[X] Close >

திடீர் 'நேதாஜி பற்று'... - மேற்கு வங்கத்தில் பாஜக Vs திரிணாமுல் தீவிரமாவதன் பின்புலம்!

Trinamool--BJP-are-competing-over-Netaji-Subhash-Bose-ahead-of-Bengal-polls

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்தநாளை கொண்டாட திரிணாமுல் காங்கிரஸும், பாஜகவும் ஒரு போரையே நடத்தத் தொடங்கியுள்ளனர். மேற்கு வங்க தேர்தல் களத்தின் அனலை இது கூட்டும் விதமாக இருக்கிறது.


Advertisement

மேற்கு வங்கத்தின் தேர்தல் நெருங்கும் வேளையில், பாஜக Vs திரிணாமுல் கட்சிகளின் சண்டை என்பது அரசியல் அல்லது குடிமைப் பிரச்னைகள் மட்டுமல்ல, நேதாஜி வடிவிலும் தீவிரமடைந்துள்ளது. இதை சற்று விரிவாகப் பார்ப்போம்.

அண்மையில் மேற்கு வங்க பயணத்தின்போது, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா புரட்சியாளர் குடிராம் பாசு மற்றும் நோபல் பரிசு பெற்ற ரவீந்திரநாத் தாகூர் ஆகியோருக்கு மலர் அஞ்சலி செலுத்தினார். பிரதமர் நரேந்திர மோடி கூட வியாழக்கிழமை, தாகூரின் விஸ்வ பாரதி பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு விழாக்களில் உரையாற்றியபோது, இலக்கிய புராணக்கதைகளின் பார்வை 'ஆத்மநிர்பர் பாரதத்தின்' சாராம்சம் என்றார்.


Advertisement

இப்படி பாஜக தலைவர்கள் மேற்கு வங்கம் வரும்போதெல்லாம் வங்காளத்தின் தலைவர்களை பூஜிக்க தவறுவதில்லை. குடிராம் பாசு, ரவீந்திரநாத் தாகூர் வரிசையில் தற்போது நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்தநாளைக் கொண்டாட திரிணாமுல் காங்கிரஸும், பாஜகவும் ஒரு போரையே நடத்தத் தொடங்கியுள்ளனர். நேதாஜியின் 125-வது பிறந்த நாள் ஜனவரி 23 ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. இதனை சிறப்பாக செய்ய அமித் ஷா தலைமையில் மத்திய அரசு பெரிய திட்டங்களை வகுத்து வருகிறது. மறுபுறம், அதற்கு சளைக்காமல் மம்தாவும் மேற்கு வங்க அரசு சார்பில் ஒரு வருட கொண்டாட்டத்தை, அதாவது 2022 ஜனவரி 23 வரை நேதாஜியின் பிறந்தநாளை மாநில அரசு சார்பில் கொண்டாட திட்டங்களை முன்னெடுக்க உள்ளார். இதற்காக குழு ஒன்றையும் அமைத்துள்ளார்.

அமர்த்தியா சென் மற்றும் அபிஜித் பினாயக் பாண்டியோபாத்யாய் இந்தக் குழுவின் தலைவர்களாகவும், கவிஞர் ஷங்கா கோஷ் மற்றும் நேதாஜியின் உறவினர் சுகதா போஸ் ஆகியோரும் இந்தக் குழுவில் உறுப்பினர்களாக இடம்பெற்றுள்ளனர். ஒவ்வொரு மாவட்டத்திலும் நேதாஜியின் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் நடத்துவது, நேதாஜியின் சிலைகள் மற்றும் புகைப்படங்களுக்கு மாலை அணிவித்தல், அதைத் தொடர்ந்து கலாச்சார நிகழ்ச்சிகள் மற்றும் நேதாஜி தொடர்புடைய திரைப்படத் திரையிடல்கள் என அமர்களப்படுத்த வேண்டும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் திரிணாமுலின் வலிமையை பறைசாற்ற வகையில் செயல்பட வேண்டும் என அக்கட்சித் தொண்டர்களுக்கு கட்சி மேலிடம் உத்தரவிட்டுள்ளது எனக் கூறப்படுகிறது.

ஜனவரி 23ம் தேதி முதல்வர் மம்தா நேதாஜி தொடர்பான ஒரு பொதுக் கூட்டத்தில் உரையாற்றுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் அரசு நிகழ்ச்சிகளைத் தவிர, பள்ளிகளிலும் தனியார் நிறுவனங்களிலும் நேதாஜியின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட மாநில அரசு ஓர் ஆலோசனையை வெளியிட்டுள்ளது.


Advertisement

image

திரிணாமுல் நிலவரம் இப்படி இருக்க, பாஜகவும் மத்திய அரசும் நேதாஜியின் பிறந்தநாளை மாநில அரசுக்கு சளைக்காமல் கொண்டாட வேண்டும் என வேலை பார்க்கத் தொடங்கியுள்ளது. ஏற்கெனவே அமித் ஷா தலைமையில் கொண்டாட்டங்களுக்கான ஒரு குழுவை மத்திய அரசு அறிவித்துள்ளது. நேதாஜி உறவினர் சந்திரபோஸ் மற்றும் பிற முக்கிய நபர்கள் இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளனர். மேற்கு வங்கத்தில் பாஜக அன்றைய தினம் தெருமுனை கூட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ளது. மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பள்ளிக் குழந்தைகளையும் பங்கேற்க ஏற்பாடு செய்து வருகிறது. மேலும், ஜனவரி 23 அன்று கொல்கத்தாவில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் உரையாற்றுமாறு பிரதமர் மோடியிடம் மாநில பாஜக பிரிவு கோரியுள்ளது. பிரதமர் அலுவலகம் இப்போது அதற்கேற்ப ஓர் அட்டவணையைத் தயாரித்து வருகிறது எனக் கூறப்படுகிறது.

திடீர் `நேதாஜி பற்று' ஏன்?!

மம்தா பானர்ஜி வங்காள கலாசாரத்தில் ஆழமாக வேரூன்றியவர், மாநிலத்தின் அடையாளங்களை, தலைவர்களை எப்போதும் மதிப்பதும் ஒரு சராசரி வங்காளியின் உணர்ச்சிகளைப் பகிர்ந்து கொள்வதும் அவரின் ரத்தத்தில் ஊறியிருக்கிறது என்பது திரிணாமுலின் வாதம். மேலும் இந்த உணர்ச்சி வெளி நபர்களுக்கு இருக்காது என்று பாஜகவை சாடியுள்ளனர். முதல்வர் மம்தாவும், தேர்தல்கள் நெருங்கி வருவதால் திடீரென பாஜக 'நேதாஜி பக்தர்களாக' மாறிவிட்டது என சீண்டியுள்ளார்.

அதேநேரத்தில் பாஜகவோ, ``நேதாஜியை கொண்டாட திரிணாமுலுக்கு எந்த உரிமையும் இல்லை. அவர் தொடர்பான பல ஆவணங்களை வகைப்படுத்திய முதல் பிரதமர் மோடிதான். மேலும், அடல் பிஹாரி வாஜ்பாய் பிரதமராகவும், லால் கிருஷ்ணா அத்வானி உள்துறை அமைச்சராகவும் இருந்தபோது, நேதாஜி காணாமல் போனது குறித்து விசாரிக்க முகர்ஜி கமிஷனை அப்போதைய தேசிய ஜனநாயக கூட்டணி அமைத்தது.

image

நேதாஜி காணாமல் போனது குறித்து விசாரிக்க ஷா நவாஸ் கமிட்டி (1956) மற்றும் கோஸ்லா கமிஷன் (1970) ஆகியவற்றிற்குப் பிறகு மூன்றாவது குழுவாக முகர்ஜி கமிஷன் இருந்தது. முகர்ஜி கமிஷன் அறிக்கை இடதுசாரி வரலாற்றாசிரியர்களுக்கும், நேதாஜியின் உறவினர்களான சுகதா போஸ் மற்றும் அவரது தாயார் மறைந்த கிருஷ்ணா போஸுக்கும் கூட ஆதரவாக இருந்தது" என்று தன் பங்குக்கு பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகிறது.

1945-ல் தைவானில் நடந்த விமான விபத்தில் நேதாஜி இறக்கவில்லை என்று வங்க மக்கள் பலரும் இன்றும் அதை நம்புகிறார்கள். அவரின் தாக்கம் வங்காள மக்கள் மத்தியில் இப்போதும் இருக்கின்றன. நேதாஜியின் மரணத்தைச் சுற்றியுள்ள மர்மம் இன்னும் நீடிக்கிறது. ஆனால், திரிணாமுல் மற்றும் பாஜக இரு கட்சிகளும் நேதாஜியின் மரணத்தில் உள்ள மக்களின் உணர்ச்சிகளைப் பயன்படுத்த விரும்புகிறார்கள் என்பதே உண்மை. இதனால் இந்தத் தேர்தல் நேரத்தில் நேதாஜி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவராக மாற்றப்பட்டுள்ளார்.

ஏனெனில், இந்த தேர்தல் 'இந்து தேசியவாதம் மற்றும் பெங்காலி பெருமை' பிரச்னையாக மாறியுள்ளது. இதனால் நேதாஜி மட்டுமல்ல, பிற வங்காள தலைவர்களான ரவீந்திரநாத் தாகூர், ராஜா ராம் மோகன் ராய், சுவாமி விவேகானந்தர், ராமகிருஷ்ண பரமஹம்சா, பாங்கிம் சந்திர சட்டோபாத்யாய் போன்றவர்களுக்கும் இரு கட்சியினரும் மாறி மாறி முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்கள்.

- மலையரசு

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close