கடத்தப்பட்ட 10 நாட்களுக்கு பிறகு பத்திரமாக மீட்கப்பட்ட பெண் குழந்தை - எப்படி?

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கடத்தப்பட்ட 3 வயது பெண் குழந்தையை 10 நாட்களுக்கு பிறகு ராயபுரம் போலீசார் பத்திரமாக மீட்டனர். காவல்துறை மீட்டது எப்படி?


Advertisement

சென்னை ராயபுரம் ரயில் நிலையம் அருகே உள்ள குடிசை பகுதியை சேர்ந்தவர் பப்லு. மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த இவர் தனது குடும்பத்துடன் அப்பகுதியில் தங்கியிருந்து கட்டுமான பணிகளில் வேலை செய்து வருகிறார். இவருக்கு 3 மகளும், ஒரு மகனும் உள்ளனர். கடந்த 5-ஆம் தேதியன்று வேலை விஷயமாக சென்ட்ரல் ரயில் நிலையம் சென்றபோது அங்கிருந்த அசாம் மாநிலத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர், தான் வேலை தேடி வருவதாக கூறி பப்லு உடன் பேசியிருக்கிறார்.

உடனடியாக அவரை நம்பிய பப்லு அவரை ராயபுரம் அழைத்து வந்து மதுஅருந்தி விட்டு தனது வீட்டில் தங்க வைத்துள்ளார். 6-ஆம் தேதியான மறுநாள் மாலை வீட்டில் இருந்த பப்லுவின் 3 வயது பெண் குழந்தையான மர்ஜினா என்பவரை கடைக்கு அழைத்து செல்வதாக கூறி அழைத்து சென்றவர் அதன்பின்னர் திரும்பவே இல்லை. மேலும் குழந்தையை கடத்தி கொண்டு தப்பி சென்றுவிட்டார்.


Advertisement

image

இதுகுறித்து ராயபுரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரை பெற்று கொண்ட போலீசார் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து ராயபுரம் ரயில் நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது குழந்தையை அசாம் மாநிலத்தை சேர்ந்த சுனில் என்பவர் தூக்கி கொண்டு செல்வதுபோல காட்சிகள் பதிவாகி இருந்தது.

இந்நிலையில் குழந்தையை கடத்தி சென்ற சுனிலை பிடிக்க சென்னை தெற்கு மண்டல காவல்துறை இணை ஆணையர் பாலகிருஷ்ணன் மேற்பார்வையில் வண்ணாரப்பேட்டை துணை ஆணையர் சுப்புலட்சுமி, ராயபுரம் உதவி ஆணையர் தினகரன் தலைமையில் 6 தனிப்படைகள் அமைத்து கடத்தப்பட்ட குழந்தையையும், குழந்தையை கடத்திய நபரை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தொடர்ந்து குழந்தையை மீட்க மேலும் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.


Advertisement

குழந்தை கடத்தப்பட்டு 10 நாட்களுக்கு மேலாகியும் எந்த துப்பும் கிடைக்காத நிலையில் குழந்தையை மீட்க போலீசார் திணறி வந்தனர். இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டம் நாவலூர் பகுதியில் நடந்த கட்டுமான பணி நடக்கும் இடத்தில் இருந்த அசாம் மாநிலத்தவர்களிடம் இருந்து கடத்தப்பட்ட குழந்தையை தனிப்படை போலீசார் பத்திரமாக மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

 image

"குழந்தை கடத்தப்பட்ட அன்று கடத்தல்காரர் விட்டு சென்ற பையை சோதனை செய்தபோது அதில் கிடைத்த ஒரு மொபைல் எண்ணிற்கு தொடர்பு கொண்டபோது அது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. மேலும் தொடர்ந்து அந்த எண்ணை போலீசார் கண்காணித்து வந்தனர். மேலும் குழந்தையை கடத்திய நபரான சுனில் இதற்கு முன்பு வேலை பார்த்து வந்த மயிலாப்பூர், அம்பத்தூர், கேளம்பாக்கம் என அனைத்து இடங்களிலும் கட்டுமான பணி நடந்த இடங்களில் சோதனை செய்து வந்தனர். சென்னை மட்டுமல்லாமல் சென்னை எல்லைக்குட்பட்ட புறநகர் பகுதிகள் மற்றும் சுனில் சொந்த ஊரான அசாம் மாநிலத்திற்கு சென்றும் சோதனை செய்து வந்தனர்.

குழந்தையை மீட்க எந்த துப்பும் கிடைக்காத நிலையில் ஏற்கெனவே கிடைத்த மொபைல் போன், ஆன் செய்யப்பட்டதை அறிந்து அந்த எண்ணிற்கு தினமும் தொடர்பு கொண்டு சுனில் குறித்து போலீசார் விசாரித்தனர். குழந்தையை மீட்க அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பது தெரியாமல் இருந்த வந்த நிலையில் சுனிலை கேட்டு போன் செய்த நம்பரில் இருந்து அழைப்பு வந்தது. அதில் ஒரு குழந்தை செங்கல்பட்டு மாவட்டம் நாவலூர் பகுதியில் இருப்பதாக ஒரு தகவல் கிடைத்தது. முதலில் வேறு குழந்தையாக இருக்கும் என சந்தேகத்தில் அங்கு சென்று பார்த்தபோது அங்கிருந்தது கடத்தப்பட்ட 3 வயது குழந்தை தான் என்பது தெரிய வந்தது.

பின்னர் மேற்கொண்ட விசாரணையில், சுனில் குறித்து செல்போனில் கண்காணித்து வந்த நபர் அசாம் மாநிலத்தில் உள்ள சுனிலின் சகோதரிக்கு செல்போன் மூலம் பேசி உள்ளார். போலீசார் தன்னை தொடர்ந்து டார்ச்சர் செய்வதாக சுனிலின் சகோதரியிடம் அந்த நபர் தெரிவித்துள்ளார். அப்போது தான் குழந்தை செங்கல்பட்டில் இருப்பதாக சுனிலின் சகோதரி தெரிவித்துள்ளார். உடனடியாக அங்கு சென்று பத்திரமாக குழந்தையை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது” என போலீசார் தெரிவித்தனர்.

 image

கடத்தப்பட்ட குழந்தை மீட்கப்பட்ட நிலையில் குழந்தையை கடத்திய நபர் இன்னும் சிக்கவில்லை. மேலும் கடத்தல்காரரான சுனில் எங்கு உள்ளார்? குழந்தையை மீட்க போலீசார் தீவிரமாக களமிறங்கியுள்ளதை அறிந்து குழந்தையை செங்கல்பட்டு பகுதியில் விட்டு சென்றுள்ளாரா? இந்த குழந்தை கடத்தல் சம்பவத்தில் சுனிலுடன் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா? என சுனிலை பிடிக்கும் முயற்சியில் தனிப்படை போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து குழந்தையின் பெற்றோர் கூறுகையில், "குழந்தை கடத்தப்பட்ட நிலையில் குழந்தையை பிரிந்து மிகுந்து சிரமம் அடைந்து வந்தோம். தற்போது குழந்தை எங்களிடம் கிடைத்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. மேலும் குழந்தையை மீட்டு கொடுத்த காவல்துறையினருக்கு மிக்க நன்றி" எனத் தெரிவித்தனர்.

loading...

Advertisement

Advertisement

Advertisement