தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் தாலுகாவுக்கு உட்பட்ட தெற்கு கல்மேடு ஊரில் அமைந்துள்ளது சண்முகக்குளம் தடுப்பணை. கிட்டத்தட்ட 70 ஆண்டுகளுக்கு முன்பாக ஆங்கிலேயரால் கட்டப்பட்ட இந்த தடுப்பணை தற்பொழுது பராமரிப்பு இல்லாத காரணத்தால் சிதிலமடைந்து கிடக்கிறது.
கண்மாயின் வடதிசையில் உள்ள மதகுகள் புனரமைப்பு பணிகள் இல்லாததால் துருப்பிடித்து தூர்ந்து போகும் நிலையில் உள்ளன. தடுப்பணையில் இருந்து 50 மீட்டர் இடைவெளியில் இடதுபுறமாக கண்மாயின் தடுப்புச்சுவர் முற்றிலுமாக இடிந்து சரிந்து கிடக்கிறது. கண்மாய் தடுப்புச் சுவர்களில் பல இடங்களிலும் விரிசல் விழுந்து அந்தரத்தில் தொங்கும் விழுதுகள்போல ஆங்கிலேய கட்டுமானம் தரையில் விழுமோ? இல்லை மீளுமோ? என கேட்பது போல பரிதாபத்திற்குரிய நிலையில் உள்ளது.
தென் பகுதியில் உள்ள மதகுகள் முட்செடிகளால் சூழப்பட்டு பயன்பாட்டுக்கு லாயக்கற்ற வகையில் தூர்ந்து போய் மோசமடைந்துள்ளது. பல ஆண்டுகளாக இந்த கண்மாய்க்கு தண்ணீர் வராத காரணத்தால் நிலமெங்கும் வெடிப்புகளாய் பூமித்தாய் கோபத்தால் கொப்பளித்ததுபோல் நிற்கிறது. எப்போதும் வென்றான் ஊரிலுள்ள கட்டபொம்மன் கண்மாய் தடுப்பணையில் இருந்து வெளியேறும் உபரி நீரானது ஆதனூர், காட்டுநாயக்கன்பட்டி, முள்ளூர் ஓடை வழியாக இந்த தடுப்பணையை வந்து சேர்கிறது. இங்கு சேமிக்கப்படும் தண்ணீரைக் கொண்டு வடக்கு கல்மேடு, பட்டின மருதூர் துரைசாமிபுரம், வேப்பலோடை உள்பட சுற்றுவட்டார 10 கிராமங்களிலும் நெல் விவசாயம் நடைபெற்று வந்தது.
காலப்போக்கில் கல்லாற்று நீர், வழிப்பாதையில் முளைத்திட்ட முட் செடிகளால் தற்போது கல்லாறு முழுவதும் முட்செடிகள் ஆக்கிரமிக்கப்பட்ட காடாக மாறியுள்ளது. கண்மாய் நீரை நம்பி விவசாயம் செய்து வந்த விவசாயிகள் அனைவரும் இன்று உப்பளத்திற்கும், மானாவாரி பயிர் விவசாயத்திற்கும் மாறியுள்ளனர்.
இப்பகுதியில் தற்பொழுது மானாவாரி பயிராக வத்தல் உளுந்து உள்ளிட்டவை பயிரிடப்பட்டு அறுவடை செய்யப்படுகிறது. இருப்பினும் கண்மாயின் இந்த பரிதாபமான நிலையைப் பார்த்து கண்ணீர் விட்ட அவ்வூர் மக்கள் கண்மாயை சீரமைக்க வலியுறுத்தி பல்வேறு சமயங்களிலும் அதிகாரிகளிடம் மனு கொடுத்துள்ளனர். ஆனால் அதிகாரிகளிடம் கொடுக்கப்பட்ட மனுக்களுக்கு இதுவரையிலும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது இவ்வூர் மக்களின் மிகப்பெரும் ஆதங்கமாக உள்ளது.
கண்மாய் நீர் பாசனத்தை நம்பி பாசன வசதி பெற்று வந்த பல ஆயிரம் ஏக்கர் நிலங்கள், இப்போது சில நூறு ஏக்கர் என்று சொல்லும் அளவுக்கு மானாவாரி பயிர் விவசாயம் குறுகிவிட்டது. மீதியுள்ள இடங்கள் உப்பளங்களாக மாறி உள்ளன.
ஊர் மக்களின் தொடர் முயற்சியின் பலனாக கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கண்மாயை பார்வையிட வந்த பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்மாயை சீர் அமைப்பதற்காக பெயரளவுக்கு மட்டும் அளவீடுகள் செய்து விட்டு சென்று விட்டனர் என்று அவ்வூர் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இரு போகம் விளைந்த பூமி இன்று வானம் பார்த்த பூமியாக மழையை நம்பி காத்திருப்பது விவசாயிகளின் வயிற்றில் புளியைக் கரைக்கும் பாடாக மாறி உள்ளது. வடகிழக்கு பருவமழை இன்னும் சில தினங்களில் ஆரம்பிக்க உள்ளதால் அதற்கு முன்னர் கண்மாயை சீரமைக்க வேண்டும் என்று விவசாயிகளும், அவ்வூர் மக்களும் வலியுறுத்தி வருகின்றனர்.
Loading More post
தேவேந்திரகுல வேளாளர் மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!
கொரோனா பரவலை குறைக்க 10 முக்கிய வழிகள்: மருத்துவர் பிரதீப் கவுர் வழிகாட்டுதல்
மகாராஷ்டிராவில் அடுத்த 15 நாட்களுக்கு ஊரடங்கு: முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவிப்பு
வேளச்சேரி வாக்குச்சாவடி எண் 92-இல் ஏப்.,17ம் தேதி மறுவாக்குப்பதிவு
ஈ.வெ.ரா. சாலை பெயர் பலகை சர்ச்சை: விளக்கமளித்த நெடுஞ்சாலைத்துறை மண்டலப் பொறியாளர்
சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் மிகுந்திருப்பதின் பின்புலம் என்ன? - ஒரு பார்வை
கும்பமேளா: கங்கையில் புனித நீராடல்... கொரோனா 'கவலை' அதிகரிப்பது ஏன்?
2-ம் அலை தீவிரம்: சீரம், பாரத் பயோடெக் நிறுவன கொரோனா தடுப்பூசி உற்பத்தி நிலவரம் என்ன?
கோடை காலத்தில் உடற்பயிற்சி செய்கிறீர்களா? இவற்றையெல்லாம் கவனியுங்கள்!