Published : 08,May 2021 07:16 PM

நேர்மை மட்டுல்ல...- முதல்வர் ஸ்டாலின் நிர்வாகத்தில் 5 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளின் பின்புலம் என்ன?

Tamilnadu-cm-M-K-Stalin-s-IAS-Force--Who-are-these-five-IAS-officers-

தமிழகத்தில் பதவியேற்ற கையோடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்த தலைமைச் செயலாளர், தனிச் செயலாளர்களின் பெயர்களை மாநிலமே கொண்டாடுகிறது. நேர்மைக்கும் நிர்வாகத்திறனுக்கும் பாராட்டுக்களைக் குவித்த அந்த ஐந்து அதிகாரிகளின் விரிவான பின்புலன் இதோ...

வெ.இறையன்பு ஐஏஎஸ் (தமிழக தலைமைச் செயலாளர்):

தமிழகத்தின் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கும் வெ.இறையன்பு ஐ.ஏ.எஸ்-ஸுக்கு அறிமுகமே தேவையில்லை. நிர்வாகம், அனுபவம், எழுத்து, பேச்சு என அத்தனைத் தளங்களிலும் மக்களுக்கு அறிமுகமானவர். அண்ணா மேலாண்மை பயிற்சி மைய இயக்குனராகப் பதவி வகித்த இறையன்பு ஐ.ஏ.எஸ், தற்போது தமிழக அரசின் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கு மேலே 12 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் சீனியர்களாக உள்ள நிலையில், தற்போது இவர் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார். கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் முக்கியத்துவம் இல்லாத இலாகாக்களில் பணியாற்றி வந்த இவருக்கு, திமுக பதவியேற்ற முதல் நாளிலேயே தலைமைச் செயலாளர் பதவி கிடைத்திருக்கிறது.

image

சேலம் மாவட்டத்தில் காட்டூர் என்கிற கிராமத்தில் பிறந்த இறையன்பு, பல்வேறு பட்டப் படிப்புகளை முடித்தவர்; வணிக நிர்வாகம் மற்றும் வள்ளுவர் - ஷேக்ஸ்பியர் ஆகிய கருப்பொருள்களில் இரு டாக்டர் பட்டங்களையும் பெற்றவர். 1987-ஆம் ஆண்டு ஆட்சிப் பணித்தேர்வில்  இந்திய அளவில் 15-வது ரேங்கிலும், தமிழகத்தில் முதல் இடத்திலும் தேர்ச்சிபெற்றார். இவருடைய மூத்த சகோதரர் திருப்புகழும் குஜராத் பணிப் பிரிவைச் சேர்ந்த இந்திய ஆட்சிப் பணி அதிகாரியாக உள்ளார்.

நாகை மாவட்ட துணை ஆட்சியராக ஆட்சிப் பணியைத் தொடங்கிய இறையன்பு, நகராட்சி நிர்வாக ஆணையர், செய்தி ஒளிபரப்புத் துறைச் செயலர், முதல்வரின் கூடுதல் செயலர், சுற்றுலாத்துறைச் செயலர் எனப் பல பதவிகளை வகித்துள்ளார்.கடலூர், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியராகவும் பதவி வகித்தவர். தமிழ்மீது பெரும் பற்றுகொண்ட இவர் 100-க்கும் மேற்பட்ட நூல்களை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியுள்ளார். அழகு தமிழில் மேடைகளில் சிறப்பாகப் பேசக் கூடியவர் இறையன்பு ஐ.ஏ.எஸ்.

உதயச்சந்திரன் ஐஏஎஸ் (முதல்வரின் முதன்மைத் தனிச் செயலாளர்)

உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ்-ஸுக்கும் பெரிதாக மக்களிடம் அறிமுகம் தேவையில்லை. தான் பதவி வகித்த துறைகளில் செய்த சீர்திருத்தங்கள் மூலமாகவே தமிழகத்தில் நன்கு அறிமுகமானவர். 1995 பேட்ஜ் அதிகாரியான உதயச்சந்திரன், நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர். இளம்வயதிலேயே ஐ.ஏ.எஸ் அதிகாரியானவர். அதனால்தான் என்னவோ இவர் பணியாற்றிய இடமெல்லாம் புது ரத்தம் பாய்ச்சினார். ஈரோடு மாவட்ட ஆட்சியராக மக்கள் இதயங்களில் இடம்பிடித்த உதயச்சந்திரன், மதுரையில்  பல ஆண்டுகளாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாத 3 கிராமங்களுக்கு வெற்றிகரமாக தேர்தலை நடத்திக் காட்டியவர்.

image

முன்பெல்லாம் காசு கொடுத்தால்தான் அரசுப்பணி என்ற நிலையில் முறைகேடுகள், ஊழல் மண்டிக்கிடந்த டிஎன்பிஎஸ்சி நிர்வாகத்தின் களைகளை பிடுங்கியெடுத்தவர் இவர். டிஎன்பிஎஸ்சி துறையின் அத்தனை அம்சங்களையும் டிஜிட்டலில் வெளிப்படைத்தன்மையுடன் கொண்டுவந்து பல்லாயிரக்கணக்கானவர்களின் அரசு வேலைக் கனவை உறுதிப்படுத்தியவர். பள்ளிக் கல்வித்துறையில் பதவியேற்றபின்னர் புதிய சமச்சீர் பாடத்திட்டம் உருவாக்கத்திலும், வெளிப்படையாக மதிப்பெண் அறிவிக்கும் முறையை ஒழித்ததிலும் முக்கிய பங்காற்றியவர். தொல்லியல் துறைக்கு பொறுப்பேற்ற பின்னர் தமிழரின் ஆணிவேரான கீழடியின் பெருமைகளை ஆவணப்படுத்தியதும் இவரின் அரும்பணிதான்.

உமாநாத் ஐஏஅஸ் (முதல்வரின் தனிச் செயலாளர் - 2)

தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழக மேலாண் இயக்குனராகப் பதவி வகித்த உமாநாத், தற்போது முதல்வரின் தனிச் செயலர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டுள்ளார். அடிப்படையில் எம்.பி.பி.எஸ் மருத்துவரான இவர், 2001-ஆம் ஆண்டு சிவில் சர்வீஸ் பணியில் இணைந்த அதிகாரி ஆவார். இவரது சொந்த ஊர் விருதுநகர் மாவட்டம் சாத்தூர்.  இவர் கோவை மாவட்ட ஆட்சியராக பணியாற்றியபோது மாவட்ட நிர்வாகத்தில் பல சிறப்புமிக்க சீர்திருத்தங்களை செய்தவர். 2010-ஆம் ஆண்டு, மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சியில் இருந்தபோது கோவையில் செம்மொழி மாநாடு நடத்தப்பட்டபோது இவர்தான் மாவட்ட ஆட்சியர், அதனால் கருணாநிதியின் குட்புக்கில் இடம்பெற்ற அதிகாரி இவர்.

image

கடந்த ஆட்சியில் தமிழ்நாடு மருந்து பொருட்கள் கழக இயக்குநராக பதவிவகித்த இவர்தான் கொரோனா சிகிச்சைக்கான மருந்துகளை முன்கூட்டியே கொள்முதல் செய்தது, ஆக்சிஜன் இருப்பினை உயர்த்தியது போன்ற பணிகளை திறம்பட செய்து கொரோனா தடுப்பு பணிகளில் முக்கிய பங்காற்றியனார். அதுபோல TNMSC எனப்படும் தமிழ்நாடு மருந்துப்பொருள் கழகத்தை தனியார் கைகளுக்கு செல்லாமல் காப்பாற்றியவரும் இவர்தான். இடஒதுக்கீடு பற்றிய ஆழமான புரிதல் உள்ள இவர், அது தொடர்பான மத்திய குழுக்களிலும் இடம்பெற்றவர்.

எம்.எஸ்.சண்முகம் (முதல்வரின் தனிச் செயலாளர் - 3):

அருங்காட்சியக இயக்குனராகப் பதவி வகித்த எம்.எஸ்.சண்முகம், முதல்வரின் தனிச் செயலாளர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டுள்ளார். எம்.ஏ. பொருளாதாரம் பயின்று சிவில் சர்வீஸ் தேர்ச்சி பெற்று 2002-ஆம் ஆண்டு பணியில் இணைந்த அதிகாரியான இவர் சென்னையை சேர்ந்தவர். தஞ்சை மாவட்ட ஆட்சியராக பணியாற்றிய இவர், அம்மாவட்டத்தில் நிர்வாக ரீதியாகவும், மக்கள் எளிதில் அணுகும் வகையிலும் பல முன்மாதிரி முயற்சிகளை செய்தவர். பாரத் நெட் டெண்டர் பிரச்னை வந்தபோது அந்த ஏல முறையே தவறானது என்று கூறி ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்தவர். இதன் காரணமாக அமைச்சர்களுடன் ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக இவர் இடமாற்றம் செய்யப்பட்டார்.

image

அனு ஜார்ஜ் (முதல்வரின் தனிச் செயலாளர் - 4): 

தொழிற்சாலைகள் மற்றும் வணிகத்துறை இயக்குனர், தொழிற்சாலைகள் ஆணையர் பதவி வகித்த அனு ஜார்ஜ், தற்போது முதல்வரின் செயலர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டுள்ளார். கேரளாவை சேர்ந்த இவர் எம்.ஏ. சோஷியாலஜி படித்தவர். 2003-ஆம் ஆண்டு சிவில் சர்வீஸ் பணியில் இணைந்த அதிகாரி ஆவார். அரியலூர் மாவட்ட ஆட்சியராக இவர் பணியாற்றியபோது, அம்மாவட்டத்தில் சத்துணவு அமைப்பாளர்களுக்கு அமைச்சர்களின் அழுத்தங்களையும் மீறி தகுதியானவர்களுக்கு பணி வழங்கினார். ஆசிரியர் பணி நியமனத்தில் நடந்த முறைகேடுகளுக்காக பல கல்வித்துறை அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்து வழக்கு போட்டவர்; இதற்குப் பரிசாக இடமாற்றம் கிடைத்தது.

image

பொதுப்பணித்துறை இணை செயலாளர், தமிழ்நாடு சர்க்கரை கழக இயக்குநர் பணிகளில் திறம்பட பணியாற்றிய இவர்தான், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் இறுதி சடங்கினை அமுதா ஐ.ஏ.எஸ் உடன் இணைந்து திறம்பட நிர்வகித்து நடத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

-வீரமணி சுந்தரசோழன் 

சற்று முன்எடிட்டர் சாய்ஸ்