[X] Close >

'2 சிறுவர்களைக் கொன்ற ராணுவ வீரர்கள்'... ஆஸ்திரேலியா - சீனா மோதலின் பின்னணி!

Children-killed-what-is-the-issue-behind-clash-of-Australia-and-China

ஆஸ்திரேலியா - சீனா இடையே நிலவும் மோதல், போர்க்குற்றம் சுமத்தும் அளவுக்கு சென்று இருக்கிறது. சமீபத்தில் வெளியான புகைப்படம் அதற்குச் சான்றாக அமைந்துள்ளது.


Advertisement

சீனாவில் இருந்து கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்தபோது பல நாடுகள் அந்நாட்டை விசாரணை கூண்டில் நிற்க வைக்க விரும்பின. அவற்றில் ஒன்று ஆஸ்திரேலியா. நோய்த்தொற்று உருவானது குறித்து சீனாவிடம் விசாரணை நடத்த ஆஸ்திரேலியா தொடர்ந்து வற்புறுத்தியது. அவ்வளவுதான் அப்போது இருந்தே இருநாடுகளுக்கும் இடையிலான மோதல் தொடங்கிவிட்டது. இரு நாடுகளும் ஒவ்வொரு விவகாரங்களிலும் முட்டிக்கொண்டு இருக்கின்றன. பல மாதங்கள் ஆன பின்பும் இந்த மோதல் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன. சீனாவோ மதுபானம், பார்லி, மாட்டிறைச்சி உள்ளிட்ட சுமார் 12-க்கும் மேற்பட்ட ஆஸ்திரேலிய பொருட்கள் மீதான இறக்குமதிக்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.

image


Advertisement

போதாக்குறைக்கு ஆஸ்திரேலியாவின் உள்நாட்டு விவகாரங்களிலும் சீனாவின் தலையீடு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இது ஆஸ்திரேலியாவுக்கு எரிச்சலையூட்டவே, பதிலுக்கு அந்த நாடும் தங்களால் முடிந்தவற்றைச் செய்யத் தொடங்கியது. சீன நிறுவனமான ஹுவாவே ஆஸ்திரேலியாவில் 5ஜி தொலைத்தொடர்பு துறையில் கால்பதிக்க முயற்சித்தது. சீன அரசின் மீதான கோபத்தால் ஹுவாவேவுக்கு தடை விதித்தார் ஆஸ்திரேலிய பிரதமர் மோரிசன். மேலும், சீனாவின் ஜின்ஜியாங், ஹாங்காங் மற்றும் தைவான் விவகாரங்களில் மூக்கை நுழைத்து சீனாவுக்கு அதிர்ச்சி கொடுத்தார். சீனா வேண்டுகோள் விடுத்தும், இந்த விவகாரங்களில் ஆஸ்திரேலியா தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள முடியாது என்று திட்டவட்டமாக கூறிவிட்டது.

இந்த மோதல் தற்போது உச்சத்தை எட்டியுள்ளது. ஆப்கானிஸ்தானில் நிலவும் போரில் ஆஸ்திரேலிய ராணுவ வீரர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இவர்கள் ஆப்கானிய குடிமக்கள்மீது தாக்குதல் நடத்துவதாக செய்திகள் வந்தவண்ணம் இருக்கின்றன. இதற்கிடையே, சமீபகாலமாக ஆஸ்திரேலியா ராணுவ வீரர்கள் மீது போர்க்குற்றம் சுமத்தத் தொடங்கியுள்ளது சீனா. சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் லிஜியன் நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டார். அதில், ஆஸ்திரேலிய ராணுவ வீரர் ஒருவர் ஆப்கன் குழந்தையின் கழுத்தில் கத்தியை வைத்திருப்பதையும், கத்தியில் ரத்தம் இருக்கும் வகையிலும், அந்தக் குழந்தை ஆட்டுக்குட்டி ஒன்றை இறுக்கப்பிடித்திருந்த நிலையிலும் அந்தப் புகைப்படம் இருந்தது.

image


Advertisement

மேலும் புகைப்படத்துடன், "ஆப்கன் மக்களும் கைதிகளும் கொடூரமான முறையில் ஆஸ்திரேலிய வீரர்களால் கொல்லப்பட்ட தகவல் அதிர்ச்சியளிக்கிறது. இந்தச் செயல்களை வன்மையாக கண்டிக்கிறோம். இதில் சம்பந்தப்பட்டவர்கள் சம்பவத்துக்கு பொறுப்பேற்க வேண்டும்" என்றும் அவர் பதிவிட்டிருந்தார். ஆஸ்திரேலிய ராணுவ வீரர்கள் 14 வயதான இரண்டு ஆப்கன் சிறுவர்களை கத்தியை வைத்து கொலை செய்ததாக குற்றச்சாட்டு சமீபத்தில் வெளியான நிலையில், அந்தச் சம்பவத்தை குறிக்கும் வகையில் இந்தப் புகைப்படம் சீனா வெளியிட்டிருந்தது. 2009-2013க்கு இடையில் ஆப்கன் மக்கள், கைதிகள் 39 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 25 ஆஸ்திரேலிய வீரர்களுக்கு தொடர்பு இருப்பதாக ஆஸ்திரேலிய பாதுகாப்புப்படை அறிக்கை வெளியிட்டு, விசாரணை நடைபெற்று வரும் நிலையில். சீனா வெளியிட்ட புகைப்படம் கூடுதல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனால் ஆஸ்திரேலிய வீரர்களுக்கு கண்டனங்கள் பெருகியது. ஆனால் ஆஸ்திரேலியாவோ, இந்தப் புகைப்படம் போலியானது என்று கூறியுள்ளது. இதுதொடர்பாக பேசியுள்ள ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன், ``பழிவாங்கும் எண்ணத்துடன் போலியான, மூர்க்கத்தனமான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்கள். இந்தப் போலி புகைப்படம் எங்கள் படைகள் மீது மோசமான கறையை படிய செய்கிறது. இந்த தவறான பதிவுக்காக சீனா வெட்கப்பட வேண்டும். ஜனநாயக முறைப்படி, போர்க்குற்றங்களை விசாரிக்க எங்கள் நாடு வெளிப்படையான செயல்முறையை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் சீனாவின் செயல் உலக நாடுகளின் பார்வையில் அவர்களை தாழ்த்துகிறது. சீனா - ஆஸ்திரேலியா இடையேயான உறவில் சந்தேகத்திற்கு இடமின்றி பதற்றம் நிலவ தொடங்கியுள்ளது.

சீன மூத்த அமைச்சர்களுடன் சந்திப்பு நடத்துவதற்கான ஆஸ்திரேலியாவின் கோரிக்கைகள் தொடர்ந்து நிராகரிக்கப்பட்டு வருகின்றன. எங்கள் நாடுகள் மீதான சீனாவின் நடவடிக்கைகளை உலக நாடுகள் கவனித்து வருகின்றன" எனக் கூறியுள்ளார். இதற்கிடையே, ஆஸ்திரேலிய வீரர்கள் சிறுவர்களை கொலை செய்ததற்கான ஆதாரங்கள் இல்லை என்றாலும், ராணுவத்தின் இளநிலை வீரர்கள் தங்களின் முதல் கொலையாக கைதிகளை சுடுவதற்கு ஊக்குவிக்கப்பட்டனர் அந்நாட்டு செய்தி நிறுவனங்களே ஆதாரத்துடன் செய்தி வெளியிட்டு வருகின்றன. மேலும், சட்டவிரோத கொலைகளை உறுதிசெய்யும் வகையிலான சான்றுகள் கிடைத்துள்ளதாகவும், ஆஸ்திரேலிய ராணுவ வீரர்களுக்குள் போர் வீரர் கலாசாரம் இருப்பதாகவும் அந்நாட்டின் பாதுகாப்பு படை அறிக்கை அளித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close