Published : 21,Apr 2021 09:34 PM

கொரோனா விரைவுச் செய்திகள் ஏப்.21: ஸ்டாலின் கண்டனம் முதல் தடுப்பூசி விலை உயர்வு வரை

Corona-Quick-News-Apr-21-From-Stalins-Condemnation-to-Vaccine-Price-Rise

* நிர்வாகத்தில் உலக மகா நிபுணர் என்று பிரச்சாரம் செய்யப்பட்ட பிரதமர் மோடி கொரோனா தொற்றை தடுப்பதில் படுதோல்வி அடைந்திருப்பது ஏன் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தடுப்பூசிகளை வீணடித்துள்ள முதல் மாநிலம் தமிழகம் என்ற அவல நிலையை அதிமுக அரசு உருவாக்கியிருப்பது அதிர்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளார். அதற்கு தமிழக அரசு சொல்லும் காரணம் ஏற்றுக்கொள்ளும்படி இல்லை என்று குறிப்பிட்டுள்ள ஸ்டாலின், முதல் அலைபோல், இரண்டாவது அலையிலும் அதிமுக அரசின் அலட்சியம் மிகுந்த செயல்பாடு கண்டனத்திற்குரியது எனக் கூறியுள்ளார்.

* கொரோனா தடுப்பூசியான கோவிஷீல்டின் விலையை இரு மடங்காக உயர்த்தி சீரம் இந்தியா நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஏற்கனவே ஒரு டோஸ் கோவிஷீல்டு 250 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் இனி தனியார் மருத்துவமனைகளுக்கு ஒரு டோஸ் கோவிஷீல்டு 600 ரூபாய்க்கும் மாநில அரசுகளுக்கு 400 ரூபாய்க்கும் விற்கப்படும் என சீரம் இந்தியா தெரிவித்துள்ளது.

* இந்தியாவில் பரவி வரும் இரட்டை திரிபுள்ள உருமாறிய கொரோனா வைரசில் இருந்தும் கோவேக்சின் தடுப்பு மருந்து பாதுகாப்பு தரும் என ஐசிஎம்ஆர் எனப்படும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. நாடெங்கும் கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் அதற்கு இந்தியாவில் புதிதாக உருவாகியுள்ள DOUBLE MUTANT STRAIN எனப்படும் இரட்டைத் திரிபு வைரஸ் ஒரு காரணமாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

* நாட்டில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், நாடு முழுமைக்குமான தடுப்பூசிக்கு இரண்டே இரண்டு நிறுவனங்களை மட்டுமே இந்தியா நம்பியிருக்கிறது. தமிழகத்தில் மட்டுமே 3 பொதுத்துறை நிறுவனங்கள் இருந்தும் தடுப்பூசி தயாரிக்க முடியாமல் இருக்கும் சூழல் உள்ளது.

*கொரோனா சிகிச்சைக்கு அளிக்கப்படும் ரெம்டெசிவிர் மருந்துக்கு தட்டுப்பாடு இல்லை என அரசு கூறினாலும், கள நிலவரம் வேறுமாதிரியாகதான் இருக்கிறது. சென்னையிலும், புதுச்சேரியிலும் நமது செய்தியாளர்கள் நடத்திய கள ஆய்வில் மருந்தகங்களில் ரெம்டெசிவிர் இல்லாதது தெரியவந்துள்ளது. 

* இரவு நேர ஊரடங்கு அமலில் இருப்பதால் சென்னையில் இருந்து காலையிலேயே ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட்டன. இரவு 10 மணிக்குள்ளாக நீண்ட தூர பயணங்களை முடித்து கொள்ள ஏதுவாக சென்னையில் இருந்து காலையிலேயே ஆம்னி பேருந்துகள் புறப்பட்டன.குறிப்பாக தென் மாவட்டங்களுக்கு 7 மணியில் இருந்தே ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட்டன. வழக்கமாக தென் மாவட்டங்களுக்கு நாளொன்றுக்கு 700 பேருந்துகள் இயக்கப்படும். ஆனால் இன்றைக்கு 90 பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டன.

*தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்துள்ள நிலையில், இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை சென்னை புறநகர் ரயில்கள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. திருத்தப்பட்ட புதிய கால அட்டவணை வியாழக்கிழமை முதல் அமலாகும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. முழு ஊரடங்கு நாளான ஞாயிற்றுகிழமை, 2 மணி நேரத்திற்கு ஒரு புறநகர் ரயில் இயக்கப்படும் என்றும், அதிலும் முன் கள பணியாளர்கள் மற்றும் அத்தியாவசிய பணியாளர்கள் மட்டுமே பயணம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

* வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் 4 நோயாளிகள் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக விளக்கமளிக்க, மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளிகள் 4 பேர் கடந்த 19ஆம் தேதி அடுத்தடுத்து உயிரிழந்தனர். ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டதாலே அவர்கள் உயிரிழந்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அதுதொடர்பாக மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளது.

* ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே கொரோனா தொற்று பாதித்தவர்களின் வீட்டை அக்கம்பக்கத்தினர் இரவு நேரத்தில் பூட்டிவிட்ட அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. நெல்லூர் அருகே அடுக்குமாடி குடியிருப்பில் தாய், தந்தை, மகன் கொண்ட குடும்பம் வசித்துவருகிறது. இவர்களில் பெற்றோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்திக்கொண்டுள்ளனர். இவர்களின் மகன் இரவு நேரத்தில் அருகில் உள்ள மருந்தகத்திற்குச் சென்று தேவையான மருந்துகளை வாங்கி வந்தார். இதைக்கண்ட அக்கம்பக்கத்தினர் இரவு நேரத்தில் இவர்களின் வீட்டை வெளியே பூட்டிவிட்டனர்.

சற்று முன்எடிட்டர் சாய்ஸ்