.

 மாரி செல்வராஜ் – தனுஷுடன் பணியாற்றிய அனுபவம்?

  “மாரி செல்வராஜ் மிகப்பெரிய டெக்னிஷியன். ஆகச்சிறந்த  படைப்பாளி. சின்னச் சின்ன விஷயங்களுக்கும் அவர் எடுத்துக்கொள்ளும் நுணுக்கம், உணர்வுகளைச் சொல்லிக் கொடுக்கும் விதம் என அனைத்தையுமே பார்த்து வியந்தேன் . இயற்கையை ரசிப்பவர்களுக்கு தானாக ஒரு பெருமிதம் வரும். அப்படித்தான், மாரி செல்வராஜ் படத்தில் நடித்தால் நமக்கே ஒரு பெருமிதம் வந்துவிடும்.

     அதேபோல, தனுஷ் சாரின் ’ராஞ்சனா’ படத்திற்கு நான்தான் ஒளிப்பதிவாளர். தேசிய விருது பெற்ற நடிகர் என்பதால் கர்ணன் ஷூட்டிங் முதல்நாளில் ”நான் உங்கப் படத்தில் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்தேன். அது வேற. ஆனா, இப்போ உங்கக்கூடவே நடிக்கிறேன். எதாவது சொதப்பிட்டா தப்பா நினைச்சிடாதீங்க சார்” என்றேன்.  ”உங்க சதுரங்க வேட்டை உள்ளிட்ட பலப் படங்களை பார்த்திருக்கிறேன். நல்லாவே பண்ணுவீங்க. தைரியமாக பண்ணுங்க” என்று ஊக்கப்படுத்தினார். சக நடிகரை அதற்கான ஊக்கம் கொடுத்து அழைத்துச் செல்வதில் தனுஷ் ஒரு மிகச்சிறந்த நடிகர். அதனால்தான், கண்ணபிரான் கதாபாத்திரம் இப்பவும் பேசப்படுது.”

image

இப்படிப்பட்ட கதாப்பாத்திரத்தில் நடித்ததற்காக காவல்துறையினர்  என்ன சொன்னார்கள்?

 ”காவல்துறையைச் சேர்ந்த பலர் பேசினார்கள். நெகட்டிவாக யாரும் கேட்கவில்லை. ’அவமானங்களின்போது இதுபோன்று நடக்கத்தான் செய்யும்’ என்றார்கள். விபத்து, திருட்டு என மக்களுக்கு என்ன பிரச்னை என்றாலும் முதலில் காவல்துறையினர்தான் வருவார்கள். காவல்துறை நம்மோடு பயணிப்பவர்கள்:நம் வாழ்க்கையில் ஒன்றிணைந்தவர்கள். காவல்துறையினர் நம் நண்பர்கள்.”

ஏமாத்துறதுக்காகவே பொறந்தவர் மாதிரி சதுரங்கவேட்டையில நடிச்சிருப்பீங்க. வினோத்துடன் மீண்டும் எப்போது இணைவீர்கள்?

”நானும் வினோத்தும் எப்போது இணைவோம் என்று வினோத்கிட்டத்தான் நீங்க கேக்கணும். நான் இருக்க மாதிரி ஏதாவது கதாபாத்திரம் இருந்தால் கண்டிப்பாக என்னை அழைப்பார். மற்றபடி, வினோத் நல்ல நண்பன்.  நண்பன் வெற்றியடையும்போது எனக்கு பெரிய சந்தோஷமாத்தானே இருக்கும்? அதுவும், இப்போ அஜித் சார்கூட ’வலிமை’ பண்ணிட்டிருக்கார்”.

வில்லத்தனம் கலந்த ஹீரோவா நடிச்சுக்கிட்டிருந்த நீங்க முழுக்க முழுக்க வில்லனா மட்டுமே  எப்படி ஒத்துக்கிட்டீங்க?

”நீங்கதான் கண்ணபிரானை வில்லனாகப் பார்க்கிறீர்கள். அவர் ஒரு காவல்துறை அதிகாரி. அவர் நிலையில் இருந்து பாருங்கள். உங்களை மதிக்காதபோது கோவம் வராதா?”.

இனிமேல் வில்லன் கதாபாத்திரங்கள்தானா?

  “ஒரு நல்லக்கதை அந்தக் கதையை நகர்த்திக்கொண்டு செல்லும் கதாபாத்திரமாக இருந்தால் நான் பண்ணுவேன். சும்மா போய் அடிடா, ஒதடா, மிதிடா என்றெல்லாம் நான் பண்ணமாட்டேன்.”

சமூக வலைதளங்களில் படங்கள் பார்த்துவிட்டு விமர்சனமும் செய்கிறீர்களே?

   “ ‘டெனட்’ படத்தைப் பார்க்கப்போய் எனக்கு 5 ஆயிரம் ரூபாய் அன்னைக்கு மட்டும் செலவாச்சி. எனக்கு படம் பிடிக்கவுமில்லை; புரியவுமில்லை. அதனால், என்னோட கருத்தைச் சொன்னேன். ஆனால், என் சக தமிழ் சினிமா திரைத்துறையினரின் படங்கள் எதையும் விமர்சிக்கமாட்டேன்.” 

- வினி சர்பனா


Advertisement

Advertisement
[X] Close