'ரியாக்‌ஷன் குயின்' ராஷ்மிகா மந்தனாவின் சக்சஸ் ஃப்ரொபைல்!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

இவரின் துறுதுறு பாவனைகளும், கெத்தான உடல்மொழியும், சுண்டியிழுக்கும் தோற்றப் பொலிவும், கட்டிப்போடும் நடிப்பும் எப்பேர்ப்பட்ட இளசுகளின் நெஞ்சை துளைத்திடவே செய்யும். அந்தளவுக்கு தென்னிந்திய சினிமாவில் எக்ஸ்பிரஷன் குயினாக ரசிக்கப்படுபவர் ராஷ்மிகா மந்தனா. 


Advertisement

சினிமாவில் நாயகிகளை பொறுத்தவரை அவர்களுக்கான வெற்றி ஃபார்முலா ஒன்றே ஒன்றுதான். ரசிக்கவைக்கும் அழகும் தேர்ச்சியான நடிப்பும் ஒருசேர வெளிப்படும்போது வெள்ளித்திரையில் ஜொலிக்கிறார்கள்; ரசிகர்களை வசப்படுத்துகிறார்கள். ராஷ்மிகாவின் கரியரில் இதுதான் நேர்ந்தது. 

image


Advertisement

‘கீதா கோவிந்தம்’ என்ற ஒரே படத்தில் புகழின் உச்சாணிக் கொம்பில் சஞ்சரித்தார் ராஷ்மிகா. காதலர்களின் சின்னச் சின்ன கருத்து மோதல்களை வைத்து உருவான ஹியூமர் கலந்த படங்கள் ஏராளம். ஆனால் அந்த மோதல்களுக்கிடையே இழையோடிய மனதுக்கு நெருக்கமான காட்சிகளால் தனித்து நின்றது கீதா கோவிந்தம். தமிழ்நாட்டில் ‘பாகுபலி’ படத்துக்குக்கு அடுத்து அதிக வசூல் ஈட்டிய படமாக தடம்பதித்தது. . 

கீதா கோவிந்தத்தை பார்த்தவர்கள் விஜய் தேவரகொண்டாவை போன்ற ஒரு சாக்லேட் பாய், `மேடம் மேடம்' என உருகி நம் பின்னே சுற்றிவர மாட்டானா என இளைய பெண்களும், ராஷ்மிகா மாதிரியான ஒரு கெத்தான பெண் நம்மை முறைத்தபடியும் அதட்டியபடியும் பார்த்துக் கொண்டிருக்க மாட்டாளா என இளைய ஆண்களும் பொருத்திப் பார்ப்பதை தவிர்க்க முடியாது.

image


Advertisement

விஜய்யிடம் வெறுப்பை உமிழ்வதிலும் சரி, கெத்தாக போக்கு காட்டுவதிலும் சரி, காதலை வெளிப்படுத்துவதிலும் சரி கடைசியில் காதலனிடம் வெடித்து அழுவதிலும் சரி... காட்சிக்கு காட்சி நவரசங்களை திரையில் இறைத்து ரசிகர்களின் நெஞ்சங்களை வருடிக் சென்றார் ராஷ்மிகா. அதிலும் நாயகனை கண்களாலேயே அதட்டும் காட்சிகள் எல்லாம் ஹைக்கூக்கள். 

படத்தின் ஹைலைட்டே ‘இன்கேம் இன்கேம் இன்கேம் காவாலே’ என்ற அந்த மேஜிக் பாடல்தான். எத்தனை முறை கேட்டாலும் தித்திக்கும் தேனமுதம், திகட்டாத தெள்ளமுதம். தெலுங்கு வரிகளிலான இப்பாடலை அர்த்தம் புரியாவிட்டாலும் தமிழ் ரசிகர்கள் கொண்டாடி தீர்த்ததற்கு ஒரே காரணம்தான், ராஷ்மிகாவின் அந்த க்யூட் எக்ஸ்பிரஷன்ஸ். காதல் சொட்ட சொட்ட பாடி நம்மையும் காதல் வயப்பட வைத்திருப்பார் பாடகர் சித் ஸ்ரீராம். சில மாடர்ன் பெண்கள் ராஷ்மிகா பாணியில் சேலை அணிந்துகொண்டு, ‘ததிகினா தகாஜனு ததிகினா தகாஜனு’ என்கிற அந்த பி.ஜி.எம்.மை ஒலிக்கவிட்டு அலட்டல் செய்த வீடியோக்கள், சமூக வலைத்தளங்களை கலக்கிய வைரல்கள். 

விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா இடையேயான கெமிஸ்ட்ரி ரசிகர்களை வெகுவாக ஈர்க்கவே, இருவரின் காம்பினேஷனில் அடுத்து உருவானதுதான் ‘டியர் காம்ரேட்’. ராஷ்மிகா வழக்கம்போல் தனக்கே உரிய அழகு முகபாவனைகளும் துறுதுறு நடிப்பும் கலந்து அசரடித்தார். ராஷ்மிகா என்ட்ரி ஆகும் காட்சிகளுக்கு ரசிகர்களின் விசில் சத்தம் காதை கிழித்தது. கிரிக்கெட் வீராங்கனையாக, காதலியாக, வருத்தங்களையும் வலிகளையும் சுமக்கும் பாதிக்கப்பட்ட பெண்ணாக என்று எல்லா கோணங்களிலும் வெகுநிறைவாக நடிப்பை வழங்கி, ரசிகர்களின் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்தார். நடித்த இரண்டாவது படத்திலேயே அதுவும் ‘டப்’ படத்தில் ஒரு நாயகிக்கு கிடைத்திருக்கக்கூடிய இத்தகைய வரவேற்பு வேறு யாருக்கும் கிடைக்காத பாக்கியம். ஒவ்வொரு படத்திலும் ராஷ்மிகாவுக்கு ரசிகர் பட்டாளம் கூடிக்கொண்டே செல்கிறது

‘கீதா கோவிந்தம்’, ‘டியர் காம்ரேட்’ இரண்டு படங்களுமே ராஷ்மிகாவின் நடிப்புக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைக்களங்கள். திரையில் அழகு வழியும் பொம்மையாக அல்லாமல், கில்லி அடிக்கும் அம்மணியாக தோன்றுவதையே ராஷ்மிகா விரும்புகிறார் என்பதையே அவருடைய படத்தேர்வுகள் காட்டுகின்றன. 

image

‘’வழக்கமான மசாலாப் படங்களில் நடித்து மக்களின் நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை ஒரு படத்திற்கு ஹீரோ போன்றே ஹீரோயினும் முக்கியம். விறுவிறுவென்று மேலே சென்று பின் உடனே வீழக் கூடாது இல்லையா? அதனால் ஒவ்வொரு படத்தையும் கவனமாக ஒப்புக்கொண்டு அவற்றிலிருந்து கற்க முயல்கிறேன்’’ என அவரே ஒப்புக் கொண்டுள்ளார்.

எல்லோருக்குள்ளும் ஒரு தொலைந்து போன காதல் இருக்கும். இதற்கு ராஷ்மிகாவும் விதிவிலக்கானவர் அல்ல. ராஷ்மிகாவுக்கு, தான் அறிமுகமான தெலுங்கு படத்தில் ஜோடியாக நடித்த ரக்ஷித் ஷெட்டி உடன் காதல் மலர்ந்தது. காதல் கைக்கூடிய பிறகு திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்து இருவருக்கும் நிச்சயதார்த்தம் ஆனது. இருவருமே திரைத்துறையில் பிரபலமாகாத காலக்கட்டம் அது. அதனால் ஓரளவு சாதித்த பின்னர் திருமணம் வைத்துக் கொள்ளலாம் என இருவரும் முடிவெடுத்து இரண்டாண்டுகள் ‘டெட்லைன்’ நிர்ணயித்துக் கொண்டனர். 

இரண்டாண்டுகள் நிறைவடைந்தது. ராஷ்மிகா இப்போது தென்னிந்திய திரையுலகில் முன்னணி நட்சத்திரம். ரக்ஷித் ஷெட்டியின் கரியரில் சொல்லிக்கொள்ளும்படி முன்னேற்றம் இல்லை. இச்சூழலில் சமீபத்தில் திருமண திட்டத்தை ரத்து செய்துவிட்டு, ரக்ஷித் ஷெட்டி உடனான ரிலேஷன்ஷிப்பிலிருந்து வெளியேறினார் ராஷ்மிகா. ‘பட கமிட்மென்ட்ஸ் நிறைய இருக்கு. திருமணத்துக்கு என்னால் நேரம் ஒதுக்க முடியல’ என ‘சிம்பிள்’ காரணம் சொல்லி கடந்துபோனார்.   

இந்நிகழ்வையொட்டி ஒருபுறம், ‘ராஷ்மிகா ஒரு சுயநலவாதி’ என அவர் மீது  விமர்சனக் கணைகளை ஏவினார்கள் வெறுப்பாளர்கள். மறுபுறம், ராஷ்மிகாவின் தனிப்பட்ட முடிவை  மதிக்க வேண்டும் என ராஷ்மிகாவுக்காக ஆதரவுக் குரல் எழுப்பினர் அவருடைய ரசிகர்கள். 

கதாநாயகிகளின் தனிப்பட்ட வாழ்க்கையைச் சுற்றி சர்ச்சைகளும், விமர்சனங்களும் சுழல்வது சகஜம்தானே. அதனால் ராஷ்மிகா அதற்கெல்லாம் செவிசாய்க்காமல் நதிபோல ஓடிக்கொண்டிருக்கிறார். 

image

இதுவரை தெலுங்கு டப்பிங் படங்கள் மூலமாகவே தமிழ் ரசிகர்களை கவனிக்க வைத்த ராஷ்மிகா,  முதன்முதலாக இப்போதுதான் நேரடி தமிழ்ப் படத்தில் ‘கமிட்’ ஆகியுள்ளார். ‘சுல்தான்’ என்னும் படத்தில் கார்த்திக்க்கு  ஜோடியாக நடித்து வருகிறார். கார்த்திக் மற்றும் ராஷ்மிகா இருவருமே தரமான கதைக்களங்களை தேர்வு செய்து நடிப்பவர்கள். இதனால் ‘சுல்தான்’ படம் வேற லெவலில் இருக்கும் என்று அதீத எதிர்பார்ப்பில் இருக்கின்றனர் ரசிகர்கள்.

நல்வரவு ராஷ்மிகா மந்தனா!

loading...

Advertisement

Advertisement

Advertisement