“ஓபிஎஸ்-க்கு ஆதரவு குரலா? அதிமுக அலுவலகத்தில் என்ன நடந்ததுனு தெரியுமா?” விந்தியா பேட்டி

vindhiya-interview

அதிமுகவில் ’கொள்கைப் பரப்பு துணைச் செயலாளர்’ என்ற புதிய பொறுப்பு கொடுத்த மகிழ்ச்சியில் இருக்கிறார் நடிகை விந்தியா. அதிமுகவின்  தேர்தல் பிரச்சாரங்களில் சுட்டெரிக்கும் கத்தரி வெய்யிலையும் தாண்டி எதிர்கட்சிகளை வறுத்தெடுக்கும் விந்தியாவின் அனல் கக்கும் பேச்சு. அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் தயாராகிக்கொண்டிருக்கும் சூழலில், அதிமுகவின் கொள்கைப் பரப்பு துணைச் செயலாளர் விந்தியாவும் பிரச்சாரக் களத்திற்கு தயாராகிக்கொண்டிருக்கிறார். அவரிடம் பல்வேறு கேள்விகளை முன்வைத்தோம்,  


Advertisement

 14 வருடங்களாக அ.தி.மு.கவில் இருந்தும் கொள்கை பரப்பு துணைச் செயலாளராக தாமதமாகப் பதவி கொடுக்கப்பட்டிருக்கிறதே?

 சிலர் தங்களை நிரூபிக்க நேரம் எடுத்துக்கொள்வது தவறில்லை. அந்த ராமரே 14  வருடம் காத்திருக்கவில்லையா? அரசியலில் அங்கீகாரம் தான் முக்கியம். சீக்கரமா? தாமதமா? என்பதெல்லாம் தேவையற்றது. நாளை என்ன நடக்கும் என்று நான் நினைப்பதில்லை. இன்று எனது கடமையை சரியாகச் செய்யவேண்டும் என்றே நினைக்கிறேன். ’கடமையைச் செய்; பலனை எதிர்பார்க்காதே’ என்ற பழமொழியை பின்பற்றுகிறேன். பொறுப்பு என்று எதுவும் இல்லாத போதும் பொறுப்போடு செயல்படுகிறவர்கள்தான் புரட்சிதலைவர், அம்மா வழி வந்த அதிமுக தொண்டர்கள்.


Advertisement

image

 உங்களை அதிகமாக பார்க்க முடிவதில்லையே என்னக் காரணம்? 

 அதிமுகவில் இதற்கு முன்பு  நான் நட்சத்திரப் பேச்சாளர். தேர்தல் நேரத்தில் என் பேச்சைக் கேட்டும் தினமும் என்னை பார்த்தும் இருப்பீர்கள். இப்போது பொறுப்பு கொடுத்திருக்கிறார்கள். அதுவும் கொரோனா காலத்தில் நம்ம பப்ளிசிட்டியைவிட மக்கள் சேவை  முக்கியம் என்பதை உணர்ந்து என்னால் முடிந்த உதவிகளை சத்தம் இல்லாமல் செய்துகொண்டு வருகிறேன். தேர்தல் நெருங்க, நெருங்க எப்படா நான் ஆரம்பிப்பேன்னு நீங்கள் எதிர்பார்பீர்கள். எதிர்கட்சிகள் ’ஐயோ விந்தியா பேச ஆரம்பிச்சிட்டாங்களே’ன்னு பயப்படுவாங்க.


Advertisement

 வரும் சட்டமன்றத் தேர்தல் பணிகள் அதிமுகவில் எப்படி போய்க்கொண்டிருக்கிறது? 

 மிகச்சிறப்பாக  கவனமாக வெற்றியை நோக்கி நிதானமாகவும் விவேகமாகவும் போய்கொண்டிருக்கிறது அதிமுக. மக்களுக்கு அரசு தொடர்ந்து நல்ல முறையில் பணி செய்துகொண்டு வருகிறது. இதுவே தேர்தல் பணிதான். அதனை அம்மாவின் வழி நடக்கும் முதல்வர் எடிப்பாடியாரின் அரசு சிறப்பாக செய்துகொண்டு வருகிறது. நிச்சயம் வெற்றி எங்களுக்குத்தான்.

image

 எப்போதுதான் தேர்தலில் போட்டியிடுவீர்கள்? 

 நான் ஏன் போட்டியிட வேண்டும்? நான் போட்டியிட புதிய தலைமுறை விரும்புகிறதா?

 பொதுவாகவே, அதிமுகவில் சேரும் நடிகர்களுக்கு தேர்தலில் நிற்க வாய்ப்பு கொடுப்பதே இல்லையே?

எத்தனை நடிகர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு இருக்கிறது? அவர்களில் எத்தனை பேருக்கு  வெற்றிபெற எத்தனை சதவீத வாய்ப்பு இருக்கிறது என்பதை சொல்லிவிட்டு இந்தக் கேள்வியை கேளுங்கள். நான் பதில் சொல்கிறேன். புரட்சித் தலைவரையோ அம்மாவையோ மிஞ்சும் ஈர்ப்பு சக்தி யாரும் கிடையாது என்பது அதிமுக தொண்டர்களின் ஆணித்தரமான நம்பிக்கை. அந்த ஈர்ப்பு சக்தி இல்லாத கட்சிகள் ஏதாவது செய்தால் நாங்களும் செய்யவேண்டும் என்பது அவசியம் இல்லை.

 ஜெயலலிதா தலைமையில் இருந்துவிட்டு இ.பி.எஸ் - ஓ.பி.எஸ்ஸுடன் பணியாற்றுவது  எப்படி இருக்கிறது? 

 மிகவும் திருப்தியாகவும் தைரியமாகவும் இருக்கிறது. அம்மா இருக்கும் போது எனக்கு இருந்த, அதே பாதுக்காப்பு இப்போதும் உள்ளது. இருவரின் தலைமையில் பணியாற்றுவது எனக்கு கிடைத்த பெரிய வாய்ப்பாக உணருகின்றேன்.

image

ஜெயலலிதா சமாதியில்

 ஓ.பி.எஸ்தான் ஜெயலலிதாவின் அரசியல் வாரிசு என்று தொண்டர்கள் கோஷம் எழுப்பியுள்ளதை எப்படி பார்க்கிறீர்கள்? 

 அதிமுகவில் பல கோடித் தொண்டர்கள் இருக்கிறார்கள். நாங்கள் எல்லோருமே அம்மா வழி நடக்கும் பிள்ளைகள்தான். முதல்வர் இ.பி.எஸ்,  துணைமுதல்வர் ஓ.பி.எஸ் எங்களை வழி நடத்திச் செல்லும் மூத்த அண்ணன்கள். அண்ணன், தம்பி, பையன், பொண்ணு, மருமகன், மாமன், அக்கா புருஷன்னு எல்லோருக்கும் பதவியை பிரித்துக் கொடுக்க இது திமுக இல்லை. மேலும், அதிமுக உயர்மட்டக்குழு கூட்டத்தின்போது, ’ஓ.பி.எஸ் அம்மா வாரிசு’ என்று பத்துபேரும், ’நிரந்தர முதல்வர் எடப்பாடியார்’ என்று பத்து பேரும் கத்தினார்கள் என்று ஊடகங்களில் வெளியானது உண்மை கிடையாது. ‘அண்ணன் எடப்பாடியார் வாழ்க; அம்மா விசுவாசி ஓ.பி.எஸ் வாழ்க’ என்றுதான் கத்தினார்கள். ஆனால், வார்த்தைகள் மாற்றி ஊடகங்களில் தவறாக வெளியாகியுள்ளது. இதற்கு சாட்சியை பத்துபேரை என்னால் உறுதியாக சொல்ல வைக்க முடியும். நான் உண்மைகளைத்தான் பேசுவேன்.

image

 சசிகலா விடுதலைக்குப்பிறகு தமிழக அரசியலில் மிகப்பெரிய தாக்கம் ஏற்படும் என்று அதிமுகவின் அன்வர் ராஜா கூறியிருக்கிறாரே? அதிமுகவிலும் மாற்றங்கள் வரும் என்கிறார்களே? உண்மையா? 

 அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட பல அமைச்சர்கள் இதற்கு விரிவாக பதில் சொல்லி இருக்கிறார்கள். அதிமுகவை பிரிக்கவோ உடைக்கவோ அசைச்சு பார்க்கவோ  எந்த சக்திக்கும் அனுமதி கிடையாது.

 உங்கள் கூட்டணி கட்சியான பா.ஜ.கவில் குற்றப்பின்னணி உடையவர்கள் அதிகமாக சேர்க்கப்படுவது சர்ச்சையாகியுள்ளதே?

 சில கட்சிகளில் பத்திரிக்கை அலுவலகத்தை எரித்தவர்கள், திகார் சிறையில் இருந்தவர்கள், பல பேரைக் கொன்றுவிட்டு தற்கொலை என்று நம்ப வைத்தவர்கள் எல்லாம் தலைவராவோ எம்.பியாவோ இருக்காங்க. இதுதான் பெரிய விஷயம். அதனால், இதனையெல்லாம் கேளுங்கள். பாஜகவில் குற்றப் பின்னணி உடையவர்களை சேர்ப்பதும் சேர்க்காததும் அவங்க கட்சி விஷயம். அவர்கள் கூட்டணியில் இருந்தாலும் மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் அதிமுக வேடிக்கை பார்க்காது.

image

 முன்புபோல, படங்களில் ஏன் நடிப்பதில்லை? 

 ஒவ்வொருத்தரும் வாழ்க்கையில் அடுத்தக் கட்ட நகர்வுக்கு சில முடிவுகள் எடுப்பார்கள். நான் அப்படி எடுத்த முடிவுதான் நடிப்பை நிறுத்தியதும். மேலும், என் பர்சனல் முடிவுகளை கேள்வி கேட்க யாருக்கும் உரிமை இல்லை. அது என் சொந்த விஷயம்.

 திமுகவினரை தொடர்ச்சியாக பா.ஜ.க இழுக்கிறதே? ஆனால், அதிமுகவில்  ஏன் திமுகவினர் சேர்வதில்லை?  இழுக்க முடியவில்லையா?

 ஒவ்வொரு கட்சிக்கும் வேறுபட்டக் கொள்கை உள்ளது. பல எதிர்பார்ப்புக்கள் இருக்கிறது. அதற்கேற்றவாறு இடம் மாறுவதும் இழுக்கப்படுவதும் அவரவர் விருப்பம்.  மற்றவர்களின் அரசியலை காப்பி அடிக்க வேண்டிய இடத்தில் நாங்கள் இல்லை..

 நீங்கள் ஒரு நடிகை. உங்கள் சக நடிகையான விஜயலட்சுமி சீமான் மீது குற்றச்சாட்டுகள் வைத்தும் அதிமுக அரசு கைது செய்யவில்லை என்கிறாரே? 

 முதலில் நான் நடிப்பை நிறுத்தி ரொம்பநாள் ஆச்சு. இப்போது, நான் முழு நேர அரசியல்வாதி. இரண்டாவது, குற்றசாட்டு வைத்தவுடனேயே கைது பண்ணிட முடியுமா ? யார்  மேலாவது யாராவது குற்றசாட்டு சொன்ன உடனேயே விசாரிக்காமல் ஆதாரங்கள் இல்லாமல் அவர்களை கைது செய்தால் அதிமுக அரசு சிறப்பான அரசு என்று சொல்லவாப் போகிறார்கள்?

- வினி சர்பனா

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement